பெண் இன்று

பக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர்

அருண் சரண்யா

பெஸி கோல்மேன் (Bessie Coleman), ‘விமானம் ஓட்டும் கலையின் ராணி’ என்று புகழப்பட்டவர். இதற்காக அவர் செய்த முயற்சிகள், அவற்றை அறிய நேரும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

அவர் இறந்தபோது மூன்று இடங்களில் நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஜான்ஸன்வில்லி, ஆர்லாண்டோ, சிகாகோ ஆகிய நகரங்களில் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் வெள்ளமெனத் திரண்டார்கள். அதுவும் சிகாகோவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடினர். கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். சிகாகோவிலுள்ள லிங்கன் இடுகாட்டில் அவர் உடல் புதைக்கப்பட்டது.

ஏழ்மையின் பிடியில்

டெக்ஸாஸ் நகரில் அடிமை வாழ்வு வாழ்ந்துவந்த பெற்றோருக்குப் பிறந்தவர் பெஸி கோல்மேன். விமான ஓட்டிக்கான உரிமத்தைப் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி. கறுப்பர் இன மக்களை, குறிப்பாகப் பெண்களை மதிக்காத காலத்தில் அவரால் எப்படி இவ்வளவு உயரத்தை அடைய முடிந்தது?

13 குழந்தைகளில் ஒருவராக 1892 ஜனவரி 26 அன்று பிறந்தார் பெஸி கோல்மேன். ஒற்றை அறை கொண்ட வீடு. படிப்பறிவில்லாத பெற்றோர். சிறுகச் சிறுகச் சேமித்த பணத்திலிருந்து அவர் தந்தை நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பகுதியில் சின்னதாக ஒரு நிலம் வாங்கி அதில் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு அங்கே குடிபுகுந்தார். மேலும், இரண்டு குழந்தைகள் அங்கு பிறந்தன.

நாளடைவில் குடும்பத்தில் கருத்து வேற்றுமைகள் தோன்றின. 1901-ல் குடும்பத்தை விட்டு வெளியேறினார் பெஸியின் அப்பா. அம்மா தன் பணியில் கிடைத்த ஊதியத்தைக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்க வேண்டியிருந்தது. சமீபத்திய வரவுகளான இரண்டு பெண் குழந்தைகளையும் பெஸி பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

தாய்க்கு அளித்த நம்பிக்கை

அந்தப் பகுதியில் ஒரே பள்ளி. அதற்கு ஒரே அறை. எட்டு வகுப்புகள் உண்டு. ஒவ்வொரு வகுப்பும் முடிந்தவுடன் அடுத்த வகுப்பு அந்த அறையிலேயே தொடங்கும். அறுவடை நாட்களின்போது அந்தப் பள்ளிக்கு விடுமுறை. குடும்பத்தினருக்கு மாணவர்களின் உதவி தேவைப்படுமே! விரைவிலேயே அந்தக் குடும்பத்தின் ‘உண்மையான பாதுகாவலராக’ பெஸி அங்கீகரிக்கப்பட்டார். “கவலைப்பட வேண்டாம் அம்மா.

நான் ஏதோ ஒரு விதத்தில் உருப்படியானவளாக வருங்காலத்தில் ஆகிவிடுகிறேன்’’ என்று அவர் தன் தாய்க்கு நம்பிக்கை அளித்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அக்கம் பக்கத்து வீட்டினரின் துணிகளைத் துவைத்து, இஸ்திரி செய்து தரும் வேலையைச் செய்தார் பெஸி. இதனால், ஓரளவு பணத்தை ஈட்ட முடிந்தது. இதற்குள் படிப்பிலும் ஆர்வம்பொங்க லாங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், ஒரே வருடத்தில் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம். காரணம் பணத்தட்டுப்பாடு.

உருக்கொண்ட குறிக்கோள்

மீண்டும் துணி துவைக்கும் தொழிலுக்கே திரும்பினார். இதற்குள் அவருடைய அண்ணன் வால்டர், சிகாகோவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். பெஸி அங்குக் குடிபெயர்ந்தார். அங்குள்ள அழகு நிலையத்தில் நகங்களை அழகுபடுத்தும் பணியில் சேர்ந்தார்.

