ஆண் ஊழியர்களுக்கு இணையாகப் பெண் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று பிரபல ஊடக நிறுவனமான பிபிசிக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அந்நாட்டின் கலாச்சார, ஊடக, விளையாட்டுத் துறையைச் (DCMS) சேர்ந்த குழு இது தொடர்பான அறிக்கையை ஜனவரி 23 அன்று வெளியிட்டிருக்கிறது.
பெண் ஊழியர்களுக்குச் சம ஊதியம் வழங்காமல் இருக்கும் பிரச்சினையை பிபிசி நிறுவனம் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து மறுத்துவருவதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியிருக்கிறது. இந்நிறுவனம், பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்களுக்கு இணையாகச் சம வாய்ப்பு வழங்காமலும் கணிசமான அளவுக்குக் குறைந்த ஊதியம் வழங்கிவருவதாகவும் இந்தக் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
40 பிபிசி ஊழியர்கள், பிபிசி பெண்கள் பிரச்சாரக் குழுவினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் ஒரே வேலையைச் செய்யும் ஆண் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தைவிடப் பெரும் அளவு குறைந்த ஊதியத்தைப் பெண் ஊழியர்களுக்கு வழங்குகிறது பிபிசி. பாலினம் சார்ந்த ஊதியப் பாகுபாட்டுக்கான சரியான விளக்கத்தை பிபிசி வழங்கவில்லை என்றும் இந்தக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பாகப் புகார் அளித்த பெண் ஊழியர்களின் புகார்களையும் இந்நிறுவனம் சரியாகக் கையாளவில்லை என்றும் அதனால் பெண் ஊழியர்கள் தங்களைத் ‘தகுதியற்றவர்களாகவும்’ ‘குறைவானவர்களாகவும்’ உணரச்செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது பிபிசி பெண்கள் குழு. ஆண்கள், பெண்களுக்கு இடையே நிலவும் இந்த விவரிக்க முடியாத, நியாயமில்லாத பிரச்சினை தொடர்பாகத் தங்கள் நிறுவனம் ‘சம ஊதியப் பொறுப்பை’ ஏற்கத் தொடர்ந்து மறுத்துவருவது அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஊக்கமிழக்க வைத்திருக்கிறது.
அத்துடன், பிபிசி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்புகளில் முதல் பத்து இடங்களில் ஒரு பெண்கூட இல்லை; முதல் 20 இடங்களில் இருவர் மட்டுமே இருக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தச் சம ஊதிய பிரச்சினையைக் களைவதற்கு பிபிசி நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையைப் பொதுவில் பகிர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது நாடாளுமன்ற உறுப்பினர் குழு.