பெண் இன்று

பெண் நூலகம்: மனதைப் பக்குவப்படுத்தும் எழுத்து!

எல்.ரேணுகா தேவி

சமூக மாற்றம் வேண்டும் என்றால் மனித மனங்களில் மாற்றம் உருவாக வேண்டும் என்பதைத் தன் எழுத்துகள் மூலம் வலியுறுத்தியவர் ஆர்.சூடாமணி.

சாகித்ய அகாடமி சார்பில் வெளியாகி வரும் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ புத்தக வரிசையில் ஆர்.சூடாமணி குறித்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் கே. பாரதி. சூடாமணியின் வாழ்வையும் எழுத்தையும் ‘அர்ப்பணமாக ஒரு வாழ்வு’, ‘மானுட மேன்மைகள்’, ‘உளவியல் நுட்பங்கள்’, ‘பெண்ணிலைப் பார்வை’, ‘நாவல்கள் குறுநாவல்கள்’ ஆகிய ஐந்து தலைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்.

சூடாமணியின் குடும்பச் சூழ்நிலை, இளமைக் காலம், நெருங்கிப் பழகியவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் என ஒவ்வொன்றும் சுவாரசியமாக இருக்கின்றன. சூடாமணி சிறுமியாக இருந்தபோது பெரியம்மை தாக்கி, எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அம்மா கனகவல்லி. அவரின் மென் உணர்வுகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாத்தவர். தன்னுடைய பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி கொடுத்தார் கனகவல்லி. சூடாமணிக்குச் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரையப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.

ஆந்திர மகிள சபாவில் கண்காட்சி நடத்தும் அளவுக்குச் சூடாமணியின் ஓவியங்கள் சிறப்பாக இருந்திருக்கின்றன. தன்னுடைய முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாகச் சூடாமணி குறிப்பிடுவது அவரின் தாயாரைத்தான். எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைத் தன் அம்மா மூலம் கற்றுக்கொண்டதாக சூடாமணி அடிக்கடி நண்பர்களிடம் சொல்வாராம். எப்போதும் வெள்ளைப் புடவை அணிவதைத் தன் அடையாளமாக மாற்றிக்கொண்டவர்.

மற்றவர்கள் தங்கள் திறமைகளைப் பற்றிச் சொல்லும்போது, எனக்கும் இது தெரியும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார். ஓவியர் எஸ்.ராஜம், “சூடாமணிக்கு ஓவியம் வரையத் தெரியும் என்பதைப் பல வருடங்களுக்குப் பின்புதான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் பல முறை அவரிடம் ஓவியம் குறித்துப் பேசிய போது ஒருமுறைகூட அவர் எனக்கு ஓவியம் வரையத் தெரியும் என்று சொன்னது கிடையாது. சூடாமணி எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாதவர்” என்கிறார்.

சூடாமணியின் சிறுகதைகளைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும் வாசகர்கள், அந்தக் கதைகளைத் தேடிப் படிக்கும் அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார் பாரதி. விஜயா, ஒரு மாலைப்பொழுதின் தோழிகள், பித்தன் பாடுகிறான், வீணையின் எதிரொலி, இறுக மூடிய கதவுகள் ஆகிய கதைகள் மனித மனங்களை நம் கண் முன்னே காட்டுகின்றன என்கிறார் பாரதி. குறிப்பாக, குழந்தைகளின் மனநிலையை விவரிக்கும் உளவியல் கதைகள், பெரியவர்கள் குழந்தைகளுக்குச் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன என்பதையும் பாரதி கவனப்படுத்துகிறார். ‘தனிமை தளிர்’, ‘இரண்டாவது அப்பா’,‘உயர்த்திய விரல்’, ‘பொழுது போக’ போன்ற கதைகள் வாசகர்களின் மனத்தில் நிலையாகப் பதிந்துவிடக்கூடியவை என்கிறார்.

‘புவனாவும் வியாழன் கிரகமும்’, ‘அக்கா’, ‘நாகலிங்க மரம்’, ‘ஒரு நாளின் 24 மணி நேரம்’, ‘மாஜி மனைவி’ ஆகிய கதைகளில் சூடாமணி பெண்களின் உளவியலைப் புரிந்துகொண்டிருக்கும் விதத்தை பாரதி விளக்குகிறார். திருமணத்தில் விருப்பம் இல்லாத சூடாமணி, தன்னுடைய கதைகளில் திருமணமான பெண்களின் நிலையைத் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். சூடாமணியின் எழுத்துகளைப் படிப்பதன் மூலம் நம் மனம் மாற்றம் அடைவதை நம்மால் நிச்சயம் உணர முடியும் என்பதை பாரதி எழுதியுள்ள இந்த நூல் உணர்த்துகிறது.

இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஆர்.சூடாமணி
கே. பாரதி
சாகித்ய அகாடமி பதிப்பகம் | விலை ரூ.50/-
தொடர்புக்கு: குணா பில்டிங்க்ஸ், 443, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18. தொலைபேசி: 044-24311741

SCROLL FOR NEXT