பெண் இன்று

களத்தில் பெண்கள்: பாதுகாப்பை வலியுறுத்தும் பயணம்

ரேணுகா

பெண்கள் புனிதப்படுத்தப்படும் நம் நாட்டில்தான் பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பெண்ணாகப் பிறந்த நொடியிலிருந்தே அவர்களுக்கான பிரச்சினைகளும் தொடங்கிவிடுகின்றன. பூமியில் உள்ள மற்ற உயிரினங்களைப் போல் இயல்பாக வாழ்ந்துவிட்டு மறையும் நிலை பெண்களுக்கு வாய்ப்பது அரிதாகிவிட்டது.

ஆனால், இந்நிலை மாற ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் அவர்களின் வாழ்விலும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக,

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளை எதிர்த்து  ‘வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க, ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்.

இந்தப் பிரச்சாரப் பயணத்தில் இவர்களுடன் நாடு முழுவதுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பினர், தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். காஷ்மீர், டெல்லி, அசாம், கேரளம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து முனைகளில் கடந்த 22-ம் தேதி தொடங்கியிருக்கியது இந்தப் பிரச்சாரப் பயணம்.  இந்தப் பிரச்சாரப் பயணம் முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது கிராமம், நகரம் போன்ற பகுதிகளில் பெண்கள், குழந்தைகள், தலித், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் போன்றவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து வீதி நாடகம், கருத்தரங்கம், பொதுகூட்டம் போன்றவை நடத்தப்பட்டுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த செவ்வாயன்று டி.என். ராஜரத்தினம் ஆடிட்டோரியத்தில் முனைவர் வசந்திதேவி, வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் கல்பனா, எழுத்தாளர் வ.கீதா ஆகியோர் கலந்துகொண்ட அரங்கக் கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் சங்கம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 25 அமைப்புகள்  கலந்துகொண்டன.

பெண்களால் நடத்தப்படும் இந்தப் பிரச்சாரப் பயணத்தின் ஒவ்வொரு வாகனத்திலும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்கின்றனர்.

இதில் தமிழகத்திலிருந்து நான்கு பெண்களும் அனுஸ்ரீ என்ற திருநங்கையும் பங்கேற்றனர். சமூக வலைத்தளங்களில் ‘அமைதி

உரையாடல்’ என்ற பெயரில் பலர் வன்முறையற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்தப் பிரச்சாரப் பயணம் அக்டோபர் 13- ம் தேதி டெல்லியில் பேரணி, பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது. நாட்டில் நடைபெற்றுவரும் வன்முறைக்கு எதிராகப் பெண்கள் முன்னெடுத்திருக்கும் இந்தப் பிரச்சாரம் மாற்றத்துக்கான சிறு விதை.

SCROLL FOR NEXT