சாதிக்க வேண்டும் என்ற சிறு தூண்டுதலே ஒருவரை எந்த வயதிலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைத்துவிடும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எர்னெஸ்டைன் ஷெப்பர்டை உலகின் வயதான உடல்கட்டு வீராங்கனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 80 வயது எர்னெஸ்டைன் ஷெப்பர்ட் தினமும் அதிகாலை இரண்டரை மணிக்கு எழுந்துவிடுகிறார். முட்டைகளையும் வாதுமைப் பருப்புகளையும் எடுத்துக் கொள்கிறார். தலையில் விளக்கைக் கட்டிக் கொண்டு, பத்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு மெது ஓட்டம் (ஜாகிங்) செய்துகொண்டே சென்றுவிடுகிறார்.
கடினமான கருவிகளை மிக எளிதாகக் கையாண்டு, உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். இவருக்குப் பிடித்த நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் போல் உடற்பயிற்சிகளுக்கு இடையே முட்டைகளைக் குடிக்கிறார்.
“என் எல்லா செயல்களுக்கும் அன்புத் தங்கை வெல்வட்தான் காரணம். எங்கள் இருவருடைய எண்ணங்களும் செயல்களும் ஒன்றாகவே இருக்கும். ஒருநாள், “நாம் ஏன் இப்படித் துரித உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு சோம்பேறிகளாக இருக்கிறோம்?” என்று கேட்டவள், உடற்பயிற்சி செய்யும் ஆலோசனையைச் சொன்னாள். அன்று முதல் நாங்கள் இருவரும் ஒன்றாக உடற்பயிற்சி செய்துவந்தோம். ஆண்களைப் போல உடல் கட்டுமானராக (பாடி பில்டர்) நாமும் மாறி, கின்னஸில் இடம்பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.
ஆனால் உடல்நலக் குறைவால் அவள் மறைந்துவிட்டாள். அவளின் பிரிவு எனக்குத் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஒருநாள் என் கனவில் வந்த தங்கை, “ஏன் இப்படி இருக்கிறாய்? நம் லட்சியத்தைச் செயல்படுத்த உடனே எழுந்து ஓடு” என்றாள். அன்று முதல் இன்றுவரை நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்கிறார் எர்னெஸ்டைன் ஷெப்பர்ட்.
கடினமாகப் பயிற்சி செய்து உடல்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, எட்டாவது இடத்தைப் பிடித்தார். ஒரு மாதம் கழித்து அவருடைய பயிற்சியாளர் அழைத்து, உலகின் வயதான முதல் பெண் உடற்கட்டு வீராங்கனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகச் சொன்னார்! எர்னெஸ்டைன் ஷெப்பர்டின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
“என் தங்கையின் லட்சியத்தை நிறைவேற்றிவிட்டேன் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி! அனைத்தையும் மகிழ்ச்சியாகச் செய்துவருகிறேன். ஓய்வு என்பது நாம் விரும்பும் செயலைச் செய்வதுதானே தவிர, மூலையில் முடங்கிக் கிடப்பது இல்லை” என்று சொல்லும் எர்னெஸ்டைன் ஷெப்பர்ட், உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார்.