பெண் இன்று

கற்பிதமல்ல பெருமிதம் 50: மீண்டு எழுவதே வாழ்க்கை

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி சம்பவம் குறித்து சில பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உரையாடியபோது வந்த கேள்விகள்/பகிர்வுகளிலிருந்து சில:

“பெண்கள் தைரியமாக இருக்கணும்னு சொல்றீங்க. ஆனால், பெண்கள் இப்படித்தான் இருக்கணும்னு சொல்லி சமுதாயமும் பெற்றோர்களும் கட்டளையிட்டுப் பயமுறுத் தறாங்க. இதனால்தான் பெண்கள் அதிகமா பயப்படறாங்க. இந்தச் சமூகம் பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படிக் கட்டளையிடுகிறது?”

“நீண்ட நாட்களாகப் பழகிய நண்பன் திடீரென தகாத வார்த்தைகளால் தப்பான நோக்கத்துடன் பேசினால் அவனிடம் இருந்து விலகுவது நல்லதா? அந்தத் தவறை அவனுக்குப் புரியவைப்பது நல்லதா?”

“பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் திருமணம் ஆகுமா? அவங்க இழந்த வாழ்க்கையைத் திரும்பப்பெற முடியுமா?”

பயத்தை வெல்வோம்

பாலியல் உறவுகளில் வரக்கூடிய பிரச்சி னைகள், சிக்கல்கள் குறித்துத் தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் பயத்தில் உறைந்து நிற்கிறார்கள். பெண்ணாகப் பிறந்ததாலேயே இப்படித் துயரப்பட வேண்டியிருக்கிறது என்று மற்ற பெண்கள் கலங்குகிறார்கள். நாம் பெண்களின் இத்தகைய உணர்வுகளை உடனடியாகக் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது.

சுற்றிலும் நடக்கக்கூடிய சம்பவங்களால் இன்று பல பெண்களும் உள்ளுக்குள் வாழ்க்கை குறித்த அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்ணாகப் பிறந்திருப்பது பற்றி, ஆண்-பெண் உறவு பற்றி, திருமணம் பற்றி அவர்களுக்குள் பல கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் மனதுக்குள் இப்போது இருக்கும் பயத்தையும் அவநம்பிக்கையையும் தாண்டிவரப் பழக்க வேண்டும்.

ஏன் நம்பிக்கை இல்லை?

இளம் வயது ஆண்களும் பெண்களும் அன்புக்கு ஏங்குகிறார்கள். நீ அழகு, உன் பேச்சு அழகு, நடை அழகு என யாராவது பாராட்டினால் அதற்குப் பின்னால் உள்ள நோக்கம் அவர்களுக்குப் புரிவதில்லை.

ஃபேஸ்புக் செய்திகளையும் நெருக்கமான போட்டோவையும் காட்டி மிரட்டப்பட்டபோது யாரோ ஒருவரிடம் போய் மாட்டுவதை விட, திட்டினாலும் பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் பிரச்சி னையைச் சொல்லியிருக்கலாம். அவர்கள் உதவியாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியிருந்தால் நம்பிக்கைக்குரிய வேறு பெரியவர்களை நாடியிருக்கலாம்.

“நம்பித்தானே வந்தேன் அண்ணா” என்று முகமறியா நபரின் மேல் இருக்கும் நம்பிக்கை, குடும்பத்தினரிடமோ ஆசிரியரிடமோ வரவில்லை. இதற்குக் காரணம் குடும்பங்களும் கல்வி நிறுவனங்களும் கூடத்தான். தன் சுகம், துக்கம், கோளாறுகள் என எதையும் ஒரு பெண் பகிர்ந்தால் விமர்சனங்கள் இல்லாமல் பெரியவர்களால் அதை அணுக முடிவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த தீர்ப்பு, படிப்பை விட்டு நிறுத்துவதும் டி.சி கொடுத்து அனுப்புவதும்.

குடும்ப மானம் போச்சு என்று மறுகி நிற்கவும் வேண்டாம்; நீ தேவையில்லை என்று அந்தப் பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டவும் வேண்டாம். தைரியமாகத் துணைநில்லுங்கள். அந்த ஊரில் இருக்க முடியவில்லையா, பரவாயில்லை. பாதுகாப்பான வேறு ஊருக்குப் பெண்ணை அனுப்பிவையுங்கள். அவள் படிக்கட்டும்; சொந்தக் காலில் நிற்கட்டும்.

மீண்டு எழுவோம்

காதல் விவகாரத்தில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பிறகும் வாழ்க்கையை நம்பிக்கையோடு அணுகிய பெண்கள் நம்மிடையே இருக்கிறார்கள். மண வாழ்வில் கொடுமையைச் சந்தித்து, தைரியமாக வெளியே வந்தவர்கள் இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகும் உறுதியாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களை இயக்குவது எது?

இவர்களிடம் உள்ள மீண்டு எழும் தன்மைதான். ‘பிரச்சினையிலிருந்து மீண்டு எழு’ என்பது பிரச்சினையைச் சகித்துக்கொள் என்பதல்ல. நிகழ்ந்ததற்கு ஒடுங்கி வீணடிப்பதற்கா வாழ்க்கை?

