ஒரு சொல் எப்போது வெறுக்கும் சொல்லாகிறது? அது உச்சரிக்கப்படுவதன் உளவியல் பின்னணி அம்பலப்படும்போது அது வெறுக்கும் சொல்லாகிறது. அச்சொல்லின் ஊடாக அந்த நபரின் வக்கிரமும் ஆபாசமும் இணைந்தே வெளிப்படுகின்றன. ஒரு சொல்தான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்தின் கீழ் அடங்கி இருப்பவர்களுக்கும் இடையிலான பாகுபாட்டை அம்பலப் படுத்துவதாக அமைகிறது. ஒரு ஊடகத்தின் அறையிலிருந்து வெளிப்பட்டு நாடாளுமன்றம்வரை அச்சொல் எதிரொலிக்கிறது.
கோடிக்கணக்கான மக்களால் வசீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பிரபலம் பொதுவெளியில் திருவாய் மலர்ந்து அருளும்போது பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடையும்போது அச்சொல்லின் அருவருப்பால் பார்வையாளர்களில் சரிபாதியினரான பெண்கள் அசூயையால் நெளிகிறார்கள்; ஆபாசத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளானதாக உணர்கிறார்கள்.
ஹர்திக் பாண்ட்யா இளம் கிரிக்கெட் நட்சத்திரம் என்கிறார்கள். குறுகிய காலத்தில் தனது திறமையால் முன்னேறி உலக கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசத்தில் மூழ்கடித்ததன் மூலம் தனது மதிப்பை அவர் அதிகரித்துக்கொண்டிருக்கலாம்.
உலக நுகர்வுத் தொழிற்சாலைகள் தனது நுகர்வுப் பண்டங்களை வீரியத்துடன் விற்பனை செய்வதற்காக இத்தகைய நட்சத்திரங்களையும் சேர்த்தே உற்பத்தி செய்கின்றன என்பதை நட்சத்திரங்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால், ஊடகங்களின் கண்களிலிருந்து அவர்களால் ஒருபோதும் தப்பிக்க இயலாது. ஊடகங்களும் இம்மாதிரியான பரபரப்பைப் பிரபலங்கள் வாயிலாக வெளிப்படுத்தவே விரும்புகின்றன என்பதும் கண்கூடாகத் தெரிந்த மாய வித்தை.
பாண்ட்யாவும் டாக் ஷோ எனப்படும் அரட்டை அரங்கு (காபி வித் கரண்) நிகழ்வில் கலந்துகொண்டார். அவருடன் கே.எல்.ராகுல் என்ற மற்றொரு நட்சத்திர வீரரும் பங்கேற்றார். இந்நிகழ்வை கரண் ஜோகர் ஒருங்கிணைத்தார். வாக்களிக்கும் வயதைச் சேர்ந்த இந்த நட்சத்திர இளைஞர்களின் அரட்டையில் என்னென்ன உலக விஷயங்கள் அலசப்பட்டிருக்கும் என்று அலசினால் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது. இளம் நட்சத்திரப் பிம்பங்களுக்குள் இயங்கும் உலகம் இவ்வளவுதானா என நீங்கள் மனம் நொந்துகொண்டிருக்கும் தருணத்தில்தான் பாண்ட்யா அப்படியொரு பதிலைக் கூறினார்:
“(அவர்களது) நகர்வுகளைக் கவனிப்பது எனக்குப் பிடிக்கும். அதிலும் பிளாக் சைட்டில் இருந்து அவர்களது நகர்வுகளைக் கவனிப்பேன்” என்று சொல்லியிருக்கிறார்.
‘அவர்கள்’ என அவர் குறிப்பிடுவது பெண்களை. நகர்வு அவருக்குப் பிடிக்குமாம். பெண்கள் பொதுவெளியில் நகர் வதும் அவர்களின் அசைவுகளும் தனக்கு விருப்பத்தை அளிக்கிறது என்கிறார். லட்சக்கணக்கானோர் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியில் சிறிதும் சிந்திக்காமல் இப்படிச் சொல்கிறார் அவர். இதைக் கேட்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் எப்படி உணர்வார் என்ற கூருணர்வு சிறிதும் இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். தான் பேசிய சொற்களின் பின்னுள்ள உளவியலை அறிந்துதான் கூறினாரா எனத் தெரியவில்லை.
