பெண் இன்று

பிளாஸ்டிக் ஒழிப்பில் வழிகாட்டும் வாசகர்கள்: கறி வாங்கச் சென்றால்...

செய்திப்பிரிவு

எனக்குத் தையல் நன்கு தெரியும்.  என்னிடம் உள்ள வேண்டாத துணிகளையும் புடவை முந்தானைகளையும் கொண்டு பல வண்ணப் பைகளாகத் தைத்து வைத்துள்ளேன்.  கடந்த ஆறு மாதங்களாகக் கடைகளுக்குச் செல்லும்போது கையில் பை இல்லாமல் செல்வதில்லை.  கடைகளில் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாகக் கொடுக்கப்படும் பைகளும் அதிகம் உழைப்பதில்லை.  ஆனால், தேவையில்லை என நாம் ஒதுக்கும் பழைய துணிகள் நன்றாக உழைக்கக்கூடியவை. பழைய துணிகளைப் பைகளாக தைப்பது மிக எளிது. 

பிளாஸ்டிக்கைத் தனியாகப் பிரிக்கும்போதுதான் அதன் விபரீதம் புரிந்தது. மக்கும் பொருட்களைவிட எத்தனை ஆண்டுகளானாலும்  மக்காத பிளாஸ்டிக் பைகள் வீட்டில் அதிக அளவு சேர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். தவிர்க்க இயலாத சூழலில் சில பொருட்களை வாங்கும்போது கிடைக்கும் பைகள் மட்டுமே குப்பைக்குப் போகின்றன.  கறி, மீன் வாங்கவும் ஹோட்டல்களுக்கு உணவு வாங்கவும் செல்லும்போது வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்துச்  செல்லலாம்.

- ராணி அற்புதராஜ், திருச்சி.

ஜனவரி முதல் நாள் பிளாஸ்டிக் தடை உத்தரவு வருகிறது எனத் தெரிந்தவுடனே  சமையலறையில் புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு எவர்சில்வர், அலுமினியப் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறேன். உணவுப் பொருட்களையும் நொறுவையையும் போட்டுவைப்பதற்கு பிளாஸ்டிக்  டப்பாக்களுக்குப் பதில் எவர்சில்வர் பாத்திரங்களையே பயன்படுத்துகிறேன். குளிக்க, துவைக்க போன்றவற்றுக்கு பிளாஸ்டிக் வாளிக்குப் பதில் இரும்பு வாளியை மாற்றிவிட்டேன்.

ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்ற தவிர்க்க இயலாத பொருட்கள் நீங்கலாக அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  விடை கொடுத்துவிட்டேன்!  துணிப் பைகளும் சணல் பைகளும் ஓலைக் கூடைகளும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன!  மளிகைப் பொருட்கள் வாங்க துணிப்பைகளை எடுத்துச் செல்கிறேன்.

- மீனாட்சி வைகுண்டம், அசோக் நகர்.

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறை செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருக்கும்.

SCROLL FOR NEXT