பெண் இன்று

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை

டி. கார்த்திக்

இந்தியா இதுவரை சிறப்பாகச் செயல்பட்ட தொடராக ஜகார்தா, பலெம்பெங் ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் அமைந்துவிட்டது. இந்திய வீராங்கனைகளும் சிறந்த பங்களிப்பை இந்த முறை வழங்கியிருக்கிறார்கள். இந்தியா வென்ற 69 பதக்கங்களில் மகளிர் அணியின் பங்கு 27. இது தவிர, கலப்பு விளையாட்டுப் பிரிவில் 4 பதக்கங்களையும் வீராங்கனைகள் வென்றுவந்திருக்கிறார்கள். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி சில வீராங்கனைகளுக்கும் அணிகளுக்கும் மறக்க முடியாத தொடராக அமைந்தது.

டுட்டி சந்த்

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிகம் பரிசுத் தொகை பெற்ற வீராங்கனை டுட்டி சந்த். இவர் பதக்கம் வென்றதுமே ஒடிஷா அரசு ஒன்றரைக் கோடி ரூபாய் பரிசு அறிவித்தது. தடகள வீராங்கனையான டுட்டி சந்த், 100 மீ. பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றபோது பலரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஏனென்றால்,  மகளிர் 100 மீ. ஓட்டப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பெறும் முதல் பதக்கம் இது. இதற்கு முன் 1998-ல்தான் பதக்கம் வென்றிருந்தது.

asia 3jpg

நீண்ட காலமாகப் பதக்கம் வெல்லாத ஏக்கத்தை டுட்டி சந்த் தீர்த்து வைத்ததுதான் இதில் சிறப்பு. பல போராட்டங்களைச் சந்தித்துதான் இந்தச் சாதனையைச் டுட்டி சந்த் நிகழ்த்தினார். கடந்த 2014-ல் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற டுட்டி, தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவும் நேரடி தகுதிபெற்றார்.

ஆனால், போட்டி முடிந்த பிறகு நடத்தப்பட்ட பாலியல் சோதனை அவருக்கு எதிராக அமைந்தது.  ஆண்களுக்கு இருக்கும் ஆண்ட்ரோஜென் என்ற ஹார்மோன் டுட்டிக்கு அதிக அளவில் இருப்பதாகச் சர்வதேசத் தடகள கூட்டமைப்பு புகார் கூறியது. அத்துடன் தடகளத்தில் பங்கேற்கவும் தடைவிதித்தது. இதனால், காமன்வெல்த் போட்டி உள்பட எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை டுட்டிக்கு ஏற்பட்டது.

ஆனாலும், அவர் மனம் தளரவில்லை. தடகளத்திலிருந்து விலகிவிடவில்லை. சர்வதேசத் தடகளக் கூட்டமைப்பின் முடிவை எதிர்த்து சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். தனது உடலில் உள்ள குறைக்கு, தான் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று வாதாடினார். இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட  தீர்ப்பாயம், அவர் மீதான தடையை நீக்கியது.

தடையிலிருந்து அவர் மீண்டு வந்தபோதும் பெரிதாக நிதி உதவி கிடைக்கவில்லை. பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபி சந்த் மட்டுமே உதவினார். ஹைதராபாத்தில் உள்ள கோபி சந்த் பயிற்சி மையத்தில் டுட்டி பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று தன் திறமையை மீண்டும் நிரூபித்தார்.

asia 6jpgright

தற்போது ஜகார்தா, பாலெம்பெங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் முத்திரை பதித்திருக்கிறார். 100 மீ. ஓட்டப் போட்டி மட்டுமல்லாமல் 200 மீ. ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார் டுட்டி. இதன்மூலம் இந்தத் தொடரில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் நாடு திரும்பியிருக்கிறார். டுட்டியின் தடகள வாழ்க்கையில் சோதனைக் காலம் முடிந்து இப்போது வசந்த காலம் வந்திருக்கிறது.

வர்ஷா கெளதம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வர்ஷா கெளதம் பதக்கம் வென்று அசத்தினார். பாய்மரப் படகுப் போட்டியில் வர்ஷா கெளதம் - ஸ்வேதா ஷெர்வேகர் இணை களமிறங்கியது. மொத்தம் 15 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் வர்ஷாவும் ஸ்வேதாதவும் 44 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். 20 வயதாகும் வர்ஷா, எட்டு வயதிலேயே பாய்மரப் படகைச் செலுத்தத் தொடங்கிவிட்டார். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். 2014-ல்

ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த வர்ஷா, இந்த முறை வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று முன்னேறியிருக்கிறார்.  பாய்மரப் படகுப் போட்டியில் தொடர்ந்து வெற்றிக்கொடி கட்டிவரும் வர்ஷாவின் சொந்த ஊர் கோவை.

பாட்மிண்டன் பதக்கங்கள்

பாட்மிண்டனில் இந்த முறை புதிய சாதனையை வீராங்கனைகள் அரங்கேற்றினர். பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, வெண்கலம் என இரு பதக்கங்களை இந்தியா பெற்றது. வெள்ளியை பி.வி.சிந்து கைப்பற்ற, வெண்கலத்தை சாய்னா நேவால் வென்றார். இதில் பி.வி. சிந்துதான் முத்தாய்ப்பான சாதனையை நிகழ்த்தினார்.

பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இதுவரை எந்த வீராங்கனையுமே இறுதிப் போட்டிவரை முன்னேறியதில்லை. முதன்முறையாக இறுதிப் போட்டிவரை முன்னேறிய பி.வி.சிந்து, நம்பர் ஒன் வீராங்கையான டய் ஷு யிங்கிடம் தங்கத்தை இழந்தார். வெள்ளி வென்றாலும் அதுவும் சாதனையாகவே அமைந்தது.

மகளிர் ஹாக்கி

ஆண்கள் ஹாக்கி அணி இந்த முறை வெண்கலப் பதக்கம் பெற்ற நிலையில், மகளிர் அணியோ வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது. நான்கு சுற்றுப் போட்டிகள், அரையிறுதி என எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற மகளிர் அணி, இறுதிப் போட்டியில் ஜப்பானிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் வெள்ளிப் பதக்கத்தையே இந்திய மகளிர் அணியால் பெற முடிந்தது. ஆனாலும், கடந்தமுறை வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய ஹாக்கி மகளிர் அணி, இந்த முறை வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பியது முத்தாய்ப்பாகவே அமைந்தது. 1998-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இறுதிப் போட்டிவரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

கபடி அணி

ஹாக்கியைப் போலவே இந்திய ஆண்கள் கபடி அணியும் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது வெள்ளிப் பதக்கத்தையே வென்றிருக்கிறது. ஆனாலும், ஆண்கள் அணி ஏமாற்றிய நிலையில் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இறுதிவரை முன்னேறிய வகையில் கபடி பெண்கள் அணி சாதனைப் பட்டியலில் சேர்ந்தது.

SCROLL FOR NEXT