வீடுகளிலும் அலுவலகங்களிலும் குப்பைக் கூடையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் குப்பைக் கூடைகளைச் சுத்தம் செய்வதில் பலர் ஆர்வம்காட்டுவதில்லை. குப்பைக் கூடைகளை அடிக்கடி கழுவி, காயவைப்பதைத் தவிர்க்கவே பெரிய பிளாஸ்டிக் பைகளைக் குப்பைக்கூடையின் உள்புறம் வைத்துப் பயன்படுத்துவோம்.
தினமும் அந்த பிளாஸ்டிக் பைகளை மட்டும் அகற்றிவிடுவோம். இவ்வாறு பெரிய பிளாஸ்டிக் பைகளைக் கூடைக்குள் போடுவதற்கு மாற்றாகப் பழைய செய்திதாள்களை மடித்து காகிதக் குப்பைக்கூடை செய்யலாம். இதைச் செய்யப் பசை தேவையில்லை. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக குப்பைகூடைக்குள் இந்தக் காகிதப் பையை வைத்துப் பயன்படுத்தலாம். காகிதப் பைகளைச் செய்து கூடையின் உட்புறத்தில் வைத்துப் பயன்படுத்திவருகிறேன். நீங்களும் இதை முயன்றுபாருங்களேன்.
- ரெ.கவிதா, ஸ்ரீவில்லிபுத்தூர்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகப் பலர் பழைய துணிகளைத் தைத்துப் பையாகப் பயன்படுத்திவருகிறார்கள். இந்த யோசனை சரியானதாக இருந்தாலும் சில நேரங்களில் பழைய துணிப்பை பாரம் தாங்காமல் கிழிந்துவிடக்கூடும். அதனால் அதற்கும் நான் வேறொறு வழியைக் கடைப்பிடித்து வருகிறேன்.
இப்போதெல்லாம் எந்தப் புடவை வாங்கினாலும் அதனுடன் ஜாக்கெட் துணியும் (with blouse) இணைத்தே கொடுக்கப்படுகிறது. நான் அவற்றைப் பயன்படுத்த மாட்டேன். அந்த மாதிரி பிளவுஸ் பிட்டுகள் என்னிடம் நிறையச் சேர்ந்துவிட்டன. அவற்றில் பைகள் தைத்து, பயன்படுத்திவருகிறேன். பலவித வண்ணங்களில் புதுப் பொலிவோடு இருப்பதால் வெளியே எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்கிறது. மெலிதாக இருப்பதால் மடித்து கைப்பைக்குள் வைத்தும் எடுத்துச் செல்லலாம்.
இதேபோல காட்டன் துப்பட்டாக்களில் பெரிய பைகளைத் தைக்கலாம். அநேகமாக எல்லோர் வீடுகளிலும் காட்டன் சுடிதார்கள் கிழிந்த பின்னரும் துப்பட்டாக்கள் அப்படியே பளிச்சென்று இருக்கும். அவற்றில் தலையணை உறைகளும் பைகளும் தைக்கலாம்.
- பி. லலிதா. திருச்சி.
பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். |