பெண் இன்று

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: வீடியோ எடுங்க விளம்பரம் செய்யுங்க

காம்கேர் கே.புவனேஸ்வரி

இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அலுவலகத்தில் உங்கள் தயாரிப்புகள்/பணிகள்/திறமைகள்/படைப்புகள் ஆகியவற்றை வீடியோ வடிவில் இலவசமாக விளம்பரப்படுத்துவதில் யூடியூப் (Youtube) பெரும்பங்கு வகிக்கிறது. டிவி விளம்பரங்களுக்கு இணையாக யூடியூப் விளம்பரங்களைக் கருதலாம். ஸ்மார்ட் போன் மூலம் எடுத்த வீடியோவைக் கொண்டே விளம்பரம் செய்யமுடியும்.

விளம்பரம் எளிது

நீங்கள் விளம்பரப்படுத்த நினைப்பதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவேற்றம் (Upload) செய்தால், உங்கள் வீடியோவில் உள்ள உள்ளடக்கத்துக்கு ஏற்ப பார்வையாளர்கள் கிடைப்பார்கள். வீடியோவில் உள்ள தகவல்கள் சுவாரஸ்யமாகவும் ஈர்க்கும் விதமாகவும் இருந்தால் உங்கள் தயாரிப்புகள் மீது தானாகவே கவனம் செல்லும். விற்பனையும் விரிவுபடுத்தலும் தானாகவே நடைபெறும்.

தொலைக்காட்சியில் வெளிவரும் விளம்பரங்கள் இரண்டு வகை. முதல்வகை நிகழ்ச்சிகளுக்கு இடையே வருபவை. இரண்டாவது புடவை, நகைகள், வீடு துடைப்பான், சப்பாத்தி மேக்கர், காய்கறி நறுக்கும் உபகரணங்கள் போன்றவற்றைச் செயல்முறை விளக்கத்தோடு தனியாக விளம்பரப்படுத்துவார்கள். இவை விளம்பரத்துக்காவே இயங்கும் தொலைக்காட்சிகள்.

இதுபோல நீங்களும் உங்கள் தயாரிப்புகளைச் செயல்முறை விளக்கத்தோடு வீடியோவாக எடுத்து, யூடியூபில் விளம்பரப்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்கள் கைவினைப் பொருட்கள் தயாரிப்பவராக இருந்தால் அவற்றை எல்லாக் கோணங்களிலும் படம்பிடித்து, அவை குறித்த சிறப்புகளை விவரித்து வீடியோ எடுக்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே வீடியோ எடுக்கலாம். நீங்களே உங்கள் தயாரிப்புகளுக்கு மாடலாக இருந்து செயல்முறையை விவரிக்கும்போது, தெளிவான குறிப்புகள், அமைதியான அறை, வீடியோ எடுப்பதற்கு ஒருவர் அவசியம்.

நீங்கள் செய்கிற தொழில் விரிவடையும்போது பிரத்யேகமாக நீங்களே ஒரு வீடியோ கேமரா வாங்கி, உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தலாம். ஓரளவு பிரபல மாடல்களை வைத்துச் சற்றே பெரிய அளவில் வீடியோ விளம்பரங்களைத் தயாரிக்கலாம். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இணையாக யூடியூப் வீடியோக்கள் இன்று பிரபலமாகிவருகின்றன. ஸ்மார்ட் போன், வீடியோ கேமிரா வீடியோக்களைச் சுலபமாக யூடியூபில் பதிவேற்ற முடியும்.

வீடியோ ஃபார்மேட்கள்

உங்கள் தயாரிப்புகளுக்கான வீடியோ MOV, MP4 (MPEG4), AVI, WMV, FLV, 3GP, MPEGPS, WebM போன்ற ஃபைல் ஃபார்மேட்களில் இருந்தால் யூடியூபில் பதிவேற்றம் செய்ய முடியும். ஸ்மார்ட் போன் மூலமாகவோ வீடியோ கேமிரா மூலமாகவே நீங்கள் எடுக்கிற வீடியோக்கள் இந்த வகையில் ஏதேனும் ஒன்றில்தான் இருக்கும். அப்படி இல்லாமல் வேறு ஃபார்மேட்டில் இருந்தால் அவற்றை மாற்றுவதற்கு ஏராளமான இணையதளங்களும் மென்பொருட்களும் உள்ளன. போட்டோ ஸ்டூடியோக்களில்கூட வீடியோ ஃபைல்களைத் தேவையான ஃபார்மேட்டில் மாற்றித்தருவார்கள்.

யூடியூப் கணக்கு

உங்கள் ஜிமெயில் முகவரியையே உங்கள் யூடியூபுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். www.youtube.com என்ற வெப்சைட்டில் உங்களுக்கான கணக்கை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, வீடியோக்களைப் பதிவேற்றலாம். www.youtube.com என்ற வெப்சைட்டில் நுழைந்தபிறகு, Sign In பட்டனை க்ளிக் செய்து, இதில் உங்கள் ஜிமெயில் முகவரி மூலம் சைன்-இன் செய்துகொள்ளலாம்.

எப்படிப் பதிவேற்றுவது?

யூடியூபில் சைன்-இன் செய்த பிறகு Upload என்ற பட்டனை க்ளிக் செய்து, Select Files to Upload க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் கணினியில் உள்ள வீடியோ ஃபைலை க்ளிக் செய்தால், அந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றமாகும். வீடியோ ஃபைலின் அளவுக்கு ஏற்ப பதிவேற்ற நேரமும் வேறுபடும். யூடியூபில் பதிவேற்றம் ஆன ஃபைல் Videos என்ற தலைப்பின் கீழ் வரும். அதை க்ளிக் செய்தால் வீடியோ இயங்க ஆரம்பிக்கும்.

இதை கவனிக்க வேண்டும்

நாம் பதிவேற்றும் வீடியோக்கள் சிறந்த நோக்கம் கொண்டவையாகவும் பிறருக்குக் குந்தகம் விளைவிக்காதவையாகவும் இருக்க வேண்டும். நாமே உருவாக்கிய வீடியோக்களாக இருப்பது அவசியம். மற்றவர்களுடைய வீடியோக்களை அவர்களிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்தால், யூடியூப் முன்னறிவிப்பின்றி அவற்றை நம் கணக்கிலிருந்து நீக்கிவிடும். திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்துவரும் யூடியூப் கணக்கையும் முடக்கிவிடும்.

உங்கள் பெயரில் யூடியூப் சேனல் உருவாக்குவது, லைசென்ஸ் பெறுவது, வீடியோக்கள் மூலம் சம்பாதிப்பது ஆகியவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

SCROLL FOR NEXT