பாலியல் வன்முறையால் பாதிக்கபட்ட பெண்ணுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரின் செயலுக்குக் கண்டனங்கள் குவிந்ததால் அவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார். ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரிடம் 51 ஆயிரம் ரூபாய் வரதட்சிணை கேட்டு கணவரும் அவரது இரண்டு உறவினர்களும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காகச் சென்ற தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சவும்யா குஜ்ஜார், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து புன்னகைத்தபடி ஒரு செல்ஃபி எடுத்த படம் வாட்ஸ்அப்பில் வெளியானது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற நெறிமுறைகள் இருந்தும், மகளிர் ஆணையத்தின் உறுப்பினரே இந்தப் படத்தை வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கொச்சி மெட்ரோ ரயில் பணியில் திருநங்கைகள்
கொச்சி மெட்ரோ ரயில் பணியில் திருநங்கைகளைப் பணியில் அமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள், துப்புரவுப் பணிகள், வாடிக்கையாளர் உறவு போன்ற பணிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள அரசின் வறுமை ஒழிப்புத் திட்டமான ‘குடும்பஸ்த்ரீ’ திட்டத்தின் கீழ் திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். பாலியல் சிறுபான்மையினர் மீதான சமூக விலக்கைப் போக்கும் வகையிலும் பாகுபாடின்மையை ஏற்படுத்தவும் கேரள அரசு முதல்முறையாக திருநங்கைகள் சார்ந்த கொள்கைத் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.