பெண் இன்று

போகிறபோக்கில்: கேமராவுக்குப் பின்னால் அசத்தும் அனிதா

ஜிப்ஸி

ஒளிப்படத் துறைக்குப் பெண்கள் வந்து பல காலம் ஆகிவிட்டது. ஃபேஷன் போட்டோகிராபிக்கு போஸ் கொடுக்கும் மாடல்கள் பலர் இருக்கலாம். ஆனால், அந்த மாடல்களைப் படம் எடுக்கும் பெண்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்குத் தன் திறமையால் பதில் சொல்கிறார் அனிதா மூர்த்தி.

சென்னையைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி. கல்லூரியில் படித்தபோது தனிப்பட்ட ஆர்வத்தால் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கியவர், தற்போது தொழில்முறை ஒளிப்படக் கலைஞராகக் கோலோச்சுகிறார். ‘ஸ்ட்ரீட் போட்டோகிராபி’யில் தன் பயணத்தைத் தொடங்கியவர் WE இதழின் அட்டைப் படத்துக்குத் திரைப் பிரபலங்களைப் படம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

இருவேறு துருவங்கள்

“ஸ்ட்ரீட் போட்டோகிராபி, ஃபேஷன் போட்டோகிராபி இரண்டும் முற்றிலும் வேறானவை. ஸ்ட்ரீட் போட்டோகிராபி முகம் அறியாத மக்களோடு தொடர்புடையது. பலவிதமான மனிதர்களைச் சந்திக்க நேரிடும். சிலர் தங்களைப் படம் எடுப்பதை விரும்ப மாட்டாங்க. சிலர் கடுமையா நடந்துக்குவாங்க. இன்னும் சிலர் ரொம்ப ஆர்வமா எடுத்த படத்தை பிரிண்ட் போட்டுத்தரச்சொல்லிக் கேட்பாங்க. இப்படிப் பலதரப்பட்ட புதிய மனிதர்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அதே நேரம், குறிப்பிட்ட அந்தத் தருணத்தை நாம மிஸ் பண்ணிட்டோம்னா அவ்ளோதான். மறுபடியும் அந்தக் காட்சி கிடைக்காது.

ஃபேஷன் போட்டோகிராபியைப் பொறுத்த வரைக்கும் இந்த மாதிரியான சவால்கள் குறைவு. லைட்டிங் பத்தின அறிவை அதிகம் வளர்த்துக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரீட் போட்டோகிராபில கிடைக்கிற வெளிச்சத்தைக் கொண்டு படமெடுத்தாப் போதும். ஆனா, இதுல எப்படி லைட் செட் பண்றமோ அதைப் பொறுத்துதான் படத்தோட ரிசல்ட் அமையும்” என்கிறார் அனிதா.

இன்னும் தூரம் அதிகம்

திரைப்பிரபலங்களான யாஷிகா ஆனந்த், ஹரிஷ் கல்யாண், காயத்ரி, சந்தோஷ் நாராயணன் ஆகியோரை மெச்சக்கூடிய ஒளி அமைப்பில் படம் எடுத்திருக்கிறார் அனிதா. அந்தப் படங்கள் WE இதழின் அட்டைப்படங்களாக வெளி யாகியிருக்கின்றன. தனது படங்களைத் தொகுத்துக் கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகக் கூறும் அனிதா, அதற்கு இத்துறையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகம் என்கிறார்.

“ஒளிப்படத் துறையில் ஆண்கள் அளவுக்குப் பெண்கள் இல்லைன்னாலும், இன்னைக்கு அவங்களுக்கு நிகராக வந்துகிட்டிருக்காங்க. குறிப்பா, ஃபேஷன் போட்டோகிராபியில் பெண்கள் நிறையப் பேர் களம் இறங்கியிருக்காங்க. ஆனா ‘வைல்ட்லைஃப் போட்டோகிராபி’ மட்டும் எனக்கு ஒத்துவராதுன்னு தோணுது. அதைத் தவிர்த்துட்டு ஒளிப்படத் துறையில் வேறு பிரிவுகள்ல படம் எடுக்கணுங்கிறது என் விருப்பம்” என்கிறார் அனிதா.

SCROLL FOR NEXT