பெண் இன்று

அற்புத மேரி’

ஆதி வள்ளியப்பன்

மேரி கோம் - 2012 ஒலிம்பிக் போட்டிகள் வரை வெளியே தெரியாமல் இருந்த பெயர். இன்றைக்கு நாடறிந்த விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார். ஆனால், அவர் இன்றைக்கு அடைந்துள்ள பிரபலம் 12 ஆண்டு தொடர் போராட்டம், பல்வேறு தடுமாற்றங்களின் முடிவிலேயே கிடைத்துள்ளது.

இன்றைக்குப் பிரபல வீராங்கனையாகவும் விளையாட்டு துறையில் முன்மாதிரியாகவும் சுட்டப்படுபவராக இருக்கும் அவர், தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். ‘அன்பிரேகபிள்’ என்ற அந்தச் சுயசரிதையை ஹார்பர் ஸ்போர்ட் வெளி யிட்டிருக்கிறது. மேரி கோம் பற்றி இதுவரை தெரியாத பல விஷயங்கள் அதில் பதிவாகியிருக்கின்றன.

"ஒலிம்பிக் பதக்கம் என்பது விலைமதிக்க முடியாத சொத்து. பாக்ஸிங் விளையாட்டுக்கு என்னையே நான் ஒப்புக்கொடுத்துவிட்டேன். பாக்ஸிங் களத்தில் கோலியத்தை எதிர்கொள்ளும் டேவிட்டாக நான் இருந்து வருகிறேன். அதாவது, வலுவான வீராங்கனைகளுடன் மோதும் எளிய பாக்ஸராக. ஆனால் எல்லா முறையும், நானே வென்றிருக்கிறேன்.

எனது கதை நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் கதைக்கு இணையானது. எனது வாழ்க்கைப் போராட்டத்தை படிப்பதன் மூலம், மற்றவர்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்கவும், அவர்களது கனவுகளுக்காகப் போராடுவதற்கான உத்வேகத்தை பெறவும் முடியும் என்று நினைத்தேன்" என்று கூறும் மேரியின் புத்தகத்தில் இருந்து சில முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம்:

நாட்டின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கங்கதேய் கிராமத்தில் பிறந்தவர் மேரி, கோம் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஒரு விவசாயத் தொழிலாளியின் மகளாகப் பிறந்ததன் காரணமாக, அவரது உடல் விளையாட்டுக்குத் தயார் ஆகி இருந்தது.

ஆர்வம் காரணமாகச் சின்ன வயதிலேயே தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றிருந்தார். பள்ளிக் காலத்தில் ஈட்டி எறியும் வீராங்கனையாகவும் ஓட்டப் பந்தய வீராங்கனையாகவும் இருந்த அவர், பாக்ஸிங் துறைக்கு வந்ததற்குக் காரணம், ஒரு சம்பவம்.

1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மணிப்பூர் பாக்ஸர் டிங்கோ சிங் நாடு திரும்பியவுடன், அவரது மாநிலத்தில் பாராட்டு விழாக்கள் பரவலாக நடந்தன. அதில் உத்வேகம் பெற்றுப் பாக்ஸிங் துறைக்கு வந்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் மேரி கோம்.

ஆனால், குட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்ததால் பாக்ஸிங் பயிற்சி மையத்தில் அவர் நிராகரிக்கப்பட்டார். பாக்ஸிங்கின் மீது அவருக்குத் தீவிர ஆர்வமும் இல்லை. குடும்பத்துக்கு வருமானம் ஈட்டவே பாக்ஸிங் துறைக்கு அவர் வந்திருந்தார். அப்போது மணிப்பூர் மாநிலக் குத்துச்சண்டை பயிற்சியாளர் எம். நர்ஜித் சிங் அவரை மனம் தேற்றினார். அதன் பிறகு, வெறும் இரண்டே வாரங்களில் பாக்ஸிங் அடிப்படைகளைக் கற்று ஒரு பாக்ஸிங் வீராங்கனையாக மாறினார் மேரி கோம்.

