பெண் இன்று

கல்வியே விடுதலை தரும்: சாவித்ரிபாய் புலே - 120வது நினைவு தினம்

என்.கெளரி

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவு கூரப்படும் அளவுக்கு சாவித்ரிபாய் போற்றப்படவில்லை சாவித்ரிபாய் புலேவின் 120-வது நினைவு நாள் கடந்த மார்ச் 10-ம் தேதி சென்னையில் அனுசரிக்கப்பட்டது. எம்.ஐ.டி.எஸ். - எத்திராஜ் மகளிர் கல்லூரியின் மகளிர் கல்வி மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘செல், கற்க செல்!’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷனி, “வரலாற்றில் ஆண்கள் தனி அடையாளத்துடன் பதிவுசெய்யப்படுகிறார்கள். ஆனால், பெண் என்பவள் வரலாற்றில் தனி அடையாளத்துடன் அறியப்படுவதில்லை. இவருடைய அம்மா, சகோதரி, மனைவி என்றுதான் பெரும்பாலும் அறியப்படுகிறார். சாவித்ரிபாயும் அப்படித்தான் ஜோதிராவ் புலேவின் மனைவி என்று சொல்லப்படுகிறார். அதை மாற்றி, சாவித்ரிபாய்க்கு வரலாற்றில் இருக்கும் முக்கியத்துவத்தை உணரவைக்கும் நோக்கத்தில்தான் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டது” என்றார்.

சாவித்ரிபாய், சமூக ஒடுக்கு முறைகளையும் அவமானங்களையும் கடந்து எப்படி ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வியறிவைக் கொடுப்பதில் உறுதியாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதை இந்தக் குறும்படம் விளக்குகிறது.

அத்துடன், சாவித்ரிபாய் புலேவை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘மறக்கப்பட்ட ஒரு விடுதலையாளர் - சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையும் போராட்டமும்’ (A Forgotten Liberator – The Life and Struggle of Savitribai Phule) என்ற ஆங்கிலப் புத்தகத்தின் சில அத்தியாயங்களைப் பற்றி கல்லூரி மாணவர்கள் உரையாற்றினார்கள். ராணிமேரி கல்லூரி மாணவிகள் ரஞ்சிதா, ரேணுகாதேவி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி திலகவதி, மாணவர் கணேஷ் உள்ளிட்டோர் இந்தப் புத்தக வாசிப்பில் பங்கேற்றார்கள். மாணவர்களின் இந்த உரையாடலை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ராதா நெறிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் ‘இன்றைய இந்தியாவில் பெண்கள் இயக்கம் - ஒரு தலித் பார்வையிலிருந்து’ என்ற தலைப்பில் உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி ஆக்னெஸ் அமலா, “கல்வியின் மூலமே சமூக நீதியை அடைய முடியும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால், கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி பெரிதாக வெளியே தெரிவதில்லை. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா இயங்கிய அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் நானும் ஈடுபட்டிருக்கிறேன்.

ரோஹித் உள்ளிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்தி லிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது, பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையம், ஊடகங்கள் எனப் பல தரப்பினரிடமும் அந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றோம். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் போராடி போராடிச் சோர்வடைந்து போயிருந்தோம். அந்தச் சூழ்நிலையில்தான் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்த பிறகுதான், ஊடகங்களும் மற்ற அமைப்பினரும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசினார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினையில், ஓர் உயிர் பறிபோனபிறகுதான், அந்தப் பிரச்சினை வெளியே தெரியவருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியின் மீது நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து படிக்க வேண்டும். படிப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஐ.டி.எஸ். இணை பேராசிரியர் டாக்டர் சி. லக்ஷ்மணன் தலைமை வகித்தார். எத்திராஜ் கல்லூரியின் மகளிர் கல்வி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அரங்க மல்லிகா இந்த உரையாடலை நெறிப்படுத்தினார்.

“இன்றைய தலைமுறையினர் பெரியாரையும் அம்பேத்கரையும் எப்படிப் புரிந்துகொள்வது என்ற புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு சாவித்ரிபாய் புலே போன்ற வரலாற்றில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை மீண்டும் மறுஅறிமுகம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடிக்கொண்டிருக் கிறோம். நியாயமாகப் பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்களின் கல்விக்காகப் போராடிய சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடவேண்டும். இன்றைய இளம்பெண்களிடம் ரோல்மாடலாக அறிமுகம் செய்யப்பட வேண்டியவர் சாவித்ரிபாய் புலே” என்று பேசினார் பேராசிரியர் அரங்க மல்லிகா.

SCROLL FOR NEXT