ஒரு மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டும் அடுத்த ஒரு மணி நேரம் படுத்துக்கொண்டும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பார்வதி கோவிந்தராஜ்.
ஆனால் தன் உடல்நிலை குறித்துக் கவலைப்படாமல் இந்த நிலையிலும் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிவருகிறார்.
பிறந்தது திருவாரூர், மணம் முடித்தது திருத்துறைப்பூண்டி. கணவர் கோவிந்தராஜ் சொந்தமாக ரைஸ் மில் வைத்து நடத்துகிறார். 62 வயதாகும் பார்வதி கோவிந்தராஜின் சுயவிவரக் குறிப்பு இதுதான்.
பார்வதிக்கு இரண்டாவது பிரசவத்தின் போது முதுகுத் தண்டில் சிக்கல் ஏற்பட்டது. கீழே விழுந்ததாலும், எலும்புத் தேய்மானத்தாலும் பார்வதியால் தனியாக நடக்க முடியாது.
அடுத்தவர் உதவியுடனும் வாக்கர் துணையுடனும் நடக்கலாம். அதுவும் சில அடிகள் மட்டுமே. தொடர்ந்து உட்கார்ந்த நிலையில் இருக்க முதுகுத் தண்டு ஒத்துழைக்காது.
அதனால் சிறிது நேரம் உட்கார்வதும், சிறிது நேரம் படுப்பது மாக இருப்பார். உட்கார்ந் திருக்கிற நேரத்தைப் பயனுள்ளதாக்க நினைத்த பார்வதி, தான் சிறு வயதில் கற்றுக் கொண்ட தையல் கலையை மீண்டும் கையில் எடுத்தார்.
முதலில் தன் மகளின் ஆடைகளில் தன் கைவண்ணத்தைக் காட்டியவர், அதற்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து எம்ப்ராய்டரி, பெயிண்டிங், கைவினைக் கலை என்று தன் ஆர்வத்தை அதிகரித்தார்.
அடிப்படைத் தையலை மட்டுமே கற்று வைத்திருந்த பார்வதி, புத்தகங்களைப் பார்த்துப் பலவித தையல்களைக் கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் தையல் வகுப்புகள் எடுத்தவர், உடல்நிலை காரணமாக வகுப்புகளைத் தொடர முடியவில்லை.
வருகிற ஆர்டர்களைச் சரியாக முடித்துக் கொடுத்தாலே போதும் என்கிற பார்வதி, தன் கணவரின் துணையின்றி இது சாத்தியமில்லை என்கிறார்.
"எனக்கு எல்லாமே அவர்தான். தையலுக்குத் தேவையான ஊசி, நூலைக்கூட என்னால கையை நீட்டி எடுக்க முடியாது. நான் சேர்ல உட்கார்ந்துக்கிட்டு அவரைத்தான் எல்லாத்தையும் எடுத்துத்தரச் சொல்வேன். இத்தனை வருஷத்துல அவர் ஒரு முறைகூட முகம் சுளிச்சதே இல்லை.
அந்த அன்புதான் என்னை ஆக்கும் சக்தியா இருந்து வழிநடத்திட்டு இருக்குது. எனக்கு இடது கையில பிடிமானம் இருக்காது. அடிக்கடி வலி எடுக்கும். அதையும் பொறுத்துக்கிட்டுத்தான் இந்த வேலைகளைச் செய்யறேன். இதுவும் இல்லைன்னா வாழ்க்கையில சுவாரசியம் இருக்காதே" என்று புன்னகைக்கிறார் பார்வதி.
பார்வதியின் படைப்புகளைச் சந்தைப்படுத்தும் வேலையை அவருடைய தங்கை ஜுலி பாஸ்கர் செய்கிறார். சென்னையில் இருக்கும் இவர், தன்னால் முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை உருவாக்குவதுடன் தையலுக்குத் தேவையான மூலப் பொருட்களையும் இங்கிருந்து வாங்கி அனுப்புகிறார்.
பாரம்பரியத் தையல் நுணுக்கங்களுடன் இந்தக் காலத்துக்கு உகந்த நவீன கலைப் பொருட்களையும் பார்வதி செய்கிறார். குஷன் கவர், பர்ஸ், அலங்காரப் பைகள், மெத்தை வேலைப்பாடுகள் என இவர் தயாரிக்கும் ஒவ்வொன்றிலும் கலை நயமும் வலியை மீறிய வெற்றிப் பெருமிதமும் பளிச்சிடுகின்றன!
படங்கள்: ஜான் விக்டர்