பெண் இன்று

களம் புதிது: அம்மா சொன்ன குறிப்பே சிறந்தது

எல்.மோகன்

விதவிதமான அழகு சாதனங்கள் கொட்டிக்கிடக்கும் காலம் இது. பிறந்த குழந்தை முதல் முதுகு வளைந்த பெரியவர்கள்வரை வயது வேறுபாடு இல்லாமல் பலரும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். அழகு மட்டுமல்ல, நிறத்தை மாற்ற, எடையைக் கூட்ட அல்லது குறைக்க, கூந்தல் நிறத்தை மாற்ற என்று ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமாகத் தைலங்களும் கிரீம்களும் கிடைக்கின்றன. இதுபோன்ற செயற்கைப் பொருட்களைத் தவிர்த்துவிட்டு நம் பாரம்பரிய முறைகளுக்குத் திரும்புவதே பாதுகாப்பானது என்ற கொள்கையோடு செயல்பட்டுவருகிறார்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த மகளிர் குழுவினர்.

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், அதன் சுற்றுப்புறப் பகுதி, நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவிகள் இந்த மகளிர் குழுக்களில் உள்ளனர். மத்திய அரசின் பங்களிப்புடன் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் செயல்பட்டுவரும் அமுதசுரபி மகளிர் கூட்டமைப்பை இதற்கான ஆலோசனைக் களமாகப் பயன்படுத்துகிறார்கள்.

மஞ்சள், தேங்காய் எண்ணெய், வெந்தயம், துளசி, வேம்பு, கற்றாழை, செம்பருத்தி போன்றவற்றுடன் பல்வேறு மூலிகைளைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிற அழகுப் பொருட்களே உண்மையான அழகுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்பதே இந்தக் குழுக்களின் தாரக மந்திரம். செயற்கைப் பொருட்களும் வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகிற அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை டீன்ஏஜ் பெண்களிடம் இவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

அமுதசுரபி கூட்டமைப்பில் இருக்கும் விநாயகா குழுவைச் சேர்ந்த பெண்கள், இயற்கை முறையில் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பதோடு அதற்கான பயிற்சியையும் அளித்துவருகின்றனர்.

“நம் நாட்டுத் தட்பவெப்பத்துக்கு இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும். அலர்ஜி, சருமப் பிரச்சினைகள் போன்றவை நீங்கும். நம் முன்னோர்கள் காலகாலமாகப் பயன்படுத்திவந்த பொருட்களைத்தான் நாங்களும் பயன்படுத்துகிறோம். இது கடினமான வேலை இல்லை. தலைவலியைப் போக்கும் கிரீம், கூந்தல் தலைம், கால் வெடிப்பு, சருமப்

பிரச்சினைகளைப் போக்கும் கிரீம், முகப்பொலிவு கிரீம், குளியல்பொடி ஆகியவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம்” என்கிறார்கள் சுப்புலெட்சுமி, அமுதா, மகேஸ்வரி ஆகிய மூவரும்.

பாரம்பரியமே பாதுகாப்பு

மூலிகையின் வாடை தனித்துத் தெரியாமல் இருப்பதற்காக நறுமணப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். பல்வேறு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று கல்லூரி மாணவிகள், இளம்பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார்கள். உடல் உபாதைகளுக்கான மருந்து, அஜீர அஸ்ட சூரணம், மதிமேக சூரணம், அலுப்பு மருந்து போன்றவற்றையும் தயாரிக்கிறார்கள்.

“நாங்கள் தயாரிக்கிற அனைத்துமே ஒவ்வொருவரும் தங்கள் அம்மாவிடம் கற்ற அழகுக் குறிப்புகளும் ஆரோக்கிய குறிப்புகளும்தான். நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனதை நாம் மறந்துவிட்டோம். ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் நம் பாரம்பரிய முறைக்கு மாறிவருகின்றனர்” என்று சொல்கிறார் சுப்புலெட்சுமி. இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஏதுவாக இணையதளம் வழியாகவும் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள்.

படங்கள்: எல்.மோகன்.

SCROLL FOR NEXT