அதோடு நில்லாமல் அவரது நண்பர் கே.எல்.ராகுலும் தன் பங்குக்கு ஆபாச சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதைத் தொகுப்பாளரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பால் பாகுபாடு குறித்த கூருணர்வே இல்லாமல்தான் ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்கு இதுவே அத்தாட்சி. இந்திய விளையாட்டு நட்சத்திரங்களின் சிந்தனை இவ்வளவு ஆபாசமாகத்தான் இருக்கிறது. உலக அளவில் ஒருமைப்பாட்டினையும் ஒற்றுமையையும் உருவாக்குவதற்காக விளையாடும் இந்த நட்சத்திரங்களுக்குப் பால், இனம், மொழி, மத, சாதிப் பாகுபாடுகள் குறித்த கல்வியை நம் சமூகம் எப்போது வழங்கப்போகிறது?
உணர்வைத் தூண்டும் பொறியா?
இந்நிகழ்வு குறித்துப் பெரும் எதிர்ப்பலைகள் உருவானவுடன் வழக்கம்போல் பாண்ட்யாவும் ராகுலும் மன்னிப்புக் கோரினர்; சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமும் மன்னிப்பு கோரி வலைத்தளங்களில் இருந்து இக்காட்சியை நீக்கியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
பெண்ணுடல் என்பது ஆண் சமூகத்தின் காம உணர்வை அதிகரிக்கும் பொறி மட்டும்தானா? பெண் என்பவள் வெறும் உடல் மட்டுமே என்ற பார்வையை இவர்களெல்லாம் எப்போது மாற்றிக் கொள்ளப்போகிறார்கள்? பெண்ணின் நகர்வுகள், அசைவுகள், குலுங்கல்கள் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தையும் கடந்து பெண்ணுக்கு மூளை என்ற ஒரு உறுப்பும் இருக்கிறது.
அதன் துடிப்புகளும் அசைவுகளும் அவளை ஒவ்வொரு நொடியும் இடைவிடாமல் இயக்கிக்கொண்டிருக்கின்றன. அவளும் சமூகத்தின் சரி பாதியாக, தன் வீட்டின், அலுவலகத்தின், சமூகத்தின் ஒரு அங்கமாக இயங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை நுண்ணுணர்வே இல்லாத சில ஆண்கள் எப்போது உணர்வார்கள்?
ஒருவிதத்தில் தங்கள் அசல் முகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதன் மூலம் உலகுக்குத் தங்களை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். ஒரு துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள் துறையைக் கடந்து பொதுவானவற்றைப் பேசும்போது அம்பலப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் எந்தத் துறையில் இயங்கினாலும், அடி மட்டத்தில் இருக்கும் ஆண் தொடங்கி, உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களின் சிந்தனைவரை பெண் என்றால் இப்படித்தான் யோசிக்கிறது. பெண்ணுடல் குறித்த இப்பார்வைதானே அனைத்துத் தளங்களிலும் நீள்கிறது.
கேளிக்கை மட்டுமே வாழ்க்கையல்ல
இக்கோணத்தில் உரையாடலை நீட்டிப்பது நமது நோக்கமல்ல. விளையாட்டுகள் குறித்தது. குறிப்பாக சர்வதேசப் போட்டிகள் என்பவை உலக நாடுகளுக்கு இடையில் நல்லெண்ணத்தை உருவாக்கவும் உலக மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையைக் கூறினால் இத்தகைய சர்வதேசப் போட்டிகளுக்கு ஐக்கிய நாடுகள் அவை போன்ற அமைப்புகள் ஊக்கம் அளித்த பின்னர்தான் வளரும் நாடுகளின் அரசுகள் விளையாட்டுகளின் மீது ஓரளவாவது ஆர்வம் காட்ட முடிகிறது என்பதே உண்மை.
