பெண் இன்று

போகிற போக்கில்: பென்சில் நுனியில் விரியும் உலகம்

பவானி பழனிராஜ்

புற உலகைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றிலிருந்துத் தன்னை மீட்கவே ஓவியங்கள் வரையத் தொடங்கியதாகச் சொல்கிறார் தேவகி கந்தசாமி.

ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர், எம்.டெக் பயோடெக்னாலாஜி பட்டதாரி. வங்கி அதிகாரியான அப்பா உடல்நலக் கோளாறுகளால் இறந்துவிட, ஐஐடியில் கிடைத்த ஆராய்ச்சி படிப்பைக் கைவிட்டு வீட்டில் முடங்க வேண்டிய கட்டாயம் தேவகிக்கு ஏற்பட்டது. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளானார். வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வீட்டில் முடங்கினார். பிறகு தோட்டம் அமைப்பது, வாசிப்பது என ஒருவழியாக மனதை மடைமாற்ற முயன்றார்.

அப்போது சிறு வயதில் மாநில அளவில் பரிசுபெற்றுத் தந்த ஓவியம் அவர் கண்முன்னே வந்துசென்றது. உடனே ‘பென்சில் ஆர்ட்’ எனப்படும் கறுப்பு வெள்ளை ஓவியத்தை வரைந்து, அதை முகநூலில் பதிவிட்டு மறந்துவிட்டார். ஆனால், அந்த ஓவியம் பல ஆயிரம் பேரைச் சென்று சேர்ந்தது. முகநூல் நண்பர் ஒருவர் தன் சிறுகதைக்கும் வலைப்பூ கட்டுரைகளுக்கும் ஓவியங்கள் வரைந்து தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார். முதன்முறையாக அந்த ஓவியங்களுக்குக் கிடைத்த ஆயிரம் ரூபாய் சன்மானம்  உற்சாகத்தை அதிகரிக்க, அன்று முதல் தூரிகையும் ஓவியமுமாக தேவகி மாறிவிட்டார்.

“சிறு வயது முதலே வண்ண ஓவியங்கள் மீது எனக்கு ஈர்ப்பில்லை. கறுப்பு வெள்ளை ஓவியத்தில்தான் உயிரோட்டம் இருப்பதுபோல் தோன்றும்” என்கிறார் தேவகி.

கதை சொல்லும் முகங்கள்

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களது படத்தை ஓவியமாகத் தீட்டுகிறார். அது நிஜத்தைத் தோற்கடித்துவிடும் அளவுக்கு அற்புதமாக இருக்கிறது.  “மனித முகங்கள் எப்போதும் ஏதாவதொரு கதையைச் சொல்லும். போட்டோ எடுக்கும்போது அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ அதே உணர்வு என் ஓவியத்தைப் பார்க்கும்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவேன்” என்று கூறும் தேவகி, திரைத் துறை தொடங்கி பிற துறையைச் சேர்ந்த பிரபலங்களின் ஒளிப்படங்களுக்கும் ஓவிய வடிவம் கொடுத்திருக்கிறார்.

pogirajpg தேவகி கந்தசாமிright

குறும்படங்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள் எனப் பலவற்றுக்கும் வரைந்துவருகிறார். படிப்பைத் தொடராமல் ஓவியத்தில் கவனம் பதித்த தேவகிக்கு அவருடைய அண்ணன் சுந்தர்பாரதி ஊக்கமளித்துவருகிறார்.

“பொழுதுபோக்காக வரைந்துகொடுத்த ஓவியத்தால் இன்று வருமானம் ஈட்டுவேன் எனக் கனவில்கூட நினைத்ததில்லை. விருப்பமான கலையே இப்போது வேலையாக மாறிவிட்டது. யாரிடமும் முறையாகக் கற்காமல், நானே வரைந்து பழகிவிட்டேன். அதனால், கற்பனையாக வரைவதைவிட, ஏற்கெனவே உள்ளவற்றை  வரைவதுதான் என் தேர்வு” என்கிறார் தேவகி.

SCROLL FOR NEXT