ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் அருகேயுள்ள கிராமத்தில் மரங்களை வெட்டுவதற்கு எதிராகக் குரல் கொடுத்த 20 வயது லலிதா மார்ச் 26-ம் தேதி தீ வைத்துக் கொல்லப்பட்டார். அவரைத் தீவைத்துக் கொன்ற கும்பலில் கிராமத் தலைவர் ரன்வீர் சிங்கும், வருவாய்த் துறை அதிகாரி ஓம் பிரகாஷூம் இருந்ததாகக் காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. மரங்களையும் வனங்களையும் பாதுகாப்பதில் இந்தியா போன்ற நாடுகளில் ஆண்களைவிடப் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையில், இதுபோன்ற அதிர்ச்சிகரமான படுகொலை இயற்கை ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தா ஷெர்கில்லைக் கொண்டாடும் பெண் ஓவியர்கள்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் நுண்கலைக் கலைஞர்களான பாக்கி சென், சமீரா போஸ் ஆகிய இருவரும் இந்தியாவின் நெசவுக் கலையை உலகறியச் செய்யும் வண்ணமயமான திட்டத்தை உருவாக்கியுள்ளானர். இந்தியாவின் ப்ரைடா காலோ என்று கருதப்படும் ஓவியரான அமிர்தா ஷெர்கிலின் சுய உருவப்படங்களைப் போன்று பனாரஸ் பட்டு, கைவினை ஜமுக்காளங்கள் மற்றும் துணி வகைகளைப் பின்னணியில் வைத்து பெண்களின் புகைப்படங்களை எடுத்து அவர்கள் காட்சிப்படுத்த உள்ளனர். அமிர்தா ஷெர்கில் அணிந்திருக்கும் சென்ற நூற்றாண்டு காலத்தைய உடைகளைத் தற்காலப் பெண்கள் அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்திய ஜவுளிக்கலையின் மகத்துவத்தை இந்தப் புகைப்படங்கள் உணர்த்தும் என்று இருவரும் தெரிவித்துள்ளனர். செவ்வியல் ஓவியங்களை மீண்டும் மறுபடைப்பு செய்து, அதற்கு ஆண் மாடல்களை வைத்துப் படமெடுக்கும் திட்டமும் இவர்களிடம் உள்ளது.
கைதுதான் மறுவாழ்வா?
பெங்களூரு சாலைகளில் திருநங்கைகள் யாரும் யாசகம் கேட்டால், அவர்களைக் கைது செய்யப்போவதாக கர்நாடக மாநில அரசு மார்ச் 27-ம் தேதி அறிவித்தது. அந்த நடவடிக்கையை அவர்களுக்கான ‘மறுவாழ்வு’ என்றும் கூறியுள்ளது. அதேநேரம், திருநங்கைகளின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் என்னவென்பதை சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சொல்லவேயில்லை. தற்போதைக்குப் பிச்சையெடுக்கும் திருநங்கைகளைக் கைது செய்த பின்னர், கடுமையாக அச்சுறுத்தி அனுப்புவது தொடர்பாக கன்னட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கான மறுவாழ்வுக்கு இல்லங்கள் அமைக்கப்படுவதற்கான திட்டம்கூட இல்லாத நிலையில், ஏன் இந்த அடக்குமுறை நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாதவிடாய் தூய்மையற்றதா?
மாதவிடாய் நாட்களில் பெண்கள், ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் மாதவிடாய் தூய்மையற்றது என்றும் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவரான எம்.எம். ஹசன் கூறியது, கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊடகவியல் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பேசும்போது, இக்கருத்தை அவர் கூறினார். அவருடைய கருத்து ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, தூய்மையற்றது தொடர்பான கருத்து தன்னுடையதல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மாதவிடாய், தூய்மை தொடர்பான கருத்துகள் கேரள சமூகத்தில் ஆழ வேரூன்றியவை. அதை முன்னிட்டே 10 வயது முதல் 50 வயதுவரையிலான பெண்கள் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆலய நுழைவு தொடர்பாக பெண்கள் போராடிவரும் பின்னணியில், இக்கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.