ஜஸ்பீர் சிங், உத்தம் சிங் (ஹாக்கி), டி சோசா (குத்துச்சண்டை), பானர்ஜி (கால்பந்து), தாராசிங் (மல்யுத்தம்), பட்டோடி, கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட்) போன்ற வீர்ர்கள் நாட்டுக்காக விளையாடி உலகப் புகழ் பெற்றனர். மக்களும் இவர்களைக் கொண்டாடினர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், விளையாட்டு உலகில் எவரும் அடையாத அளவுக்குப் புகழின் உச்சிக்குச் சென்றவர்.
ஆனால், புகழ் போதை எப்போதும் அவரது கண்களை மறைக்கவில்லை. மும்பையின் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து கிரிக்கெட் கனவுகளுடன் மிகச் சிறிய வயதில் மட்டையைக் கையில் எடுத்தவர். அவர் கிரிக்கெட்டின் கடவுளாகப் புகழடைந்த பின்னரும்கூட அவர் மட்டையைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை.
ஊடகங்களின் முழு வெளிச்சமும் அவரைப் பின் தொடர்ந்தபோதும் ஆபாசமாக உளறவில்லை. சச்சின் மட்டுமல்ல, கபில்தேவ், கவாஸ்கர், உத்தம் சிங் என யாருமே இவ்வாறு உளறிவிட்டுப் பின்னர் மன்னிப்பு கோரவில்லை.
ஆனால், இப்போதெல்லாம் கொஞ்சம் புகழ் சேர்ந்தாலும் தலைக்கேறிவிடுகிறது. விளையாட்டு மட்டுமல்லாமல் சினிமா, கலை எனப் பல துறைகளிலும் இளைஞர்கள் அரிய சாதனைகள் புரிகிறார்கள். ஆனால், இதனால் ஏற்படும் புகழ் வெளிச்சத்தில் விட்டில்பூச்சிகள்போல் மயங்கி விடுகிறார்கள்.
மிக இளம் வயதில் கையில் புரளும் பணம் கேளிக்கையை நோக்கி அவர்களைத் திசை திருப்புகிறது. விளையாட்டுச் சங்கங்களில் உருவாகியுள்ள அரசியலில் (நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ) நீந்திக் கடந்து இந்தியக் குழுவில் இடம் பிடித்ததன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தோ, மறைக்கப்படும் வரலாறு குறித்தோ இங்கு யாரும் பேச விரும்புவதில்லை. ஆனால், அனைத்தும் கடந்து குழுவுக்காக - நாட்டுக்காக விளையாடி வெற்றிகளைக் குவிக்கும் வீரர்களை உச்சிமுகர்ந்து பாராட்டவே விரும்புகிறேன்.
ஏனெனில், இந்தியத் திருநாட்டில் சிதறிய நெல்லிக்காய் மூட்டைகள்போலத் திறமைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. இவர்களை எண்ணி மாளாது. இவர்களில் ஒருவர்தான் பாண்ட்யா, ராகுல், மாரியப்பன், ஸ்வப்னா பர்மன் போன்றோர்.
இதை மறந்துவிட்டு, உங்கள் முன்னோர்களையும் மறந்துவிட்டு, நமது தாய், மனைவி, சகோதரி, தோழிகள் ஆகியோரும் உங்கள் வர்ணனைக்குள் அடங்குகிறார்கள் என்பதையும் மறந்துவிட்டு இது போன்ற ஆபாசக் கருத்துகளை, சிந்தனைகளை சொற்களாய் உதிர்ப்பது மனதைக் காயப்படுத்துகிறது; வலி ஏற்படுத்துகிறது; உங்கள் தாயாக, சகோதரியாக.
குறிப்பு: ‘பிளாக் சைட்’ என்ற சொல்லின் பொருள் அறிய அகராதிகளைப் புரட்டிக் கால விரயம் செய்யாதீர்கள். ‘பிளாக் சைட்’ என்பது ஒரு மோசமான ஆபாசச் சொல்!
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com