பெண்கள் தனியாகப் பயணம் செல்லத் தயங்குவதற்குப் பாதுகாப்புக் குறைவும் ஒரு காரணம். ஆனால், படிப்பு, வேலை எனப் பல்வேறு காரணங்களால் பெண்கள் தினமும் தனியே பயணம் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காகச் செயலி ஒன்றை ரயில்வே காவல் துறையினர் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.
கட்டணமில்லா 1512 என்ற எண்ணுக்கு அழைத்தால் ரயில்வே காவல் துறையினர் உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்கிறார் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு.
மக்கள் நடமாட்டம் இல்லாத ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பெண்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீடியோவையும் வெளியிட்டிருந்தனர். மகளிர் தினத்தையொட்டி அது வைரலானது.
உதவிக்கு உடனே அழையுங்கள்
சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தினமும் வெளிமாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் வரும் பெண்களின் எண்ணிக்கை முன்பைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது ரயிலைத் தவறவிட்டாலோ ரயிலுக்காகக் காத்திருக்கும்போதோ பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தாலோ பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.
குறிப்பாக, மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் ரயில்களுக்காகக் காத்திருப்பதே பெரும் அவதி. “இதுபோன்ற சூழ்நிலையில் 24 மணிநேரமும் செயல்படும் இலவச உதவித் தொலைபேசி எண்ணை (1512) அழைக்கலாம்’’ என்கிறார் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு.
மேலும் அவர், “நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த உதவி எண்ணால் எந்த ரயில் நிலையத்திலிருந்தும் உதவிக்கு அழைக்க முடியும். அதேபோல் ரயில்வே காவல் துறையினர் ஏற்கெனவே உருவாக்கியிருக்கும் GRP Help App என்கிற செயலியைப் பதிவிறக்கம் செய்து, பயணியின் இருப்பிடத் தகவலை அதில் பகிர்ந்துகொண்டால் போதும். ஜிபிஆர்எஸ் உதவியுடன் சம்பந்தப்பட்ட பயணியைக் கண்காணிக்க முடியும். ஒருவேளை அவருக்கு ஆபத்து நேர்ந்தால் அந்தச் செயலில் உள்ள SOS பொத்தானை அழுத்தினால் போதும்.
சம்பந்தப்பட்ட பயணி பயணம் செய்துகொண்டிருக்கும் ரயிலின் அடுத்த நிறுத்தத்துக்கு ரெட் அலர்ட் தகவல் கொடுக்கப்பட்டு அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். சேலம், சென்னை போன்ற நகரங்களில் இந்தச் செயலி மூலம் பல குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் ரயில் நிலையங்களில் வழிதவறியோ வீட்டில் கோபித்துக்கொண்டோ வரும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க ‘உதயம்’ என்ற திட்டம் ரயில்வே காவல் துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் ரயில்வே காவல் துறையினர் மட்டுமல்லாது ரயில்வே துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அதிக எண்ணிக்கையில் பெண் ரயில்வே காவலர்கள் நியமிக்கப்பட்டு, பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்படவுள்ளனர்” என்றார்.