யாரை எதிர்த்து நின்று வெல்கிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது வெற்றி வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டுவந்த அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து நின்று வென்றிருக்கும் ஸ்மிருதி இரானியின் வெற்றியும் கவனம் பெற்றிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017-ல் அமைந்த பாஜக ஆட்சியும் ஸ்மிருதி இரானியின் இந்த வெற்றிக்குக் கூடுதல் பலமாக அமைந்தது.
2014-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற ஸ்மிருதி இரானி, இந்த முறை பெற்ற வெற்றியால் பலரையும் ஆச்சரியப்படவைத்திருக்கிறார்.
யார் இந்த ஸ்மிருதி இரானி?
ஸ்மிருதி மல்ஹோத்ரா எனும் இயற்பெயர் கொண்ட ஸ்மிருதி இரானி (43) 1976-ல் டெல்லியில் பிறந்தவர். தொடக்கத்தில் நடிகை, மாடல், தயாரிப்பாளர் என வலம்வந்தவர் 2003-ல் பாஜக-வில் இணைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் டெல்லி சாந்தினி செளக் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். பிறகு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
கலையுலகப் பயணம்
2000-ல் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலமடைந்தவர் ஸ்மிருதி. அப்போது ‘ஸ்டார் பிளஸ்’ சேனலில் ஒளிபரப்பான ‘Kyunki Saas Bhi Kabhi Bahu Thi’ (ஏனென்றால் மாமியாரும் மருமகளாக இருந்தவர்தான்) இந்தித் தொடர் மிகவும் பிரபலமடைந்தது.
அதில் அவர் ஏற்று நடித்திருந்த ‘துளசி விரானி’ என்ற கதாபாத்திரத்துகாக, ‘இந்தியன் டெலிவிஷன் அகாடமி’யின் சிறந்த நடிகைக்கான விருதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றார் (2001-2004). இது தவிர பல இந்தித் தொடர்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். திரைப்படங்களில் போதிய கவனம் பெறாதபோதும் சின்னத்திரையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு
தன் தாத்தா ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததால் ஸ்மிருதியும் அதில் இணைந்தார். அவர் பிரபலமான முகம் என்பது வளர்ச்சிக்குத் துணையாக இருந்தது. வெள்ளித்திரை நட்சத்திரங்களைத்தான் பொதுவாகத் தேர்தலில் களமிறக்குவார்கள். சின்னத்திரை நட்சத்திரத்துக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது ஸ்மிருதி இரானியைப் பார்த்தே பலர் அறிந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர் பொறுப்பு
பா.ஜ.க.வின் மகாராஷ்டிர மாநில இளைஞரணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்மிருதி, 2005-ல் பா.ஜ.க. மத்தியக் குழுவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கட்சி மீது கொண்ட பற்றால் அவர் அடுத்தடுத்த இடங்களுக்கு உயர்த்தப்பட்டார். 2010-ல் பா.ஜ.க. தேசிய செயலாளர் பதவியும் அதனுடன் தேசிய மகளிரணித் தலைவர் பதவியும் கிடைத்தன. படிப்படியாக முன்னேறி பின்னாளில் தவிர்க்க முடியாத தலைவராக உருவானார் ஸ்மிருதி இரானி.
2011-ல் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். 2014 மே 26 முதல் 2016 ஜூலை 5 வரை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2016-ல் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தவர், 2017 ஜூலை 18 முதல் 2018 மே 24 வரை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
ஸ்மிருதியின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சை பெரிய அளவில் விவாதமானது. தனது கல்வித் தகுதியை மாற்றி மாற்றி அவர் குறிப்பிட்டது, அவரது அரசியல் பயணத்தில் சிறு பின்னடைவானது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து தேர்தலில் வென்று தற்போது ஜவுளித் துறையுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் பெண் அமைச்சரும் இவரே.
- சிவா