என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். நண்பர்களோடு படிப்பு தொடர்பாகப் பேச செல்போன் வேண்டும் என்று அடம்பிடித்ததால் வாங்கிக் கொடுத்தோம். அதுதான் இப்போது வினையாகிவிட்டது. எந்த நேரம் பார்த்தாலும் போனும் கையுமாகவே இருக்கிறாள். நண்பர்களோடு சாட் செய்தபடியே இருக்கிறாள். நாம் கேள்விப்படுகிற சம்பவங்களை நினைக்கும்போது என் மகளும் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொள்வாளோ என்று தவிப்பாக இருக்கிறது. என் மகளின் செல்போன் பயன்பாட்டை எப்படிக் குறைப்பது?
- கவிதா, சென்னை.
சைபர் கிரைம் ஆய்வாளர், சென்னை.
இன்றையச் சூழலில் சிறு குழந்தைகளிடம்கூட செல்போன் கொடுக்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது. இது மிகத் தவறான அணுகுமுறை. குறிப்பாகப் பள்ளி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைளுக்கு செல்போன் வாங்கித் தர முடியாது என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை மட்டும்தான் வாங்கித் தருவோம் என்பதை அவர்களுக்கு அன்பாக உணர்த்த வேண்டிய பொறுப்பும் உள்ளது. குழந்தைகள் அடம்பிடிப்பதற்காக செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு, பிரச்சினை வரும்போது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பட்டனைத் தட்டினால் இண்டர்நெட் மூலம் தேவையற்ற தகவல்கள் மலை போலக் குவிந்துவிடும். இது எவ்வளவு ஆபத்து! நாம் எடுக்கும் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியே பகிர்ந்துகொள்வதிலும் ஆபத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்துகொள்ளப்படும் படங்களைப் பொது பார்வைக்கு (public view) வைப்பதைத் தவிர்க்கச் சொல்லுங்கள்.
உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் அந்தப் படங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் எதிலும் எச்சரிக்கை அவசியம். இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரிகளாகவும் மாறலாம். அவர்கள் நாம் ஏற்கெனவே பதிவிட்ட படங்களைத் தவறாகப் பயன்படுத்த நினைக்கலாம். வீட்டு முகவரி, பணம் போன்ற விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கூடாது.
தேவையில்லாத ஆப்களை (app) டவுன்லோடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இப்போது டவுன்லோடு செய்யப்படும் பெரும்பாலான ஆப்கள், செல்போன் பயன்படுத்துபவரின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பிறகுதான் டவுன்லோடு ஆகின்றன. இதுபோன்ற ஆப்களால் ஆபத்து ஏற்படலாம். ஒருவருடைய சுய விவரத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இதில் உண்டு.
நன்மை, தீமையைப் பிரித்தறியும் வயதில்தான் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும்போது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும். அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களைப் பார்க்கிறார்கள், என்ன விளையாடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது நல்லது.
ஒருவேளை செல்போனால் உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவியுங்கள். காவல் துறையில் உள்ள சைபர் கிரைம் பிரிவினர் குற்றவாளிகளைக் கைதுசெய்வார்கள். இதனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது. முடிந்தவரை குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |