இந்தியாவின் பழமையானதும் தற்போது காணக் கிடைக்காததுமான இசை வாத்தியம் ஜலதரங்கம். இந்த வாத்தியத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் சீதா துரைசாமி. இவருக்குப் பின் இந்த வாத்தியத்தைக் கையிலெடுத்திருப்பவர் அவரின் பெயர் சொல்லும் பெயர்த்தி கானவ்யா துரைசாமி.
நியூயார்க்கில் பிறந்த கானவ்யா, தனது ஏழாவது வயதில் அவருடைய பாட்டி சீதா துரைசாமியின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரிடமிருந்து அரிய வாத்தியமான ஜலதரங்கத்தை வாசிக்கும் முறையைக் கற்றார். கலாக்ஷேத்ராவில் நாட்டியமும் பயின்றார். அத்துடன் வீணை, ஹார்மோனியம் போன்ற வாத்தியங்களையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
பள்ளி படிக்கும் காலத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்தி, அதன்மூலம் திருநெல்வேலியிலிருக்கும் அவருடைய பூர்வீகக் கிராமமான மேல்நெமிலியில் மருத்துவ முகாம்களையும் கல்வி நலப்பணிகளையும் செய்ததற்காகச் சில்வர் நைட் விருதைப் பெற்றிருப்பவர்.
அது மட்டுமில்லாமல், மும்பையைச் சேர்ந்த நடிகை சோமி அலியுடன் இணைந்து பள்ளி நாட்களிலேயே எண்ணற்ற தன்னார்வத் தொண்டு முயற்சிகளில் ஆர்வமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பள்ளிக் கல்வி முடித்து உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். புகழ்பெற்ற பர்க்லி இசைக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். இங்குப் படித்தபோதுதான், அரிய வாத்தியமான ஜலதரங்கத்தை இலகுவாகப் பயன்படுத்தும் வகையில், மின்சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கி இருக்கிறார். அதில் ஜலதரங்கத்தின் ஓசை வெளிப்பட்டாலும், ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது கானவ்யாவுக்கு. விளைவு, பாட்டியின் வழியில் பாரம்பரியமான ஜலதரங்க முறைக்கே திரும்பிவிட்டார். இதைக்கொண்டு கமகங்கள் தேவைப்படாத மேற்கத்திய இசைக்கு ஜலதரங்கத்தை வாசித்துவருகிறார்.
எம்மி விருது பெற்ற லாரா காப்மேன் இசையமைத்த சில திரைப்படங்களில் ஜலதரங்கம் வாசித்திருக்கிறார். ஓபரா பாடகரான பிளாஸிடோ டொமிங்கோவின் இசையிலும் ஜலதரங்கம் வாசித்திருக்கிறார்.
‘இந்திய நடனங்களில் வெளிப்படும் இந்தியச் சமூகங்கள்’ என்னும் தலைப்பில் நடனமணிகளின் கலந்துரையாடலை, `ரசம் ஃபார் டான்சர்ஸ் சோல்’ என்னும் பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார் கானவ்யா.
வேரைத் தாங்கும் விழுதாகப் பாரம்பரியமான ஜலதரங்கத்தை வாசித்துவரும் கானவ்யா, தற்போது லாஸ்ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய இசையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.