தங்கல் திரைப்படத்தில் அமீர்கான் எப்படித் தன் மகள்களை சர்வதேச அளவில் ஜெயிக்க வைக்க முயற்சி செய்தாரோ, அதேபோல் தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களை சர்வதேச அரங்கில் ஜெயிக்க வைப்பதே லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறார் தடகளப் பயிற்சியாளர் இந்திரா.
விளையாட்டைத் தன் வாழ்க்கையாகக் கொண்டு, நாட்டுக்காகப் பதக்கங்கள் வாங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் லட்சியமாக இருக்கிறது. தன்னிடம் பயிற்சி பெற்றுவரும் தடகள வீரர்களின் கனவை மெய்ப்பிக்க உறுதுணையாக இருக்கிறார் இந்திரா. இவரது சொந்த ஊர் ஊட்டி. கணவரும் மகனும் அங்கேயிருக்க, விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகச் சென்னை வந்துவிட்டார். 1982 -1985 ஆண்டு வரை தமிழ்நாட்டின் மாநில கோகோ குழுவின் கேப்டனாக இருந்திருக்கிறார். தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
“எனக்கு சிறு வயது முதலே தடகள விளையாட்டில் ஆர்வம் அதிகம். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். குடும்பச் சூழல் காரணமாகத் தடகளப் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களைக்கூட வாங்க முடியவில்லை. தடகளப் போட்டி களின் போது பயன்படுத்தப்படும் ஸ்பைக் ஷு வாங்குவது பெரிய கனவாக இருந்தது. என்னுடைய தாத்தா வாங்கிக் கொடுத்த ஸ்பைக் ஷுவை நான்கு ஆண்டு களுக்கு மேலாகப் பத்திரமாக வைத்திருந்தேன். பயிற்சியாளர் இப்ராகிம்தான் என் திறமையை அடையாளம் கண்டு, பல போட்டிகளில் வெற்றிபெற உறுதுணையாக இருந்தார். அவரது ஊக்குவிப்பும் பயிற்சியும் இல்லாமல் நான் இன்று ஒரு தடகளப் பயிற்சியாளராக வந்திருக்க முடியாது. எனக்குள்ளே இருந்த திறமையை வெளிக்கொண்டுவந்த இப்ராகிம் போல் நானும் ஒரு பயிற்சியாளராக வேண்டும் என்று தீர்மானித்தேன்” என்கிறார் இந்திரா.
பட்டப் படிப்புக்குப் பிறகு, பெங்களூரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டுப் பயிற்சி அகாடமியில் தடகளப் பயிற்சியாளர் படிப்பை முடித்தார். பிறகு ஊட்டியில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக சில காலம் பணியாற்றினார் .
“அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வந்தேன். 17 வருட முயற்சிக்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் விளையாட்டை ஊக்குவிக்கப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. எனக்கும் அதில் வேலை கிடைத்தது. தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தடகளப் பயிற்சியளித்துவருகிறேன். பெண் பயிற்சியாளர்களால் என்ன பெரியதாகச் சாதித்துவிட முடியும் என்ற விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். நான் பயிற்சியளித்த மாணவர்கள் இருவர் சமீபத்தில் ஆசிய ஜுனியர் தடகளப் போட்டி களில் பதக்கங்களை வென்றனர். இந்த வெற்றியைத்தான் அவர்களுக்குப் பதிலாகத் தர விரும்பினேன்” என்கிறார் இந்திரா.
ஒரு பயிற்சியாளர் தன்னுடைய மாணவர்களை முழுமையாக நம்ப வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய பயிற்சி யாளர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும். இவரிடம் பயிற்சி எடுத்துவரும் பெரும்பாலான மாணவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எதிர்காலம் தன் கைகளில் உள்ளது என்பதால், மிகவும் பொறுப்புணர்வோடு செயல்பட்டுவருவதாகச் சொல்லும் இந்திரா, ஒரு மாணவரையாவது ஒலிம்பிக் பதக்கம் வாங்க வைத்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்றி வருகிறார்.