பலருக்கு வாழ்க்கையில் இழப்புகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு இழப்புகளே வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. பத்மா லக்ஷ்மிக்கும் அப்படித்தான். இவர் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். சென்னையில் பிறந்தவர். அமெரிக்கா வில் வளர்ந்து, தற்போது அங்கேயே வாழ்ந்துவருபவர். இவர் தொகுப்பாளராக இருந்து வெளிவந்த உணவு தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ‘எம்மி’ விருது பெற்றுள்ளது. உணவு தொடர்பாக இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். மாதவிடாய் தொடர்பான பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ‘எண்டோமெட்ரியோசிஸ் ஃபவுண் டேஷன் ஆஃப் அமெரிக்கா’ என்னும் அறக் கட்டளையை நடத்திவருகிறார்.
மாடல், நடிகை, உணவு நிபுணர், எழுத்தாளர் எனப் பல முகங்கள் கொண்ட வர். படப்பிடிப்பு, புத்தக புரொமோஷன் போன்ற வற்றுக்காக உலகம் முழுக்கச் சுற்றும் இவர், ‘நான் ஒரு ஜிப்ஸி’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
தனிமைத் துயரம்
பத்மாவின் வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது. நினைவு தெரியும் முன்பே அவரது பெற்றோர் விவாகரத்துப் பெற்றுவிடுகிறார்கள். இத்தனைக்கும் அது காதல் திருமணம். அந்தக் கசப்பின் காரணமாக, பத்மாவின் அம்மா மேற்படிப்பு படிக்க அமெரிக்காவுக்குச் சென்றுவிடுகிறார். நான்கு வயதுவரை தாத்தாவின் வீட்டில் வளரும் பத்மா, பிறகு அமெரிக்காவுக்குச் செல்கிறார். ஒருபுறம், அமெரிக்கப் பள்ளிகளில் ‘கறுப்பு ஒட்டகச்சிவிங்கி’ என்று கிண்டலடிக்கப்படுவதும், மறுபுறம் தந்தையில்லாத பெண்ணாக வளர்ந்ததும், அவரைத் தனிமைப்படுத்தின. இந்தத் தனிமையும், அது தந்த துயரமும் அவரை இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அவரது ‘லவ், லாஸ் அண்ட் வாட் வீ ஏட்’ (Love, loss and what we ate, ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம்) எனும் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
தழும்பு தந்த வாய்ப்பு
தனிமையைச் சுமந்துகொண்டு வளர்ந்த பத்மாவுக்கு, அவரது தாய் மட்டும்தான் ஆறுதலாக இருந்தார். வளர்ப்புத் தந்தையின் உறவினர் ஒருவரால், சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு உள்ளானார் பத்மா. இதன் காரணமாக, அவரது தாய்க்கும் வளர்ப்புத் தந்தைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, விரைவில் முடிவுக்கும் வந்தது. சில காலம் கழித்து இன்னொரு ஆணுடன் பத்மாவின் தாய் குடும்பம் நடத்தினார். அப்போது இவர்கள் மூவரும் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள். அதில் பத்மாவுக்கு வலது கையில் அடிபட்டது. அறுவை சிகிச்சை செய்ததால் முழங்கை அருகே மறையாத தழும்பு ஏற்பட்டது.
ஃபேஷன் மாடலாக வர விரும்பிய பத்மாவின் கனவில் அந்தத் தழும்பால் மண் விழுந்தது. வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே போக, காலண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து இவருக்கு வாய்ப்பு வந்தது. அதுவும் மோசமான ஒரு நிபந்தனையுடன்!
தன் தழும்பு காரணமாக, எப்படியும் இந்த வாய்ப்பும் கிடைக்காது என்று நம்பினார். அந்த நிறுவனம் தேர்வு செய்தது. அதற்கு அது சொன்ன காரணம்தான் ஆச்சரியம்: “எங்கள் நிறுவனருக்குத் தழும்புகள் பிடிக்கும்!”
இதுகுறித்துத் தன் புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் பத்மா. “இன்று என் தழும்பை நான் மிகவும் நேசிக் கிறேன். மருத்துவத்தால் அதை நீக்க முடியும் என்று சொன்னாலும் நான் அதற்குத் தயாராக இல்லை. ஒரு ஒளிப்படம், உங்களை நீங்களே பார்க்கும் பார்வையை மாற்றிவிடும். என்னுடைய பலவீனத்தை என்னால் வெளிப்படையாகக் காட்ட முடியும் என்பதுதான் நான் பெற்ற சிறந்த வரம். என் உடலில் ஏற்பட்டுள்ள இந்த அலங்கோலத்தை நான் நேருக்கு நேராகச் சந்திப்பதன் மூலம், அது தரும் வெட்கம், வேதனையிலிருந்து என்னால் விடுபட முடிகிறது”.
விவாகரத்தின் வலி
தனது கல்லூரிக் காலத்தில் சிலருடன் ‘டேட்டிங்’ சென்றிருந்த போதும், யாருட னும் நிரந்தரமான காதலை பத்மா கொண்டிருக்க வில்லை. ஃபேஷன் தொடர்பாகப் படித்துவந்த அவருக்கு, இத்தாலியில் மாடலாகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு அவரை ஐரோப்பா கண்டம் முழுக்கவும் அழைத்துச் சென்றது.
இருபதுகளின் மத்தியில் இருந்த அவருக்கு எல்லையில்லாத சுதந்திரமும், கைநிறைய வருமானமும் கிடைத்து வந்தன. இந்நிலையில் தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்தீயைச் சந்திக்கிறார். இருவரும் காதலில் விழுந்தார்கள். 2004-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் சுமார் 30 வயது வித்தியாசம்!
ஆரம்பத்தில் சிறப்பாகச் சென்று கொண் டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கை, சிறிது காலத்தில் கசப்பின் உச்சத்தை அடைந்தது. “இதற்குக் காரணம் எங்களிடையே இருந்த வயது வித்தியாசம்தான். அதை சல்மானிடமே சொல்லியிருக்கிறேன்” என்கிறார் பத்மா. மூன்று ஆண்டுகளில் இந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
எது அழகு?
தன்னுடைய புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காகச் சமீபத்தில் சென்னை வந்திருந்தார் பத்மா. அப்போது நடந்த கலந்துரையாடலின் முடிவில் “உங்களைப் பொறுத்தவரையில் பெண்ணியம் என்பது என்ன?” என்ற பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பத்மா இப்படி பதிலளித்தார்:
“பெண்ணியம் என்பதற்கும், அழகு என்பதற்கும் நாம் மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் ஒரு விளக்கத்தை வைத்திருக்கிறோம். அந்த விளக்கம் தவறு. எது பெண்ணியம்? என்னுடைய பாட்டிக்கு சந்தோஷம் என்ற சொல் எப்போதும் வினைச் சொல்லாகத்தான் இருந்தது. ஆம், அவருக்கு உழைப்புதான் சந்தோஷம். என்னைப் பொறுத்த வரையில், பொருளாதாரச் சுதந்திரம்தான் உண்மையான அழகு. அதுதான் உண்மையான பெண்ணியம். ஆனால், அது உழைப்பினால் மட்டுமே சாத்தியம். எனவே பெண்களே, உழைக்கத் தயாராக இருங்கள். எவர் ஒருவர் கடுமையாக உழைக்கிறாரோ, அவருக்கு வெற்றி நிச்சயம்!”