பெண் இன்று

பெண்கள் 360: உலக மகளிர் தினம்

முகமது ஹுசைன்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வோரு குறிக்கோளை முன்னிறுத்தியே மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்ட சில முக்கிய குறிக்கோள்கள் இங்கே:

2010: போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரம்

நாகரிகத்தின் மேன்மையால் மனிதகுலம் மேம்பட்டாலும், பேராசையால் நிகழும் போர்கள் நின்றபாடில்லை. நவீன தொழில்நுட்பங்கள், போர்களில் மனித உயிர்களைக் கொத்து கொத்தாகக் காவுவாங்குகின்றன. போர்கள் கொடுமையானவை. போர்களால் பெண்களே மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். போர்களில் பெண்கள் கொல்லப்படுவதைவிட, வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதே அதிகம்.

2010jpg

உலகெங்கும் போர்களால் உடலை இழந்து, உறவை இழந்து, உடைமையை இழந்து ஓர் இடத்திலிருந்து மறு இடத்துக்கு அனாதைகளாகப் பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். வாழ்வை இழந்து வாழும் வாழ்க்கையின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெண்களின் அத்தகைய வலியை, உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கில், 2010 மகளிர் தினத்தன்று போரால் இடம்பெயர்ந்த பெண்களின் வலியைச் செஞ்சிலுவை சங்கம் நினைவுகூர்ந்தது.

2011: அமெரிக்காவின் நூறாவது மகளிர் தினம்

2011-ல் 100-வது மகளிர் தினம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா, 2011 மகளிர் தினத்தை ‘மகளிரின் வரலாற்று மாதம்’ என அறிவித்தார். சர்வதேச பரிவர்த்தனைகள் மூலம் பெண்களை மேம்படுத்தும் நோக்கில், ‘பெண்கள் முன்னெடுப்பு 100’ என்ற திட்டத்தைத் தொடங்கினார்.

2011jpgright

‘வல்லுறவுக்கு எதிராகவும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து, பெண்களுடைய வாழ்வின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்’  என செஞ்சிலுவை சங்கம் கோரியது. எகிப்தில் மட்டும் அந்த நாள் பெண்களுக்குப் பின்னடவை ஏற்படுத்தியது.

தங்களது உரிமைகளுக்காக தாஹீர் சதுக்கத்தில் கூடிய பெண்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். காவல் துறையும் ராணுவமும் அந்தத் தாக்குதலைக் கைகட்டி வேடிக்கை பார்த்தன.

2012: கிராமப்புறப் பெண்களை மேம்படுத்துவோம்

 ‘வறுமையை ஒழிப்போம்; பசியைக் களைவோம்; கிராமப்புறப் பெண்களை மேம்படுத்துவோம்’ என்பதை 2012 மகளிர் தினத்தின் முழக்கமாக ஐ.நா. சபை அறிவித்தது. தடைகளைத் தாண்டி சாதனைகள் புரிந்த சாமானிய பெண்களை இனம்கண்டு, அவர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பும்படி கோரப்பட்டது.

பெண்களின் மேன்மைக்கு உதவிய அந்தச் சாமானிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  போரால் தங்களுடைய மகனையோ கணவரையோ பறிகொடுத்த பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

2013: வாக்குறுதி என்பது ஒரு வாக்குறுதியே

‘வாக்குறுதி என்பது ஒரு வாக்குறுதியே’ என்பதை 2013 மகளிர் தினத்தின் முழக்கமாக ஐ.நா சபை அறிவித்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் தருணம் இது என்று ஐ.நா. அறிவித்தது. சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு நேரும் அவலங்களைச் செஞ்சிலுவைச் சங்கம் வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியது. ‘மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன’ என்று 2013-ல் ஐ.நா. அறிவித்தபோதிலும், இன்றும் மாற்றங்கள் நிகழ்ந்தபாடில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.

2016: 2030-ல் உலகம் 50-50

பாலினச் சமத்துவத்தை 2016 மகளிர் தினத்தின் குறிக்கோளாக ஐ.நா. அறிவித்தது. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, “பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவிய மகளிருக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்” என்று தெரிவித்தார்.

மார்ச் 8 அன்று நான்கு புதிய ‘பெண்கள் இடர்களையும் மையங்’களைப் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கிவைத்தது. பெண்களே இயக்கிய நீண்ட தூர விமானப் பயணத்தை ஏர் இந்தியா நிறுவனம் மகளிர் தினத்தன்று ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவுக்குச் சென்ற அந்த விமானம் 17 மணி நேரத்தில் 14,500 கி.மீ. தொலைவைக் கடந்து சாதனை படைத்தது.

2019: சமநிலை தரும் நலவாழ்வு

 ‘சமநிலை தரும் நலவாழ்வு’ என்பதை 2012 மகளிர் தினத்தின் முழக்கமாக ஐ.நா சபை அறிவித்தது. ‘பெண்களிடம் இனியும் பாகுபாடு காட்ட முடியாது. அவர்களின் குரலை இனியும் அடக்க முடியாது’ என்பதைப் பெண்கள், உலகுக்கு உணர்த்தியுள்ளனர். ஆணும் பெண்ணும் சமம் என்பதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்பதே இன்றைய நிதர்சனம்.

உலகின் மேன்மைக்கும் நமது வாழ்வின் நலனுக்கும் இருபாலரும் அவசியம் தேவை என்பதை மறுக்க முடியாது. பெண்ணியவாதிகளின் உலகளாவியப் போராட்டங்கள் அனைத்தும் பாலின சமநிலையை முன்னிறுத்தியே நடக்கின்றன.  சமநிலையின்மையின் பாதிப்புகளை உணர்ந்த உலகம், சமநிலையைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. பாலின சமநிலையை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்டதால், வருங்காலம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT