பெண் இன்று

முகங்கள்: அம்மாவின் திருமணப் பரிசு

செ.ஞானபிரகாஷ்

மகள் பெற்ற சான்றிதழ்களையும் பரிசுகளையும் கண்காட்சியாக வைத்து அதையே மகளுக்குத் திருமண பரிசாகக் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார் மோகனா முருகேசன். புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்ததுமே கொலுவைப் போல் வரிசையாக சான்றிதழ்களும் பரிசுகளும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட கோப்பைகளைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. “இவை எல்லாமே என் மகள் பெற்ற பரிசுகள்” எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவரும் மோகனா.

அண்மையில் திருமணமாகிச் சென்ற தன்னுடைய மகள் பூர்ணிமாவுக்குத் திருமணப் பரிசாக இந்தக் கண்காட்சியை அமைத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துப் பரவசப்பட்டார். பரிசுகளைப் பார்க்க வரும் பலரும் ஆச்சரியத்துடன் வியக்கின்றனர். “இரண்டரை வயதில் நடனத்தில் தொடங்கியது என் பொண்ணோட கலைப் பயணம். பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் வீணையில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பல சாதனைகளைப் படைத்தாள். வீணை வாசிப்பவர்கள் பொதுவா இரண்டரை முதல் மூணு கட்டைகள் வரைதான் வாசிப்பாங்க. ஆனால், பூர்ணிமா  ஐந்தரை கட்டையில் வாசிப்பாள். எந்தப் பாட்டா இருந்தாலும் குறிப்புகளைப் பார்க்காம வாசிப்பாள்” என்று சொல்லும் மோகனா, மகளின் திறமை குறித்துப் பேசிப் பரவசப்படுகிறார்.

இனிய அதிர்ச்சி

பொதுவாக அன்னையர் தினத்துக்குக் குழந்தைகள்தாம் அம்மாவுக்குப் பரிசுகள் தந்து மகிழ்வர். ஆனால், மோகனாவோ அன்னையர் தினத்தன்று தன் மகளுக்குத் திருமணப் பரிசு தர நினைத்தார். அதன் வெளிப்பாடுதான் இந்தப் பரிசுக் கண்காட்சி. திருமணம் முடிந்து தற்போது வெளிநாட்டில் இருக்கும் பூர்ணிமாவிடம் பேசினோம். “நான் ஸ்கூல் படித்தபோது மாலை வேளையில் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி என்னை வகுப்புகளுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. வீணை வாசித்து முடித்ததும் நான் சோர்வோடு தூங்கிடுவேன். அப்போ அப்பாவும் அம்மாவும் எனக்காகக் காத்திருந்து வீட்டுக்கு அழைச்சுட்டுப் போன நாட்களை மறக்கவே முடியாது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தது, தொடர்ந்து 12 மணி நேரம் வீணை வாசித்தது, ஒரே நேரத்தில் ஐந்து சாதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்தது எனப் பலவற்றிலும் அவங்களோட உழைப்பும் உண்டு. என்னோட சான்றிதழ்களை எல்லாம்  கொலுவாக்கி எனக்குக் கொடுத்த கல்யாணப் பரிசுக்கு ஈடு இணையே இல்லை” எனப் பூரிக்கிறார் பூர்ணிமா.

SCROLL FOR NEXT