பெண் இன்று

நம்பிக்கை நாயகிகள்

எஸ். சுஜாதா

நீடித்த வாழ்நாள்

தெற்கு கரோலினாவில் வசித்தவர் நான்னி சூ நீல். 103 வயது வரை வாழ்ந்த நான்னி, முதுமையின் காரணமாக 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர். மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு 59 ஆண்டுகள் நலமோடு வாழ்ந்திருக்கிறார். இவர் அக்டோபர் மாதம் பிறந்தவர். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமும் அக்டோபரில் கடைப்பிடிக்கப்படுவதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான்னி தன்னுடைய இறுதிக் காலம்வரை கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார்!

மீண்ட சொர்க்கம்

சிந்தியா எல்லன் நிக்ஸன் பிரபலமான அமெரிக்க நடிகை. எம்மி, கிராமி, டோனி விருதுகளை வாங்கிக் குவித்தவர். 2006-ம் ஆண்டு வழக்கமாக மேமோகிராம் பரிசோதனை செய்தபோது, மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. முதலில் நோயைப் பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்ற முடிவில் இருந்தார் சிந்தியா. ஆனால்

2008-ம் ஆண்டு குட்மார்னிங் அமெரிக்கா தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டதாகக் கூறினார். இன்று வரை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு செயல்பாட்டாளராக இருந்து வருகிறார்.

தொடரும் பயணம்

பாடகி, பாடலாசிரியர், நடிகை, எழுத்தாளர், தொழிலதிபர் என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி மினாக். மடோனாவுக்குப் பிறகு 1980, 1990, 2000-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இசை வரிசையில் தனிப்பாடல்கள் மூலம் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஒரே பாடகியும் இவர்தான்! 2005-ம் ஆண்டு இவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவருடைய இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஊடகங்கள் மினாக்கைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் அதிக அக்கறை காட்டின. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தான் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டதைப் பகிர்ந்துகொண்டார். சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் த ஷோகேர்ள் பிரின்சஸ் என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதி, பின்னர் வெளியிட்டார். கைலி மினாக் புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு, பெண்கள் மத்தியில் ஏராளமாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது!​

எப்போதும் நலமே

பிரபல ஹாலிவுட் நடிகையும் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் மனைவியுமான நான்சி ரீகன் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர். இவருக்கு 1987-ம் ஆண்டு மார்பகப் புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டு, உடனே அறுவை சிகிச்சை மூலம் மார்பகம் நீக்கப்பட்டது. 93 வயதான நான்சி, 37 ஆண்டுகளாகியும் நலமுடன் வாழ்கிறார்!

SCROLL FOR NEXT