பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான பாக்சோ சட்ட அமலாக்கம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012-ல் இருந்து குற்றப் பத்திரிகை செய்யப்பட்ட 121 வழக்குகளில் ஒரே ஒரு பாதிக்கப் பட்டவர்தான் இடைக்கால இழப்பீடைப் பெற்றிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை யிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், பாதிக்கப்பட்ட வர்களைக் குணப்படுத்தும் மையமான துளிர் அமைப்பைச் சேர்ந்த வித்யா ரெட்டி, குழந்தைகள் பாலியல் வன்முறை தொடர்பாகப் போதுமான விழிப்புணர்வு காவல்துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் இல்லை என்பதைக் காரணமாகக் கூறுகிறார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு உண்டு என்ற தகவலே பலருக்கும் தெரிவதில்லை என்பது தங்களது அனுபவத்தில் தெரியவந்ததாக வித்யா ரெட்டி குறிப்பிடுகிறார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காக அரசு அமல்படுத்தியிருக்கும் திட்டங்கள் பற்றி காவல் நிலைய ஆய்வாளர்களுக்குத் தெரியவேயில்லை.
தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்துக்குக் கிடைத்த ஆவணங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 212 வழக்குகள் குழந்தைகள் நல கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும், 65 பேர் மனநல ஆலோசனைக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு தனியார் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகள் உடனுக்குடன் கிடைப்பது இந்த ஆய்வின் வழியாகத் தெரியவருகிறது. ஆனால் அவர்களுக்கான இழப்பீடுதான் கேள்விக்குறியாக உள்ளது. சைல்ட் லைன் சேவையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி இதுகுறித்துக் கூறுகையில், நீதிமன்ற உத்தரவு தாமதமாவதால் இழப்பீடும் தாமதமாகிறது என்கிறார்.
குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழகத் தலைவரான சரஸ்வதி ரங்கநாதன், ஊடகச் செய்திகள் வழியாகவும், ஆணையத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகள் வாயிலாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுக்கு முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். அவரது பரிந்துரையின்படி 2013-2014 காலகட்டத்தில் ஏழு பேர் இழப்பீடைப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஆனால் குழந்தைகள் பாலியல் வன்முறை தொடர்பான அனைத்துச் சம்பவங்களும் குழந்தைகள் நல கமிட்டியின் பார்வைக்கோ, ஊடகப் பார்வைக்கோ வருவதில்லை என்பதையும் வித்யா ரெட்டி குறிப்பிடுகிறார். “இது போன்ற புகார்களை வாங்குவதிலும், அவற்றைப் பதிவுசெய்து விசாரிப்பதிலும் காவல்துறையினர்தான் நுழைவுவாயிலாக இருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகளுக்கு உதவுமாறு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க அவர்கள்தான் தங்கள் செயல் முறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.
யார் யார் இழப்பீடு பெறலாம்?
பாலியல் வன்முறை, பலாத்காரம், கொலை, அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டைப் பெற முடியும். ஆட்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் இழப்பீடு உண்டு.
இழப்பீடு தொகைஉயிரிழப்புரூ. 3 லட்சம்பாலியல் பலாத்காரம்ரூ. 3 லட்சம்மன உளைச்சல்ரூ. 1 லட்சம்
1.357-ஏ குற்றநடைமுறைச் சட்டம்-1973-ன் அடிப்படை யில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
2.டிஜிபி அலுவலகம்தான் இழப்பீட்டை விநியோகிப்ப தற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாகத் திகழ்கிறது.
3.மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப் பாளர்/ஆணையர் அடங்கிய கமிட்டியினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி இழப்பீட்டுக்குத் தகுதியான பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முடிவுசெய்ய வேண்டும்.
2011-ம் ஆண்டு உச்சநீதி மன்றம் தலையிட்டதையடுத்து, அனைத்து மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டு நிதி ஒன்றை உருவாக்க வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் அமிலத் தாக்குதல், பலாத்காரம், பாலியல் தாக்குதலால் பாதிக்கப் படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை 1995-ல் இருந்து செயல்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக டிஜிபி அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த இழப்பீட்டுத் திட்டத்தால் பலனடைந்தவர்கள் குறித்து விவரங்கள் ஏதும் இல்லை. டிஜிபி அலுவலகத்திலிருந்து இந்த இழப்பீடு தொடர்பான சுற்றறிக்கைக் காவல் நிலையங்களுக்கு இதுவரை அனுப்பப்படவேயில்லை என்று தகவல்கள் உள்ளன. ஆனால் இதுதொடர்பான அரசாணை வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சட்டப்பிரிவைச் சேர்ந்த எஸ். மனோன்மணி பேசும்போது, “2013-14 காலகட்டத்தில் மட்டும் 36 வழக்குகள் எங்களது சட்ட உதவி மையத்துக்கு வந்தன. அதில் ஆறு பேருக்கு மட்டுமே இழப்பீடு கிடைத்துள்ளது. ஊடகங்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுக்கும்போது அந்த வழக்கில் சீக்கிரமே இழப்பீடு வழங்கப்படுகிறது” என்கிறார்.
© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்