பெண் இன்று

பாதையற்ற நிலம் 21: நினைவின் கவிதைகள்

மண்குதிரை

தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ்க் கவிதைக்குத் தனி முகம் உண்டு. சமூக வாழ்க்கையையும்கூட இப்படிப் பிரித்துப்பார்க்க முடியும். அதற்கு முன்பான வாழ்க்கை இவ்வளவு சிக்கலானதாக இல்லை. நவீன அறிவியல் வாழ்க்கையை ஒரே நேரத்தில் சௌகர்யமானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்கியது. இந்திய அரசின் கொள்கை முடிவுகளும்கூட இந்தச் சமூக நிகழ்வுகளுக்குக் காரணம் எனச் சொல்லலாம்.

இந்தப் புதிய உலகின் தீமைகளைப் பேச சிலர் கவிதையுலகுக்குள் தங்கள் புதிய மொழியுடன் நுழைந்தனர். இவர்களுக்கு அப்பாற்பட்டு அறிவியல் தீண்டாத தங்கள் நினைவுலகின் அற்புதங்களைக் கவிதையாக்கும் போக்கையும் சிலர் உருவாக்கினர். அவர்களில் ஒருவர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.

காவிய மஞ்சணத்தி

தமிழச்சியின் கவிதைகள்,  நிலத்தைப் பிடிமானமாகக் கொண்டவை. நிலமில்லா நிலத்தில் புனைவுகள் எழும் இந்தக் காலத்தில் இந்தப் பண்பு கவனத்துக்குரியது. நிலம், கரிசல் விருவுகளாகவோ புழுதி மண்ணாகவோ சொல்லப்படவில்லை. மஞ்சணத்தி மரமாக, வேப்பம்பழமாக, கொடுக்காபுளியின் ருசியாக எனப் பலவிதமாக நிலத்தைக் கவிதைகளுக்குள் தமிழச்சி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மஞ்சணத்தி மரம் தமிழச்சியின் கவிதைக்குள் திரும்பத் திரும்ப வருகிறது. கரிசல் பகுதியில் மஞ்சணத்தி என அழைக்கப்படும் இது சில பகுதிகளில் நுணா என அழைக்கப்படுகிறது. மரத்தை அக்காவாகக் கருதும் சங்கக் கவிதை ஒன்று உள்ளது. அதுபோல் தமிழச்சியின் கவிதை ஒன்று மஞ்சணத்தியைத் தோழியாக, தாயாக, பாட்டியாகச் சித்தரிக்கிறது. ஐங்குறுநூறுப் பாட்டில் ஓதலாந்தையர் இம்மரத்தை ‘நுணவம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கபிலரின் குறிஞ்சிப்பாட்டிலும் மஞ்சணத்தி, தணக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரபுடன் தமிழச்சியின் இந்த மஞ்சணத்தியைப் பார்க்கும்போது அதற்கொரு காவியத்தன்மை கிடைக்கிறது.

முரண்பாட்டின் துளிர்ப்பு

காலம் தமிழ்க் கவிதைகளுக்குள் பலவிதமாக வெளிப்பட்டுள்ளது. நிகழும் காலம் அதன் எல்லாவிதமான பிரச்சினைகளுடன் கவிதைக்குள் வெளிப்படுவது ஒரு வகை. கடந்து போய்விட்ட காலம் நினைவுத் திரளாக வெளிப்படுவது இன்னொரு வகை. தமிழச்சியின் கவிதை உலகை இந்த இரண்டாம் வகையில் வைத்துப் பார்க்கலாம். இவரது கவிதைகள் நிகழும் காலத்துக்கு கடந்த காலத்துக்குமான முரண்பாடுகளில் துளிர்ப்பவை. நிகழ் காலத்துக்கும் ஒரு திடமான நிலம் இருக்கிறது.

அது ஒரு பரபரப்பான பட்டணக்கரை. கடந்த காலமும் அவரது நினைவில் மட்டும்தான் இருக்கிறது. ஆனால், அது பரபரப்பின்றிச் சாவதானமாக உறைந்திருக்கிறது. கடந்து போய்விட்டாலும் அதைத் தன் கவிதைகளுக்குள் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறார் தமிழச்சி. நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த நட்சத்திரங்கள் வானத்தில் ஒளிவீசுவதைப் போல் தமிழச்சியின் கவிதைகளுக்குள் கடந்த காலமும் தன் வாழ்க்கையைத் திரும்ப எடுத்துக்கொள்கிறது.

