சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் தந்தை வழி உறவினர் எண்பது வயதில் இறந்துபோனார். தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் செவி வழியாகக் கேள்விப்பட்டு துக்க வீட்டின் முன்னால் ஆயிரம் பேர் கூடிவிட்டார்கள். ‘கஞ்சி ஊத்த ஆளில்லனாலும் பாடை கட்ட ஆளிருக்கு’ என்ற சொலவடைக்கேற்ப கேள்விப்பட்ட கணத்தில் லாரியில் எல்லாம் ஏறி வந்துவிட்டர்கள்.
அன்று இறந்தவரின் மனைவி நீண்ட நாட்களாக நோய்ப் படுக்கையில் இருந்து சமீபத்தில்தான் மறைந்தார். ஆனால் ஒரு மாதம் கழித்துதான் அந்தச் செய்தி தெரியவந்தது. அதுவும் மற்றோர் உறவினரிடம் பேசியதால் அறிய முடிந்தது. தகவல் தொடர்பில் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டோம். குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் கையிலும் கைபேசி இருக்கிறது. ஒவ்வொன்றிலும் இரண்டு சிம் கார்டுகள் இருக்கின்றன. என்ன பயன்?
சில நாட்களுக்கு முன் என் தோழி மற்றொரு தோழியின் எண்ணைக் கேட்டு பதிவு செய்துகொண்டிருக்கையில் “அவ தப்பித்தவறி எனக்கு போன் பண்ணா எடுக்காம இருக்கத்தான்” என்று முணுமுணுத்தாள். தகவல் தொடர்பு சாதனங்களால் உலகம் சுருங்கிவிட்டதா இல்லையா என்று பட்டிமன்றமே நடத்தலாம்போல!