சாக்ஸபோனில் கர்நாடக இசையை வாசிக்கும் ஒரே இந்தியப் பெண் கலைஞர் என்ற அடிப்படையில் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் சாக்ஸபோன் லாவண்யா.
காற்று வாத்தியங்களில் வாசிப்பதற்குக் கடினமான மேற்கத்திய வாத்தியம் சாக்ஸபோன். கர்நாடக இசைக்கே உரிய கமகங்களை இந்த வாத்தியத்தில் கொண்டுவருவது சாமான்யமான காரியம் இல்லை. நம் தலைமுறையில் இதைக் கைவசப்படுத்திப் புகழ்பெற்றவர் டாக்டர் கதிரி கோபால்நாத். அவரிடம் தன் 15வது வயதிலிருந்தே சாக்ஸபோன் இசைப் பயிற்சி பெறத் தொடங்கியவர் லாவண்யா. அவர் 6 வயதிலிருந்தே வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் வயலின் இசைக்கவும் கற்றுக் கொண்டிருந்தார்.
இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்திலிருந்து வந்தவர். இவருடைய அப்பா உட்பட, இவர்களுடைய குடும்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட மிருதங்க வித்வான்கள் இருந்திருக்கின்றனர். இவருடைய பாட்டனார் மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்திருக்கிறார்.
சாக்ஸபோன் லாவண்யா என்று இன்றைக்கு அழைக்கப்படும் அளவுக்குப் புகழுடன் விளங்கும் இவர் ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசைக் கலைஞர்களுடனும் இணைந்து ஜுகல்பந்தி, ப்யூஷன் நிகழ்ச்சிகளையும் வழங்குகிறார். இந்தியாவின் முக்கியமான சபாக்களிலும் உலக அளவில் தி லிட்டில் சில்லி இசைத் திருவிழா, பா இசை விழா, நாட்டிங்ஹாமில் நடக்கும் ‘ஒரு நகரம் ஒரு உலகம்’ இசை விழாக்களில் தன்னுடைய இசைப் பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறார். 17 நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். இங்கிலாந்தில் மேற்கத்திய வாத்தியமான சாக்ஸபோனை கர்நாடக இசைக்கு எடுத்தாண்டிருப்பதைக் குறித்த கருத்து விளக்கத்தை வழங்கியிருக்கிறார். கர்நாடக அரசின் ராஜ்யோத்ஸவா விருதைப் பெற்றிருக்கிறார்.
திரையில் பின்னணி இசைக்கும் வாய்ப்பை முதலில் இவருக்கு வழங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரஜினி நடித்த ‘சிவாஜி’ திரைப்படத்தில், தன்னுடைய மொட்டைத் தலையில் ரஜினி தாளம் எழுப்பி "என் பெயர் எம்.ஜி.ஆர்." என்று சொல்லும்போதெல்லாம், பின்னணியில் சன்னமாக ஒலிக்கும் சாக்ஸபோன் இசை, லாவண்யாவினுடையதுதான்.