பெண் இன்று

குறிப்புகள் பலவிதம்: கலப்படத்தைக் காட்டும் உள்ளங்கை

செய்திப்பிரிவு

> முந்திரிப் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் சிறிது பச்சைக் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

> வருடாந்தரத் தேவைக்காக வற்றல், வேப்பம்பூ போன்றவற்றை வைத்திருந்தால் அந்த டப்பாவில் நான்கு அல்லது ஐந்து மிளகாய் வற்றல்களைப் போட்டு வைத்தால் பூச்சி வராது.

> புளியை அதிகமாக வாங்கி இருப்புவைக்கும்போது புளியில் உள்ள நார், ஓடுகளை நீக்கிவிடுங்கள். அதை வெயிலில் வைத்து, பொடிசெய்த கல் உப்பைச் சிறிதளவு கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து மண் பானையிலோ, ஜாடிகளிலோ வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாது. புளி உப்பில் நன்றாக ஊறி சாம்பார், ரசத்துக்குக் கரைக்க பதமாக இருக்கும். வழக்கத்தைவிடக் குறைவான அளவே செலவாகும்.

> காய்ந்த மிளகாயைத் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்ய முடியாது. அதனால் அவற்றின் காம்புகளை நீக்கிவிட்டு, சுத்தமான துணியில் துடைத்துப் பயன்படுத்தலாம்.

> குறுமிளகில் பப்பாளி விதைகள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. மிளகை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தால் மிளகின் தோல் உரிந்து உள்ளங்கையில் ஒட்டாது. பப்பாளி விதைகள் தோல் உரிந்து உள்ளங்கைகளில் ஒட்டி விடும். அதைவைத்து தரம் பிரித்துப் பயன்படுத்தலாம்.

> பருப்பு வகைகளைச் சிறிது நேரம் வெயிலில் காயவைத்து பிறகு டப்பாக்களில் அடைப்பது நல்லது. அப்படியே போட்டுவைத்தால், பருப்புகளில் ஈரப்பதம் இருந்தால் சீக்கிரம் பூச்சி படிந்துவிடும்.

> பூண்டு வாங்கியதுமே அவற்றில் உள்ள சொத்தைப் பூண்டுகளைப் பிரித்தெடுத்துவிட்டு நல்ல பூண்டுகளைக் காற்றோட்டமுள்ள மூங்கில் கூடைகளில் போட்டு வைத்தால், அவற்றின் காரம், மணம் குறையாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

> எண்ணெய் பாத்திரத்தில் சிறு துண்டு கருப்பட்டியைப் போட்டு வைத்தால் சிக்கு வாடை வராமல் மணமாக இருக்கும்.

- சுமதி ரகுநாதன், கோவை.

SCROLL FOR NEXT