பெண் இன்று

முகங்கள்: கட்டிடங்களால் அழகாகும் வாழ்க்கை

ஜிப்ஸி

கட்டிடவியல் சார்ந்த மாற்றுப் பார்வை யுடன் இயங்கிவருகிறார் அருணிமா. ‘அகர்மா’ அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான இவர் கட்டிடவியலில் ‘சிறியதே அழகு’ என்ற கருத்தை முன்வைக்கிறார்.

கண்கவரும் வடிவமைப்புடன் பிரம்மாண்டமாக எழுப்பப்படும் கட்டிடங் களைவிட, சிறிய அளவில் மக்களின் வாழ்க்கைத்தேவைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும் கட்டிடங்களே அத்தியாவசியம் என்கிறார் இவர். கட்டிட வியலோடு வரலாறு சார்ந்த புரிதலையும் ஏற்படுத்தும்விதமாக இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் செயல்பட்டுவருகிறார்.

இருவேறு வாழ்க்கத்தரம்

அருணிமா ஆறாம் வகுப்பு படித்தபோது மும்பையில் ஒரு வீட்டை வாங்கினார்கள். அதற்கு முன்பு அங்கு ‘ராக்கி பாசின்’ என்கிற கட்டிடக்கலை நிபுணர் குடியிருந்தார். அவரது கட்டிட மாதிரிகளும் கருவிகளும் அந்த வீட்டில் இருந்தன. அவற்றைப் பார்த்தபோது அருணிமாவுக்குக் கட்டிடவியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. அன்றுமுதல் கட்டிடங்களின் வடிவமைப்பைக் கவனிக்க ஆரம்பித்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலைக் கட்டிடவியல் படித்தார். அவர் படித்த கல்லூரிக்கு அருகில்  குடிசைப்பகுதி இருந்தது. குறைந்த செலவில் அவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரியான வீட்டை வடிவமைத்துக்கொடுத்தார். “வீடு என்பது வாழ்க்கைத் தரத்தோடு தொடர்புடையது.

பெருநகர மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்துக்குமான வேறுபாட்டை உணர்ந்திருந்தேன். பின்தங்கிய வாழ்க்கைத்தரத்தைக் கொண்டிருக்கும் மக்களுக்காகச் செய்யும் சிறிய அளவிலான பணிகள் அவர்களுக்குப் பெரிய நிறைவைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார் அருணிமா.

புராதனம் சொன்ன பாடம்

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பெங்களூரு வில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணிபுரிந்தார். பிறகு அகமதாபாத்தில் முதுகலைக் கட்டிடவியல் படித்தார். அங்கே கிடைத்த அனுபவம் தன்னுடைய பயணத்தில் மிக முக்கியமானது என அருணிமா குறிப்பிடுகிறார்.

அகமதாபாத்தில் படித்தபோது லடாக்கில் இயங்கிவரும் ‘old town initiative’ என்ற நிறுவனத்துடன் இணைந்து, அங்குள்ள புராதனக் கட்டிடங்களை அவற்றின் பழமை மாறாமல் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பணிபுரிந்தபோது புராதன கட்டிடங்களின் மீதான அவர்களின் பார்வையைத் தெரிந்து கொண்டார். இரண்டு மாதங்கள் பணிபுரிந்த பிறகு அகமதா பாத்துக்குத் திரும்பினார்.

வரலாறும் வணிகமும்

பூர்வகுடிகள் வசிக்கும் பழமையான வீடுகளில் ஒன்றைப் புனரமைத்தார். “பழங்கால வீடுகள் பாரம்பரிய அடையாளத் தோடு இருப்பவை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது போற்றிப் பாதுகாக்கப்பட வேண் டிய சின்னமாக இருக்கலாம். ஆனால், அங்கு வசிப்பவர்களின் தேவைகளுக்கு ஏற்புடையதாக அது இருக்காது.

200 ஆண்டுகள் பழமையான வீடுகள் அவற்றின் பாரம்பரியத் தன்மையோடு அப்படியே இருக்க வேண்டும் என்பதே கட்டிடக்கலை நிபுணர்களின் பார்வை. ஆனால், காலமாற்றத்தில் மக்களின் தேவைகளும் பெருகுகின்றன. குளியலறை, கழிவறை போன்றவை அங்கு வசிக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

பாரம்பரிய கட்டிடக்கலை அதன் வரலாற்றுத் தன்மையை மட்டும் அணுகு கிறது என்றால் நவீனக் கட்டிடக்கலை வணிக நோக்கோடு அணுகுகிறது. அகமதாபாத்தில் திண்ணையை ‘ஓட்லா’ என்பர். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் கூடிப் பேசும் இடம் அது. நவீன கட்டிடக்கலையில் அதற்கான இடம் இல்லை. எனவே, இரண்டுக்கும் இடைப்பட்டுப் பாரம்பரியத் தன்மையைக் காக்கும் அதே நேரம் மக்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் புனரமைப்பே சிறந்தது எனத் தீர்மானித்தேன்” என்கிறார்.  

