பெண் இன்று

வடக்கும் தெற்கும் இங்கே சங்கமம்

வா.ரவிக்குமார்

பாரம்பரிய கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என இரண்டு கிளைகளிலும் படரும் கொடி டாக்டர் லஷ்மி ஸ்ரீராம்.

பம்பாயில் அலமேலு மணி, ஏ.எஸ்.பஞ்சாபகேசன், சந்திரசேகரன் ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்ற லஷ்மி, சென்னைக்கு வந்ததும் முசிறி சுப்பிரமணியத்தின் கலை ஞானத்தின் வழிவந்த டி.கே. கோவிந்தராவிடம் தன்னுடைய கர்நாடக இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார்.

அவரின் மறைவுக்குப் பின் தற்போது நாதயோகி வி.வி. சுப்பிரமணியத்திடம் இசைப் பயிற்சியைத் தொடர்ந்துவருகிறார்.

இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற மதுபாலா சாவ்லாவிடம் பயிற்சியைத் தொடங்கினார். அவருடைய மேலான வழிநடத்தலில் ‘சங்கீத் விஷாரத்’ பட்டத்தை அகில பாரதிய காந்தர்வ மகாவித்யாலயாவில் பெற்றார்.

அதன்பின் குவாலியர் மற்றும் ஆக்ரா பாணியிலான இசையை பண்டிட் வசந்த்ராவ் குல்கர்னியிடம் கற்றார். புகழ்பெற்ற இசை அறிஞரான பண்டிட் ஸ்ரீகிருஷ்ணா ஹால்டன்கரிடம் இருந்து ‘காயகி’ பாணியில் பாடும் முறையைக் கற்றார். இந்த மேதைகள் அடியொற்றியும் அதேநேரத்தில் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையையும் கொண்டு லஷ்மி ஸ்ரீராம் பாடிய காயல் சங்கீதம் கேட்பவர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது.

தும்ரி, பஜன் பாடுவதிலும் வல்லவரான லஷ்மி, பரதநாட்டியமும் அறிந்தவர். நடனக் கலையின் மூலம் இசையின் இன்னொரு பரிமாணத்தையும் உணர்ந்தவர்.

10-ம் நூற்றாண்டில் ஆனந்த்வர்த்தனால் எழுதப்பட்ட த்வன்யலோகா என்னும் படைப்பை ஆதாரமாகக் கொண்டு அலங்கார சாஸ்திரா என்னும் தலைப்பில் ஆய்வு செய்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

பல்வேறு கலாச்சார மையங்கள் மற்றும் அரசு வழங்கும் கல்வி நிதிகளைப் பெற்றிருப்பவர். மியூசிக் அகாடமியின் சிறந்த பாடகருக்கான விருதை 1998-ல் பெற்றிருக்கிறார்.

மும்பையின் இந்திய நிகழ்த்து கலைகளின் கூட்டமைப்பு, தாதர் மாதுங்கா கலாச்சார மையம், கொல்கத்தாவின் சங்கீத ஆராய்ச்சி சபை, டெல்லியின் இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், சென்னை மியூசிக் அகாடமி போன்ற இந்தியாவின் உயர்ந்த சபைகளிலும் அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகளையும் கருத்துரை விளக்க நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் வருகைதரு விரிவுரையாளராக இந்திய இசை குறித்து மாணவர்களுக்கு விளக்குகிறார். இசை குறித்த கட்டுரைகளை முன்னணிப் பத்திரிகைகளில் எழுதும் பத்தியாளரும்கூட.

இந்தியாவின் இசை மேடைகளில் கர்நாடக, இந்துஸ்தானி இசை வடிவங்களை இணைக்கும் பாலமாக விளங்கும் லஷ்மி ராமிடம் வடக்கும் தெற்கும் ஒருங்கே வாழ்கின்றன.

SCROLL FOR NEXT