உள்ளுக்குள் நிகழும் போராட்டம்

யாரோ செய்த தவறுக்கான தண்டனையை நாமே நம் மேல் ஏன் சுமத்திக்கொள்ள வேண்டும்? சமூகம் சுமத்தவும் ஏன் விட வேண்டும்? இன்றைக்கு வாழ்க்கையில் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் மன அமைதியோடும் இருக்கும் பலருக்கும் வாழ்க்கை எப்போதும் மலர்ப்படுக்கையாக இருந்ததில்லை. முட்கள் கலந்த பாதையில் ரத்தம் வடிய அவர்கள் நடந்து வந்திருப்பார்கள். எதுவும் என்னை வீழ்த்த விட மாட்டேன்; வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நம்பிக்கையோடு வாழ்வை அணுகியவர்கள் அவர்கள்.

இளம் பெண்களே, பேச்சுக்காகச் சொல்லி விட்டுப் போவதாக நினைக்க வேண்டாம். வெளியே மோசமான சூழலோடு போராடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உள்ளுக்குள் நமக்கான அமைதியைத் தேடுவது. அறச்சீற்றம் வேண்டும். ஆனால், அந்தச் சீற்றம் நம்மை மனதளவிலும் உடல் அளவிலும் சுக்கு நூறாக்குவதற்கு அல்ல.

மாறுபடும் உணர்வுகள்

அமில வீச்சால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சிலர் நொறுங்குகிறார்கள். சிலர் மீண்டு எழுகிறார்கள். நடந்த சம்பவம் அமில வீச்சு. அதை ஒட்டி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகள் தோன்றுகின்றன. கோபம், ஆத்திரம், கையாலாகாத்தனம், வெளியே வர வேண்டும் என்ற எண்ணம். இப்படி நடந்த ஒரு சம்பவத்தை ஒட்டி வெவ்வேறுவிதமாக வரக்கூடிய உணர்ச்சிக்குக் காரணம் என்ன?

சம்பவம் ஒன்றுதான்; உணர்ச்சி மாறுபடுகிறது என்றால் காரணம் நாம் அந்தச் சம்பவத்தை அணுகுகிற விதம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும் நமக்கு வெவ்வேறு விதமான நம்பிக்கைகளைத் தருகின்றன. அந்த நம்பிக்கையின் அடிப் படையிலேயே நமக்கு நடக்கும் சம்பவம் நமக்கான உணர்ச்சியைத் தருகிறது. ஆக, சம்பவத்தால் உணர்ச்சி வரவில்லை.

சம்பவத்தை நாம் பார்க்கிற பார்வையால்தான் உணர்ச்சி வருகிறது. சம்பவத்தை மாற்றப் போராடுவது ஒரு புறம் என்றால், இப்படித் தொடர்ந்து சம்பவம் நடக்கிறபோது நாம் பார்க்கிற பார்வையை மாற்றிக்கொண்டால் அது தொடர்பான உணர்ச்சியையும் மாற்ற இயலும்.

நம்பிக்கையோடு அணுகுவோம்

பொள்ளாச்சி விவகாரம் மட்டும் இல்லை. இன்றைக்கு எந்தவிதமான பாதிப்புக்குள்ளா கிறவர்களின் அணுகுமுறையும் நம்பிக்கை வாதமாகத்தான் இருக்க வேண்டும். மீண்டு எழும் தன்மைக்கு முக்கியமாகத் தேவைப்படுவது நம்பிக்கைவாதம்.

“பொள்ளாச்சி விஷயம் பற்றிப் படிப்பதும் கேட்பதும் மனத்தைச் சோர்வுறச் செய்கிறது. ஆண்களைப் பார்த்தாலே பயமாகவும் அருவருப்பாகவும் இருக்குது. வீட்ல அப்பாவோ அண்ணாவோ பாசமாகவோ தெரியாமலோ லேசா தொட்டாலும் கோபமாகவும் வெறுப்பாகவும் இருக்கு. கண்ல இருந்து தண்ணி தண்ணியா வருது. இதுல இருந்து எப்படி வெளியே வருவது?”

“ஆண்களைப் பாத்தாலே பயமாக இருக்கிறது. எல்லா ஆண்களும் மோச மானவர்களா? இப்படியான சிந்தனைக்கான நிரூபணம் என்ன? பொள்ளாச்சி சம்பவம் இப்படிச் சிந்திக்க வைத்தது என்றால், இத்தகைய சிந்தனை என் வளர்ச்சிக்கு உதவுமா? இந்த விஷயத்தை நான் வேறு கோணத்தில் பார்க்க முடியாதா?

இது என் எதிர்காலத்தைப் பாதிக்குமா? நான் இதை வாழ்க்கை முழுவதற்குமான பிரச்சினையாகப் பார்க்கப் போகிறேனா? நான் என் ஒட்டுமொத்த வாழ்வைப் பற்றி யோசிக்கப் போகிறேனா அல்லது இந்தப் பிரச்சினையிலேயே தேங்கிவிடப் போகிறேனா?”

- யோசியுங்கள். விடை தேடுங்கள். நம்பிக்கையோடு வாழ்க்கையை அணுகுவது பற்றிச் சிந்தியுங்கள். அப்படிச் சிந்திக்கும்போது வரக்கூடிய சிந்தனைப் பள்ளங்கள் (Thinking Traps) பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்…

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

SCROLL FOR NEXT