இந்தக் காலகட்டத்தில்தான், ‘சிறந்த விமான ஓட்டியாக வேண்டும்’ என்ற குறிக்கோளை அவர் உருவாக்கிக்கொண்டார். பழகுவதற்கு இனிமையானவராக இருந்ததால் சிகாகோவிலுள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பலர் பெஸிக்கு நண்பர்கள் ஆயினர். கறுப்பர் இனத்தவருக்கென்று ஒரு வார இதழை நடத்திவந்த ராபர்ட் அபோட் என்பவர் பெஸியின் விமான ஓட்டிப் பயிற்சிக்கான நிதியை வழங்க ஒப்புக்கொண்டார்.

ஆனால், அடுத்த சிக்கல் தொடங்கியது. அந்தப் பகுதியில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த விமான ஓட்டி யாரும் இல்லை. வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த விமான ஓட்டிகள் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பெஸிக்குப் பயிற்சியளிக்க மறுத்தனர். அப்போது ராபர்ட் அபோட், “நீ பிரான்ஸுக்குச் சென்று விமானப் பயிற்சியை எடுத்துக்கொள். அங்குள்ளவர்கள் நிறவெறியர்கள் அல்ல. தவிர அங்கு உலகப் புகழ்பெற்ற விமான ஓட்டிகள் பலர் உண்டு’’ என்ற யோசனையை முன்வைத்தார்.

கேப்டன் பெஸி

1920-ல் பெஸி, பிரான்ஸை அடைந்தார். அங்கு விமானம் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு அதற்கான உரிமத்தைப் பெற்றார். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பறந்தார். விமான சாகசங்களை அநாயாசமாகச் செய்தார். மீண்டும் ஆகஸ்ட் 1922-ல் நியூயார்க்கை அடைந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஏராளமான ஊடகப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

“எங்கள் இனத்துக்கே நான் ஒரு முன் னோடியாக விளங்கப்போகிறேன். இனி, பல கறுப்பர் இனப் பெண்களும் விமானங்களை ஓட்ட முன்வருவார்கள்’’ என்றார்.

பலவித விமான சாகசக் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். வானில் சாகசங்கள் செய்து அதற்குக் கட்டணம் வசூலித்தார். பணம் சேர்ந்தது. 1923-ல் சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார். உலகின் பல பகுதிகளில் விமான சாகசங்களைச் செய்து அவற்றின் மூலம் நிதி திரட்டலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், இதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே விமான விபத்து ஏற்பட்டது. பெஸியின் உடலில் காயங்கள். மூன்று மாதங்கள் படுத்தபடுக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம்.

இறுதிப் பயணம்

சிகாகோவுக்குத் திரும்பி ஒன்றரை வருடங்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். நன்கொடை யாளர்கள் கிடைத்தார்கள். அதைத் தொடர்ந்து அவர் செய்த வான் சாகச நிகழ்ச்சி களுக்குப் பெருத்த வரவேற்பு. இதன் மூலம் கிடைத்த பணத்தில் இன்னொரு சிறிய விமானத்தை வாங்கினார். “விரைவிலேயே விமான பயிற்சிப் பள்ளியை நான் தொடங்குவேன்’’ என்று தன் தங்கைக்குக் கடிதம் எழுதினார். ஆனால், காலம் அவருக்கு வேறொன்றை வைத்திருந்தது. ஆர்லாண்டோ பகுதிக்குத் தன் விமானத்தில் சென்றார் பெஸி.

அந்த விமானத்தை வில்லியம் வில்லி என்பவர் ஓட்டினார். அவரருகே உட்கார்ந்திருந்தார் பெஸி. கீழே உள்ள பகுதிகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அடுத்த நாள் நடைபெறும் சாகசக் காட்சியில் எந்தெந்த இடங்களில் பாராசூட்டில் குதிக்கலாம் என்று மனத்துள் குறித்துக் கொண்டார். இதற்காக அவர் முன்புறம் குனிந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. 1000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து நேர் செங்குத்தாகக் கீழிறங்கியது. பெஸி தூக்கி எறியப்பட்டார். அவரும் வில்லியம் வில்லியும் இறந்தனர்.

ஒருவிதத்தில் தனது குறிக்கோளை பெஸி அடைந்துவிட்டார். விமானம் ஓட்டும் பயிற்சியின் சரித்திரப் பக்கங்களில் அவரது பெயர் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

SCROLL FOR NEXT