பெண் இன்று

சென்னைக்கு வருமா பெண்கள் டாக்ஸி?

ஆர்.ஜெய்குமார்

சமீபத்தில் நடந்த திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடல் நடைபெற்ற அரங்குகளுக்குள் சென்று வர தனியாக ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இது இந்தியாவின் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சினிமா ஆர்வலர்களுக்கு வசதியாக இருந்தது. அதுபோல அந்த வளாகங்களில் அடிக்கடி தென்பட்ட பிங்க் நிற மாருதி டாக்ஸி அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தப் பிங்க் நிற டாக்ஸியின் பெயர் 'ஷி டாக்ஸி ' (She taxi). அந்த டாக்ஸிகள் பெண்களுக்காக இயக்கப்பட்டன. அவற்றை ஓட்டிவந்ததும் பெண்கள்தான். திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பெண்களுக்காக இந்த டாக்ஸி சேவை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்கு சர்வதேசப் படங்கள் மட்டுமல்லாமல் இந்த டாக்ஸிகளும் பேசு பொருளாகின.

சில தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து இந்த டாக்ஸிகளை சென்ற மாதம் கேரள அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவை தொடங்கப்பட்டச் சில நாட்களிலேயே இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இதையடுத்து இந்தச் சேவையை 5இல் இருந்து 25ஆக மாற்ற நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலேயே 24 மணி நேரச் சேவை கொண்ட பெண்கள் டாக்ஸி இதுதான். பெண்களுக்கான பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இந்த டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளதால் இது புதிய தொழில்நுட்பம் மூலம் முழுமையாகக் கண்காணிக்கப்படும். ஆபத்து நேரிடும்போது உடனடியாகத் தகவல் தெரிவிக்க முடியும். பாதுகாப்பைத் தாண்டியும் இம்மாதிரியான டாக்ஸி பெண்களுக்கு ஒரு சுதந்திர உணர்வைத் தரும். அந்தத் தனிச் சுதந்திரத்தைச் சென்னைப் பெண்களுக்கும் கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT