பருவ மழை தொடங்கிவிட்டது. ஈரமும், குளிர்ச்சியும் நோய்களை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கும் என்ற டென்ஷனில் இப்போதே பல தாய்மார்கள் நகத்தைக் கடிக்கத் தொடங்கியிருப்பார்கள்! “கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்டால் பதற்றமே தேவையில்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நா.எழிலன். மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவற்றைச் சொல்கிறார்.
“பாக்டீரியா, வைரஸ் காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி போன்ற நோய்கள் ஏற்படலாம். நீண்ட நாள் பயன்படுத்தப்படாத குழாய் வழியே வரும் குடிநீர், கழிவு கலந்த குடிநீர் ஆகியவற்றில் வைரஸ், பாக்டீரியாக்கள் கலந்திருக்கலாம். எப்போதும் தண்ணீரை 100 டிகிரி வெப்ப நிலையில் 10 விநாடிகள் முதல் ஒரு நிமிடம்வரை கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும்.
எலிக்காய்ச்சல்
எலி, பெருச்சாளிகளின் கழிவுகள் மிக ஆபத்தானவை. எலியின் கழிவு கலந்த நீரைக் குடிப்பதாலும் காயமிருக்கும் கால்களால் மிதிப்பதாலும் எலிக் காய்ச்சல் வரலாம். இதனால் காய்ச்சலுடன் உடல் வலி, தசை வலி, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே வெளியில் சென்று வந்தவுடன் சுடான நீரில் கால்களைக் கழுவ வேண்டும்.
ஃப்ளூ (FLU)
வைரஸ் காய்ச்சலில் முக்கியமானது ஃப்ளூ. சளி, இருமல் போன்றவை பரவலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் எளிதாக பாதிக்கப்படலாம் என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சூரிய வெப்பம் குறைவாக இருப்பதால் காற்றிலி ருக்கும் ரைனோ வைரஸ், அடினோ வைரஸ் காரணமாக சளித்தொல்லை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க விட்டமின் சி நிறைந்த உணவுகள் உட்கொள்வது நலம்.
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா
கொசுவால் பரவும் நோய்களில் இந்த நோய்கள் அதிதீவிரமானவை. பொதுவாக, ஒரு வாரத்துக்கும் மேலாகத் தேங்கியிருக்கும் நீரில்தான் டெங்கு ஏற்படுத்தும் கொசுக்கள் முட்டையிடுகின்றன. வீட்டைச் சுற்றி ஈரமான குப்பை, நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் நிலையில் எலும்பை உலுக்க வைக்கும் காய்ச்சல் நான்கு நாட்கள்வரை இருக்கும். இரண்டாம் நிலை, காய்ச்சல் வந்த நான்காம் நாளில்தான் தொடங்கும். சிலர் காய்ச்சல் சரியானவுடன், பள்ளிக்கும், பணிக்கும் கிளம்பிவிடுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அலட்சியம் காட்டாமல் நோயாளியின் மீதும், நோயின் மீதும் தீவிரமான கண்காணிப்புடன் இருக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் குடிப்பது நல்லது.” என்று சொல்கிறார் டாக்டர் நா. எழிலன்.
- பவானி மணியன்