என் அன்புக்குரிய தோழர், இணையர் பலராமன் என் வாழ்வின் ஆதாரம். ராணுவத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் பணிபுரிந்துவருகிறார். அவர் ஆறு மாதத்துக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவார். மகன், மகள் படிப்பு தடைபடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. கட்டுப்பாடு மிக்க அதிகாரியான அவர், எனக்கு அம்மா இல்லாத குறையைப் போக்கும் தாய். கோபம் என்றால் என்ன என்பதுபோல் எப்போதும் அமைதியாக, புன்னகையுடனே இருப்பார். வீட்டில் சமையல் செய்யும் போது அவரும் எனக்கு உதவியாகச் சமையல் வேலைகளில் ஈடுபடுவார். பட்டதாரியான அவர் என்னை முனைவர் படிப்பு படிக்கவைத்து ஊக்கப்படுத்திவருகிறார்.
என் ஒவ்வொரு செயலுக்கும் அவரே கிரியா ஊக்கியாக இருந்து என்னை இயக்குகிறார். அவரது ஊக்கத்தின் காரணமாக நான் இதுவரை ஆறு புத்தகங்கள், இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறேன்.
நான் ஒரு கவிஞராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும் திகழ்வதற்கும் அவரின் உற்சாக உந்துசக்தியே காரணம். எப்போதும் என் மேல் அன்பும், குழந்தைகள் மீது பாசமும் கொண்ட என்னவர் எனக்குக் கிடைத்த பொக்கிஷம். இன்று நான் பன்முகப் பெண்ணாகத் திகழ அவரே காரணம்.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |