நானும் என் கணவரும் அண்மையில் கோத்தகிரி சென்றோம். மலைப் பாதையில் மக்கள் எந்த இடத்தில் கையைக் காட்டினாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிக்கொள்கின்றனர். அந்த ஊர் மக்களின் பாட்டு, மொழி என அனைத்தையும் ரசித்தபடி சென்றோம். மலை அரசியின் மலர்க் கண்காட்சியைப் பார்க்கப்போகும் ஆர்வம் எங்களைப் போலவே பலருக்கும் இருந்ததால் வழியெங்கும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. சாலையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் காவல் துறையினரைப் பார்க்க முடிந்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாகச் சில நிமிடங்கள் காரை நிறுத்தினால்கூட பார்க்கிங் பகுதிக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். சாலையோரம் உள்ள கடைகளில்கூட பிளாஸ்டிக்கை ஒழித்திருந்தார்கள். நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு தாவரவியல் பூங்காவில் நுழைந்ததுமே வண்ண வண்ண டாலியா மலர்க் கூட்டம் கண்களை நிறைத்தது.
பூக்களை நிறம் வாரியாகவும் உயரம் வாரியாகவும் பிரித்து அடுக்கியிருந்த விதம் மனத்தைக் கொள்ளைகொண்டது. வெளி நாடுகளில் தூலிப் மலர்களின் கண்காட்சியை ஒளிப்படங்கள் வாயிலாகப் பார்த்த எனக்கு, நம் நாட்டிலும் அதற்கு இணையாக இப்படியொரு அற்புதமான மலர் கண்காட்சி நடத்துகிறார்கள் எனப் பெருமிதமாக இருந்தது.
ஆங்காங்கே குடிநீர், சுற்றுலாத் துறை சார்பாக காபி, டீ ஸ்டால் என அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தனர். புல்வெளியைச் சுத்தமாகப் பராமரிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளும் குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட்டு அந்த இடத்தின் தூய்மை கெடாமல் பார்த்துக்கொண்டனர்.
மக்கள் அமரவும் சாப்பிடவும் பெரிய கூடாரத்தை அமைத்துள்ளனர். நாங்கள் சென்றபோது அவ்வப்போது மழை பெய்தது. பாத்திகளில் உள்ள மலர்கள் நனைந்து சாய்ந்துவிடும் என அவற்றை மூடிவைக்கின்றனர். மழை நின்றதும் மீண்டும் திறந்துவைக்கின்றனர். ஊழியர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையை அர்ப்பணிப்போடு செய்ததைக் காண நிறைவாக இருந்தது.
பல்லாயிரக்கணக்கில் வந்து செல்லும் மக்களை மகிழ்விக்க ஆட்சியாளர், காவல் துறையினர், தோட்டக்கலைத் துறையினர், பணியாளர்கள் என எண்ணிலடங்கா மக்கள் வேலை செய்கின்றனர் என்பதை உணர முடிந்தது. ஊர் கூடி தேர் இழுப்பதைக் கண் முன்னே கண்டேன். அனைவருக்கும் மானசீகமான நன்றி சொல்லியபடியே மலர்களை ரசித்தேன்.
- பானு பெரியதம்பி, சேலம்.