பெண் இன்று

பக்கத்து வீடு: மக்கள் பிரதமர்!

எஸ். சுஜாதா

பாதுகாப்பான, அமைதியான நாடு என்று கருத்தப்பட்ட கிவி, மார்ச் 15 அன்று தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல்களால் நிலைதடுமாறிவிட்டது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் இரக்கமின்றி சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் ஆரிய இனமே உயர்ந்தது என்ற ஆபத்தான கருத்தைக்கொண்ட அடிப்படைவாதிகள். இந்த மோசமான துயரச் சம்பவத்தைக் கையாண்ட விதத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆடர்ன், உலகத் தலைவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

“நியூசிலாந்தின் கறுப்பு தினம். பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் நாடே பங்குகொள்கிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல். தீவிரவாதிகளுக்கு நியூசிலாந்திலோ உலகின் வேறு பகுதியிலோ இடமில்லை.

தீவிரவாதியின் பெயரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை. இனி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் சட்டம் திருத்தப்படும்” என்று அறிவித்த ஜெசிண்டா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் மூலம் பொருளாதார உதவியும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுக்க உத்தரவிட்டார்.

நொறுங்கிய இதயத்தின் நன்றி

நியூசிலாந்து முழுவதும் துக்கம் அனுசரித்து, மலர்க்கொத்துகள் வைக்கப்பட்டன. பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடைகள் திரட்டப்பட்டன.

சம்பவம் நடைபெற்ற ஒரே வாரத்தில், அதே பகுதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டம் ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டாவும் கலந்துகொண்டார்.

“நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை நடைபெற்றுள்ளது. தீவிரவாதம் மனித குலத்துக்கு விடுத்துள்ள சவால். எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அகதிகளாக இருந்தாலும் அனைவரும் நியூசிலாந்து மக்களே. இது நம் துக்கம். நம் நாட்டின் துக்கம்.

நாம் அனைவரும் ஒன்றே. இங்கே எந்தப் பாகுபாட்டுக்கும் இடமில்லை. இந்தப் பாதகத்தைச் செய்த தீவிரவாதிகள் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். பொதுமக்கள், தீவிரவாதிகளின் செயல்களைப் பற்றிப் பேசாமல், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையாற்றினார் ஜெசிண்டா.

இதைக் கேட்ட பிறகு மசூதியின் இமாம், “எங்களின் இதயம் நொறுங்கியிருக்கிறது. ஆனாலும், நாங்கள் உடைந்துவிடவில்லை. உங்களின் ஆதரவுக்கு நன்றி” என்று ஜெசிண்டாவுக்குப் பதிலளித்தார்.

pakkathujpgright

தெளிந்த சிந்தனையுள்ள தலைவர்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற ஜெசிண்டா, கறுப்பு ஆடையை அணிந்திருந்தார். இஸ்லாமியர்களின் வழக்கப்படி தலையில் முக்காடு போட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களிடம் துயரத்தோடு உரையாடினார். கட்டிப் பிடித்தார். கைகளைப் பற்றிக்கொண்டார்.

“தீவிரவாதிகளின் பிரதிநிதிகளாக நியூசிலாந்து மக்கள் இல்லை. தீவிரவாதிகள் எங்களைச் சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்த நாட்டு மக்களே. நான் சொல்ல விரும்புவது ஒன்றே. எல்லோரிடமும் அன்பை விதைப்போம். வெறுப்பை அன்பால் மறையச் செய்வோம்” என்று கூறினார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த அரசியல் நிபுணர்கள் பலரும் ஜெசிண்டாவின் நடவடிக்கைகளைப் பாராட்டியிருக்கிறார்கள். இதுவரை இவரைப் போல் ஒரு பிரதமரை நியூசிலாந்திலும் பார்த்ததில்லை. உலக நாடுகளிலும் கண்டதில்லை. மக்களை உண்மையாக நேசிக்கும் ஒருவரால்தான் இப்படி இருக்க முடியும். இவரைப் போன்ற வலிமையான, தெளிந்த சிந்தனையுள்ள தலைவர்கள் அரிது என்கிறார்கள்.

உதாரணத் தலைவர்

ஒளிப்படக் கலைஞர் கிர்க் ஹார்க்ரீவ்ஸ், “பாதிக்கப்பட்டவர்களை பிலிப்ஸ்டவுன் மையத்தில் சந்தித்தார் ஜெசிண்டா. அவரது முகத்தில் துயரம் நிரம்பி வழிந்தது. எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. கண்ணாடி வழியே தெளிவாக அவரைப் படம் பிடிக்க முடியவில்லை. ஒரு ஒளிப்படக் கலைஞனாக நான் எடுத்த படங்கள் சரியில்லை என்பேன். ஆனால், இந்தப் படங்களில் உண்மையும் மனித நேயமும் இருப்பதால் உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டன” என்கிறார்.

பிரெஞ்சுக் கவிஞர் கால் டோரபுல்லி, “எங்கள் அறிவுஜீவிகள் மையத்தின் சார்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆடர்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மனு போட்டிருக்கிறோம். கிறைஸ்ட்சர்ச் தாக்குதல் தொடர்பாகத் திறந்த மனத்துடன், அமைதியாக அவர் எடுத்த நடவடிக்கைகளைக் கண்டு வியந்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், தாக்குதல் நிகழ்த்தியவர்கள் என்று பலதரப்பினரிடமும் அவர் நடந்துகொண்ட விதத்தை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. மற்ற தலைவர்களுக்கு எல்லாம் உதாரணமாகத் திகழ்கிறார் ஜெசிண்டா ஆடர்ன்” என்கிறார்.

நியூசிலாந்தில் 15 லட்சம் பேர் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். இதில் 15 ஆயிரம் பேர் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் பயன்படுத்திய இந்தத் துப்பாக்கிக்கு, இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பலரும் தங்கள் துப்பாக்கிகளைத் தாங்களாகவே அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்பிவந்த சில குழுக்கள் மாயமாகிவிட்டன. ஏப்ரல் 11 முதல் புதிய சட்டம் அமலுக்கு வரும் என்கிறார்கள்.

தாக்குதல் நடத்தப்பட்ட 10 நாட்களுக்குள் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்த, 38 வயது ஜெசிண்டா ஆடர்ன் இளமையான பிரதமராக, அனுபவம் குறைந்தவராக இருந்தாலும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஆழமாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருக்கிறது. பெண்களின் கையில் நாட்டைக் கொடுத்தால் என்ன ஆகும் என்று மோசமானவர்களை உதாரணம் காட்டுபவர்களிடம் இனி ஜெசிண்டா ஆடர்னின் பெயரை உரக்கச் சொல்லலாம்.

SCROLL FOR NEXT