மனத்தின் ருசி

லட்சுமண வாத்தியார், பொம்மக்கா, முல்லைக்கனி நாடார், கச்சம்மா, சேத்தூர் சித்தப்பா என வண்ணமயமான மனிதர்களின் வழியாகக் கடந்த காலம் தமிழச்சியின் கவிதைக்குள் காட்சிகளாகிறது. இதில் சேத்தூர் சித்தப்பா கலர் கலர் பூந்தியாக வாங்கி வந்து அந்தக் காட்சியையே வண்ணமயமாக்கிவிடுகிறார்.

தமிழச்சியின் கவிதைகளில் கடந்த காலத்தைப் பிரதிபலிப்பதில் ருசிக்கு முக்கியப் பங்குண்டு. சில்லுக் கருப்பட்டி, சீனி மிட்டாய் எல்லாம் கடந்த காலத்தின் ருசிகளாக வருகின்றன. ஒரு கவிதையில் தமிழச்சி இதை ‘மனதின் ருசி’ என்கிறார்.

தமிழச்சியின் கவிதைகள் பல சிறுகதையைப் போலத் திடமான சம்பவத்தால் பின்னப்பட்டுள்ளன. அவற்றில் பல சம்பவங்களில் தமிழச்சிக்கு நேரடித் தொடர்பும் இருக்கிறது. இந்தப் பண்பு கவிதைக்கு ஒரு பலத்தைத் தருகிறது. உதாரணமாக, கடல் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறது ‘பட்டணத்துக் கடல்’ கவிதை. இது கடலுக்கும் அவருக்குமான தொடர்பாக விரிகிறது.

இந்தக் கவிதைக்குள்ளும் ஒரு கடந்த காலமும் ஒரு நிகழ் காலமும் இருக்கின்றன. கடந்த காலத்துக்காக அவருடைய தம்பியும் கணக்கு டீச்சரும் இருக்கிறார்கள். நிகழ் காலத்தில் வீடும் மெருகூட்டப்பட்ட கிளிஞ்சலும் இருக்கின்றன. அவரது பெரும்பாலான கவிதைகளில் இந்த அம்சத்தைப் பார்க்க முடிகிறது. 

வனப்பேச்சியின் விஜயம்

தமிழச்சியின் கவிதைகள் சில இந்தக் கால இடைவெளியை, பெரு நகரப் பரபரப்பை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கிராமத்து மனுஷியைப் போல் திணறவும் செய்கின்றன. இந்தக் கிராமத்து மனுஷியை வனப்பேச்சி எனக் கவிதைக்குள் தமிழச்சி சிருஷ்டித்துள்ளார். இந்த வனப்பேச்சி, ஒரு நாட்டார் தெய்வத்தைப் போல் தமிழச்சியின் கவிதைகளுக்குள் நகர் விஜயம் செய்கிறார். 

தமிழச்சி தனது இந்த உலகுக்கு வெளியேயும் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். அவற்றுள் முக்கியமானது, ‘திரும்புதல்’ கவிதை. கைதி எண்ணாக இருந்த செல்வரத்தினம் வீடு திரும்புவதை ஒரு கதையைப் போல் விவரிக்கிறது அது. நவீன சிறுகதைத் தன்மையிலான இந்தக் கவிதை எண்களுடனான அவரது வாழ்க்கையையும் தன் ஒவ்வாமையையும் சொல்கிறது. பலவிதமான எண்களால் ஆன நம் வாழ்க்கையையும் இந்தக் கவிதை குறுக்கிட்டுப் பார்க்கிறது.
 

தமிழச்சி தங்கபாண்டியன் (இயற்பெயர் சுமதி), சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். திமுகவின் மகளிரணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். ‘எஞ்சோட்டுப் பெண்’ (மித்ர), ‘வனப்பேச்சி’ ‘பேச்சரவம் கேட்டிலையோ’ ‘மஞ்சணத்தி’ ஆகிய தொகுப்புகள் உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ளன.

paadhai-2jpg

தொலைதல்

கழைக் கூத்தாடிகள் ஜிகினா உடையில்

கோயில் திருவிழாக்களுக்கு வந்துவிட்டார்கள்

சர்க்கஸ் கோமாளிகள்

திருமண வீட்டில் வரவேற்றுக் கை குலுக்குகிறார்கள்

கிடாய் வெட்டி ரத்தப் படையலிடும் பூசாரிகள்

தெருமுனைக் கோயிலில்

இரண்டு நேரம் விளக்குப் போடுகிறார்கள்

அடவு வைத்துக் கூத்து கட்டுபவர்கள்

திரைப்படங்களில் தலை காட்டும் வயதான

அப்பாக்களாகிவிட்டார்கள்

சேலைகளுக்கு அடியில்

மொண்ணைக் கை மரப்பாச்சியைப் பத்திரப்படுத்திவிட்டு

‘டம்பப்’ பையோடு நானும்.

படங்கள்: வம்சி
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

SCROLL FOR NEXT