சிறு வயது முதலே புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். எந்தக் கணத்தில் என்னைப் புத்தகங்கள் ஆட்கொண்டன என்று சரியாக நினைவில் இல்லை. எங்கள் வீட்டில் சிறுவர் கதைகளைப் படிக்க மட்டுமே அனுமதி. வளர, வளர காகிதப்பொட்டலமாக இருந்தாலும் சரி கடைகளில் தொங்கவிட்டிருக்கும் போஸ்டராக இருந்தாலும் சரி என்னால் படிக்காமல் இருக்க முடியாது. நினைவுதெரிந்த நாளிலிருந்து இன்றுவரை ஒரு வரிகூடப் படிக்காத நாள் இல்லை. புதுப் புத்தகத்தின் மணம் தருகிற இன்பம் அலாதியானது.
செய்ய வேண்டிய வேலைகளை அவசர அவசரமாக முடித்துவிட்டு புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவேன். நள்ளிரவு தாண்டியும் கண்விழித்துப் படித்து முடிப்பேன். பயண நேரத்தையும் காத்திருக்கும் நேரத்தையும் வாசிப்புதான் பயனுள்ளதாக்குகிறது. தூக்கம் வரவில்லை என்பதற்காக நான் ஒரு நாளும் படித்ததில்லை. ஆனால், புத்தக வாசிப்புக்காகப் பல நாட்கள் தூக்கம் தொலைத்திருக்கிறேன்.
மழை பெய்யும் பகல் நேரத்தில் தேநீர் அருந்தியபடியே விருப்பமான புத்தகத்தை வாசிப்பதைப் போன்ற அனுபவத்துக்கு ஈடு இணையே இல்லை. அதுபோன்ற தருணங்கள் எனக்கு வரம்! புத்தகங்கள் அமுதசுரபியைப் போன்றவை. படிக்கிறவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத கருத்துகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
சில புத்தகங்களை வாசிக்கும்போது நான் மெய்மறந்து புத்தக வரிகளில் கரைந்திருக்கிறேன். சிலவற்றை வாசிக்கும்போது அதனுடன் ஒன்றி அழுதிருக்கிறேன். சில என் தோள்தட்டி ஊக்கம் கொடுத்திருக்கின்றன. சில என் பாதையை விரிவுபடுத்தி வழிகாட்டியிருக்கின்றன. இப்படி எல்லாவித உணர்வுகளையும் புத்தகங்கள் தட்டி எழுப்புகின்றன. ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.
சௌந்தர்ய லஹரியின் தமிழ்ப் பதவுரையையும் படித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வாசிப்புக்கு எல்லையே இல்லை. புத்தகக் கடலில் நான் சிறு கட்டுமரத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறேன். முடிவில்லா, முடித்துக்கொள்ள விருப்பம் இல்லா இந்தப் பயணம் இனிமையாகத் தொடர்கிறது!
- எல்.துர்காதேவி, திருச்சி.
நீங்களும் சொல்லுங்களேன் தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள். |