ஆன்மாவை உலுக்கிய எழுத்து
அல்டா மெரினி, இத்தாலியின் நேசத்துக்குரிய எழுத்தாளர்; கவிஞர். இளம் வயதிலேயே எழுத்துலகின் அசைக்க முடியாத ஆளுமையாகப் போற்றப்பட்டவர். சிந்தனைச் செறிவுமிக்கக் கூர்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரது வாழ்க்கை 20 ஆண்டுக்கும் மேலாக மனநலக் காப்பகத்தில் கழிந்தது. அந்த வாழ்வு அவரது எழுத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனத்தின் ஓட்டத்தையும் கட்டற்ற உணர்ச்சிப் பிரவாகத்தையும் தனித்துவ நடைகொண்ட எழுத்தில் அடக்கினார்.
எழுத்தின் மீதான அவரது பேரார்வமும் அவர் எழுத்தில் இருக்கும் உண்மையும் வாசிப்பவரின் ஆன்மாவை உலுக்கின. சக்திவாய்ந்த, தனித்துவ நோக்குகொண்ட எழுத்து அவருக்கு உலகெங்கும் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. ‘தி அதர் ட்ரூத், டைரி ஆஃப் எ டிராப் அவுட்’ எனும் கவிதை அவரது படைப்பின் உச்சம் எனக் கருதப்படுகிறது. நோபல் பரிசுக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார். அவரது கவிதைக்காக ‘இத்தாலியன் ரிபப்ளிக்’ விருதைப் பெற்றார். அவரது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 21 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
மரங்களின் தாய்
தனக்குக் குழந்தையில்லை என்ற குறையை மறக்கச் சாலைகளில் மரக்கன்றுகளை நடத் தொடங்கிய திம்மக்காவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்துச் சிறப்பித்துள்ளது. பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டாத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 107 வயது முதியவரான இவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களில் ஒருவர். மரங்கள் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகின்றன எனக் கூறும் திம்மக்கா ‘மரங்களின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.
தன் வாழ்நாள் முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக் கன்றுகளை ஒரே ஆளாக நட்டிருக்கிறார். 107 வயதிலும் உற்சாகம் குறையாமல் புதிய மரக் கன்றுகளை நடுகிறார். அமெரிக்கா வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கிளை ஒன்றுக்கு திம்மக்காவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மரங்களைத் தன் குழந்தைகளைப் போல் பார்த்துக்கொள்ளும் இவர், இயற்கை ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார்.
ஏபெல் பரிசு பெற்ற முதல் பெண்
கணிதத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஏபெல் பரிசு, நோபல் பரிசுக்கு இணையானது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நார்வேயின் புகழ்பெற்ற கணிதமேதையான ‘நெய்ல்ஸ் ஹென்ரிக் ஏபெல்’ பெயரில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பரிசு, வகைக்கெழு சமன்பாட்டில் மேற்கொண்ட ஆய்வுக்காக கரேன் உல்லேபெக்குக்கு வழங்கப்பட்டது.
ஏபெல் வரலாற்றில் அந்தப் பரிசைப் பெறும் முதல் பெண் இவர். வடிவியல் பகுப்பாய்வு, பாதைக் கோட்பாடு ஆகியவற்றில் கரேன் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் கணிதத்தின் எல்லையை மாற்றி அமைத்து இருப்பதாக, ஏபெல் பரிசுக் குழுவின் தலைவர் ஹான்ஸ் முந்தே காஸ் தெரிவித்துள்ளார். 76 வயது கரேன், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
பின்னோக்கிச் செல்கிறோமா?
நிறைமாதக் கர்ப்பிணியான பொம்மி, பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகித் தனியாக வந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையிலிருந்த பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடலை மருத்துவர்கள் அகற்றினர். பொம்மிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில்நுட்பமும் மருத்துவமும் உச்சத்தில் இருக்கும் இந்த நாளில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல; அவமானத்துக்கும் உரியது.
நோபலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பள்ளி மாணவி
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரெட்டா துன்பெர்க் (16) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டி, ஸ்வீடன் நாடாளுமன்ற வாசலில் சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். மேலும், உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து கிரெட்டா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாடினார். அது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளி அன்றும் பள்ளிக்குச் செல்வதை விடுத்து, நாடாளுமன்ற வாசலில் உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.
இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக் குறித்து கிரெட்டா கூறுகையில், “அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கவுரவமாகவும் ஆசியாகவும் கருதுகிறேன்” என்றார்.