பெண் இன்று

கோடைக்கு உகந்த ஸுக்னி

ஷங்கர்

சீமைச் சுரைக்காய் எனப்படும் ஸுக்னியின் தாயகம் இத்தாலி. தாவரவியல் ரீதியாக இது கனி என்றாலும், சமையலில் ஒரு காயாகவே, கூட்டு மற்றும் துணைக்கறிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மிக மிகக் குறைவான கலோரி கொண்ட காய்களில் ஸுக்னியும் ஒன்று. 100 கிராம் சாப்பிட்டால் 17 கலோரியே சேரும். கொழுப்பு கிடையாது. இதன் மேல் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் நீங்கும். பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக வினைபுரியக்கூடியது. வெள்ளரியைப் போல சாலட்டாகவே சாப்பிடலாம்.

ஆக்சிஜனேற்றத் தடுப்பு கொண்ட காய் இது. எடை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாராளமாகச் சாப்பிட வேண்டிய காய். மஞ்சள் தோல் கொண்ட ஸுக்னியை உண்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அகலும். வயோதிகம் மற்றும் அது தொடர்பாக ஏற்படும் நோயிலிருந்து உடலைக் காக்கும் வல்லமையுள்ளது.

சீமைச் சுரைக்காயில் போதுமான அளவு வைட்டமின் பி சத்து உள்ளது. வைட்டமின் பி, செல்பிரிப்பு மற்றும் டிஎன்ஏ சேர்க்கைக்குப் பெரிதும் உதவிசெய்யக் கூடியது. கர்ப்பமடைவதற்கு முன்பு சீமைச் சுரைக்காய்களை தாராளமாக உண்டுவந்தால் நல்லது. கருப்பையில் இருக்கும் சிசுவின் நரம்புக்குழாய் குறைபாட்டைத் தவிர்க்க இயலும்.

பொட்டாசியம் நிறைந்த காய் இது. இதயத்துக்கு நலம் பயக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதயப் படபடப்பு குறையும். பி-காம்ப்ளக்ஸ் சத்தை வழங்கும் தயாமின், பைரிடாக்சின், ரிபோஃபிளேவின் மற்றும் இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற தாதுச்சத்துகளும் வளமாகக் கொண்டது சீமைச் சுரைக்காய்.

SCROLL FOR NEXT