பெண்கள் அடுப்படியில் இருந்தாலும் அரசியலில் இறங்கினாலும் ஆணாதிக்கச் சங்கிலி அவர்களின் காலி லிருந்து இன்னும் அறுபடவில்லையோ என்ற சந்தேகத்தைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்றிருந்தனர் நடிகைகளான மிமி சக்கரவர்த்தியும் நுஸ்ரத் ஜஹானும். ஜாதவ்பூர், பசிராத் தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட இருவரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றனர்.
மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களான மிமி, நுஸ்ரத் இருவரும் தங்களுடைய நாடாளுமன்ற முதல் நுழைவு ஒளிப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டனர்.
நாகரிகம் உடையில் இல்லை
அவர்கள் இருவரும் மேற்கத்திய ஆடை களை அணிந்துகொண்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தப் படம் பல ஆணாதிக்கவாதிகளின் கண்களை உறுத்திவிட்டது. உடனே பிற்போக்கான கருத்துகளை எல்லாம் அறிவுரை என்ற போர்வையில் வாரிவழங்கத் தொடங்கிவிட்டார்கள். ‘நாடாளுமன்ற பாரம்பரியத்தை அவமதிப்பதுபோல் இவர்களுடைய உடை உள்ளது’, ‘நாடாளுமன்ற உறுப்பினராகக் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் சேலைதான் அணிந்து செல்ல வேண்டும்’, ‘நாடாளுமன்றம் ‘டிக்டாக்’ வீடியோ எடுக்கும் இடமல்ல’, ‘நாடாளுமன்றம் ஆடை அலங்காரப் போட்டி நடைபெறும் இடம் கிடையாது’ என எல்லாப் பழமைவாதக் கருத்துகளையும் அவர்கள் இருவரது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு அவர்களை மோசமாக வசைபாடினார்கள். ஆனால், அவற்றுக்குப் பதிலடியாக, ‘பெண்களின் ஆடை குறித்து இவ்வளவு தீவிரமாக விமர்சிக்கும் இவர்கள் நாடாளுமன்றத்தின் முன்பு கடந்த ஆண்டு தமிழகப் பெண் விவசாயிகள் அரை நிர்வாணமாகப் போராடியபோது எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை.
குழந்தைகள், பெண்கள் மீது வன்முறைகள் நடைபெறும்போது இவர்களுடைய ‘பெண்கள் மீதான பாதுகாப்பு’ காணாமல் போய்விட்டதா? குழந்தைகளும் பெண்களும் கடத்தப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்க இவர்கள் குரல்கொடுத்தார்களா?’ என்பது போன்ற கேள்விகளும் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிமி, நுஸ்ரத் இருவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். ‘ஆடை என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை’, ‘நாகரிகம் சமூக முன்னேற்றத்தில்தான் உள்ளது; பெண்களுடைய ஆடைகளில் அல்ல’ என்பது உள்ளிட்ட பல ட்வீட்கள் பழமைவாதக் கருத்துகளைப் பேசியவர்களுக்குத் தக்க பதிலடியாக அமைந்தன.