பெண் இன்று

குறிப்புகள் பலவிதம்: பிள்ளை வளர்க்கும் மருந்து

செய்திப்பிரிவு

# தனியா, பித்தத்தையும் உடல் சூட்டையும் குறைக்கும். ஜீரண சக்தியைக் கொடுக்கும். தனியாவை மென்று சாப்பிட்டால் நாவறட்சி நீங்கும். விக்கல் மட்டுப்படும். தனியாவைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

# மஞ்சள் சிறந்த கிருமிநாசினி. கல்லீரலைப் பலப்படுத்தும். தோல் தொடர்பான நோய்களுக்கு மஞ்சள் சிறந்த மருந்து. வீக்கம் இருந்தால் மஞ்சளுடன் வெங்காயத்தை அரைத்துக் கட்டுப்போட்டால் குறையும்.

# சீரகம், நாவின் சுவை அரும்புகளின் தன்மையைப் பலப்படுத்தும். பித்தத்தைக் குறைக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். வயிற்றுவலியைப் போக்கும்.

# வசம்பு, வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும். குழந்தைகளுக்கு இதைக் கல்லில் இழைத்துக்கொடுப்பார்கள். இதை‘பிள்ளை வளர்ப்பான்’ என்றும் ‘பேர் சொல்லாதது’ என்றும் பெரியவர்கள் சொல்வதுண்டு. வசம்புடன் ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டையும் சேர்த்து இழைத்துக் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். சிறு துண்டை மென்றால் வாய் துர்நாற்றம் குறையும்.

# சுக்கு, ஜீரணக் கோளாறுகளைப் போக்கும். தலைவலிக்குச் சுக்கை அரைத்துப் பற்றுப்போடலாம்.

# ஓமத்தை மோரில் கலந்து குடித்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

# ஜாதிக்காய், தலைவலியையும் இருமலையும் குறைக்கும். மயக்கத்தை ஏற்படுத்துவதுடன் பித்தத்தையும் கூட்டும் என்பதால் ஜாதிக்காயை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது.

# கசகசா, வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும். தினமும் இரவில் கசகசாவை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் நாள்பட்ட தூக்கமின்மை நீங்கும். உடல் சூடு குறையும்.

# வெந்தயம் உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும். கூந்தலின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் உதவும். பேதியைத் தடுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது.

# லவங்கப்பட்டை பல வகையான நச்சுக்களை நீக்கும். பேதியை மட்டுப்படுத்தும்.

# வெள்ளைப் பூண்டு தலைவலி, நீர்க்கோவை, கால்வலி ஆகியவற்றைப் போக்கும்.

# சிவப்பு மிளகாயில் பீட்டா கரோட்டினும் கால்சியமும் இருக்கின்றன. எலும்புக்கு நல்லது. கொழுப்பைக் குறைக்கும்.

# ஏலக்காய் உணவின் மணத்தைக் கூட்டி உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். வாந்தியைக் கட்டுப்படுத்தும்.

# சமையலுக்குக் கூடுமானவரை மிளகாயைப் பயன்படுத்துவதைக் குறைத்து அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பசியைத் தூண்டும். நச்சுத் தன்மையை நீக்கக்கூடியது.

- சுமதி ரகுநாதன், கோவை.

SCROLL FOR NEXT