ஆனால், பாக்ஸிங் பெண்களுக்கான ஒரு விளையாட்டாகக் கருதப்படாததால், தன் பாக்ஸிங் ஆர்வத்தைக் குடும்பத்தினரிடம் இருந்து மேரி மறைத்தே வந்தார். 2000ஆம் ஆண்டில் மணிப்பூர் மாநில அளவில் அவர் முதலிடம் பெற்றபோது, பிரபலம் ஆனார். நாளிதழ்களில் அந்தச் செய்தி வந்ததைப் பார்த்தே மேரி பாக்ஸிங்கில் பங்கேற்பது, பெற்றோருக்குத் தெரிய வந்தது.

முகத்தில் அடியும், காயமும் பட்டு திரும்பிய மேரியிடம் அவரது அப்பா, உனக்கெல்லாம் கல்யாணமே நடக்காது என்று எச்சரித்தார். பெண்கள் இதுவரை கால் பதிக்காத பாக்ஸிங் துறையில் மேரி கால் பதித்ததைக் கண்டு அவர் கடும் கோபமடைந்தார். ஆனால், விளையாட்டின் மீதான மேரியின் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே போனது. அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள், மேரியைப் பற்றி புகழ்ந்து பேசி, அவரது அப்பாவை சமாளித்தனர்.

18 வயதில் இருந்தே சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் முதல் ஆசியப் பெண்கள் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் பயிற்சித் தேர்வுக்குச் சென்றபோது, ரயிலில் அவரது பாஸ்போர்ட்டும் பையும் தொலைந்து போயின. ஆனால், அவர் பொறுமை இழக்கவில்லை. பயிற்சியைத் தொடர்ந்தார். கடைசியில் கையில் எதுவும் இல்லாமல் நாடு திரும்பினார்.

"ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என் கதையை, இந்த இடத்தில் யோசித்துப் பார்க்க வேண்டும்.

2000ஆம் ஆண்டில் தேசியப் போட்டியில் விளை யாடுவதற்காக மணிப்பூரில் இருந்து பெங்களூர் செல் லும் ரயிலில் ஏறினேன். முந்தைய ரயில் பயணத்தில் எனது பை, பாஸ்போர்ட்டை இழந்திருந்ததால், எனது பெட்டியை ஒரு இரும்புக் கோலுடன் இணைத்துக் கையில் மாட்டிக் கொண்டேன். ஆனால் கண் முழித்துப் பார்த்தபோது பெட்டி தொலைந்திருந்தது.

முதன்முறையாக மனம் உடைந்து போனேன். ஆனால், அன்றோ எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்திருந்தேன். எனது முதல் சர்வதேசப் போட்டி ஒரு மாதத்தில் நடக்க இருந்த நிலையில்தான், பாஸ்போர்ட் தொலைந்திருந்தது.

அப்போது வடகிழக்கு மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ஆன்லர், இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு எனக்கு உதவ முன்வந்தார். அதற்குப் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். நான்கு ஆண்டுகளுக்குப் பின் எங்கள் திருமணம் நடைபெற்றது. இப்படி, என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் என்னைச் செதுக்கியுள்ளன.

விளையாட்டு நுட்பங்கள் அல்லது உடல் வலுவின் காரணமாக எனது வெற்றி சாத்தியப்படவில்லை. என் மனசு சொன்னதை கேட்டு நடந்ததால்தான், வெற்றி சாத்தியப்பட்டது.

வெற்றிகரமான பாக்ஸர் ஆக வேண்டுமென்றால், உங்கள் மனசு உறுதியாக இருக்க வேண்டும், போராடும் குணம் வேண்டும். சிலர் நல்ல உடல் வலுவுடன் இருப்பார்கள், ஆனால் அவர்களது மனசு உறுதியாக இருக்காது. மனஉறுதி, உழைப்பின் மூலமே இந்த உயரத்தை நான் தொட்டிருக்கிறேன்...

தொடர்ந்து புத்தகத்தைப் புரட்டப் புரட்ட, மேரி கோமின் வாழ்க்கை, உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்று என்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் உணர முடிகிறது. அப்படி உத்வேகம் பெற்ற பிரபல இந்தி டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் மேரியின் கதையை இந்தி சினிமாவாக தற்போது தயாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT