அழகான மணிகள், மாலைகள் போன்ற கைவினைப் பொருட்களைக் கற்றுக்கொள்ளப் பலர் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதுண்டு. எந்தப் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாத வசந்தா, கைவினைப் பொருட்கள் செய்வதையே தன்னுடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கருதிவருகிறார்.
பாசி மணி, முத்து மாலை, கல் மணி, ஐயப்பன் மாலை, ஸ்படிக மணி மாலை, வண்ணக் கொலுசு, மோதிரம், வண்ணக் கல் டாலர், காப்பு போன்ற ஏராளமான கைவினைப் பொருட்களை மிகவும் நேர்த்தியாகவும் வேகமாகவும் செய்யும் வசந்தாவைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
“எங்கள் சமூகத்தின் நிரந்தரத் தொழிலே கைவினைப் பொருட்கள் செய்வதுதான். வேறு எங்கும் எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அதனால் குடும்பத் தொழிலான கைவினைப் பொருட்களைச் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இன்று விலைவாசி வானத்தைத் தொட்டு நிற்குது. எங்களின் வருமானவோ மிகவும் குறைவு. எப்படி வாழறது? எங்களின் நிலையைப் புரிந்துகொண்டு மக்கள்தான் உதவ முன்வர வேண்டும். ஆனால் அவர்கள்தான் நாங்கள் செய்யும் பொருட்களை மிகவும் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள். எங்களுக்கு அது கட்டுப்படியாகாது. ஆனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாங்கள் சொல்லும் விலைக்குப் பொருட்களை வாங்கிச் செல்வது சற்று ஆறுதலாக இருக்கிறது” என்கிறார் வசந்தா.
தாய் மொழியை எப்படி இயல்பாகக் கற்றுக்கொள்கிறோமோ, அது போலவே குறவர் சமூகத்தினர் கைவினைப் பொருட்கள் செய்வதையும் இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஒருமுறை கண்களால் பார்த்துவிட்டால், கைகள் தானாக செய்துவிடுகின்றன. கைவினைப் பொருட்கள் வாங்குவதற்கு ஆகும் செலவைவிட, அதனால் வரும் வருமானம் மிகவும் குறைவு.
“வியாபாரத்துக்குச் செல்லும் இடங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்ல துணிகள் போட்டு அழைத்துவரச் சொல்வார்கள். அதற்கான வருமானம் இருந்தால் தானே துணிகள் வாங்க முடியும்? நாங்கள் மற்றவர்களைப் போல வீடு கட்டவோ, தங்க நகை வாங்கவோ நினைப்பதில்லை. உடுத்திக்கொள்ள நல்ல துணியும் சாப்பிட நல்ல உணவும் கிடைப்பதற்கான வருமானம் வந்தாலே மனநிறைவோடு வாழ்ந்துவிடுவோம்” என்று எளிமையான வார்த்தைகளால் அழகான கருத்தை முன்வைத்த வசந்தா, அரசு கண்காட்சி நடக்கும் இடங்கள், சுற்றுலாப் பயணிகள் நிறைந்த இடங்களில் வியாபாரம் செய்துவருகிறார்.