பாரம்பரிய நடை

ஹைதராபாத்தை ஆய்வுசெய்தபோது, அந்நகர மக்கள் அங்குள்ள புராதனச் சின்னங்களோடு ஒன்றியிருக்கவில்லை என்பதை அருணிமா உணர்ந்தார். ‘Heritage walks’ எனும் செயல்பாட்டைத் தொடங்கினார்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் மக்களைக் கொண்டு ‘பாரம்பரிய நடை’யை ஒருங்கிணைத்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் குடிசைப் பகுதி குழந்தைகளுக்கும் புராதனக் கட்டிடங்களை வரையும் பயிற்சியை அளித்து வருகிறார்.

கௌசிக் என்பவருடன் இணைந்து  ‘அகர்மா’ அறக்கட்டளையை நிறுவியிருக்கிறார். புராதன அடையாளங்கள் குறித்த அறிதலை ஏற்படுத்தும்விதமாக ‘அமேசிங் ரேஸ்’ என்ற விளையாட்டை ஒருங்கிணைத்துவருகிறார்.  “ஒரு பகுதியில் உள்ள பத்து புராதனக் கட்டிடங்களை எடுத்துக்கொள்வோம். சிறுகுறிப்பின் உதவியுடன் போட்டியாளர்கள் அந்தக் கட்டிடங்களைக் கண்டறிய வேண்டும். பொதுமக்களின் உதவியுடன்தான் இதைக் கண்டறிய முடியும். இதன்மூலம் போட்டியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே  புராதனக் கட்டிடம் சார்ந்து உரையாடல் நிகழும். 2016-ல் திருவல்லிக்கேணியில் இதை முதன்முதலாக நடத்தினோம்” என்கிறார் அருணிமா.

அடுத்தத் தலைமுறைக்கு…

வரலாற்றைக் கற்றுக்கொள்ளும்படியான விளையாட்டுகளை அருணிமா வடிவமைத் திருக்கிறார். வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்காக ‘கட்டிடக்கலையும் அது குறித்த உரையாடலும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடலை ஒருங்கிணைத் திருக்கிறார். சென்னை, ஊரூர் ஆல்காட் குப்பத்தில் குப்பைக் கிடங்காக இருந்த இடத்தை சென்னையில் உள்ள கட்டிடக்கலை படிக்கும் மாணவர்களைக் கொண்டு மறு சீரமைப்பு செய்திருக்கின்றனர்.

அந்த இடம் இன்றைக்கு அங்குள்ள குழந்தைகளுக்கான கற்றல்வெளியாக மாறியிருக்கிறது. நாடக விழா, கதை சொல்லுதல், குழந்தை களுக்கான திரைப்படங் களைத் திரையிடல், காகித மடிப்புக் கலைப் பயிற்சி ஆகியவை அகர்மா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

“லாரி பேக்கரின் கட்டிடக்கலையை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கேற்றபடியான கட்டிடத்தை வடிவமைத்துக் கொடுக்கிறோம். அரசுப் பள்ளிகள் தற்சார்புடன் இயங்குவதற்கான வேலை திட்டத்தையும் செயல்படுத்திவருகிறோம். அதன் ஒரு பகுதியாகக் காகித மறுசுழற்சி செய்வதற்கான பயிற்சியைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

தாங்கள் பயன்படுத்திய காகிதத்தை மாணவர்களே மறுசுழற்சி செய்து அடுத்த ஆண்டுக்கான காகிதத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக அது இருக்கும். அன்றாடம் மிச்சமாகும் உணவுப் பொருட்களின் மூலம் உரம் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். அந்த உரத்தைக் கொண்டு செடி வளர்க்கிறார்கள்.

நாங்கள் கற்றுக்கொண்டதைக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் அவர்களுக்குச் சமூகத்தைப் பற்றிய தெளிவான பார்வையும் விழிப்புணர்வும் ஏற்படும் என்று நம்புகிறோம். அதேபோல பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டிடக்கலை மூலம் மேம்படுத்த முடியும்” என்கிறார் அருணிமா.

SCROLL FOR NEXT