பெண் இன்று

விடைபெறும் 2018: நிகழ்வுகள்

ரேணுகா

ஒவ்வொரு நாளும் செய்திகளைப் படிக்கும்போது, பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம்தான் மேலேழுகிறது. பெண்களை பல்வேறு தடைகள் சூழ்ந்துகொண்டாலும் அவற்றைத் தகர்க்க இந்த ஆண்டு பெண்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் ஏராளம். அவற்றில் சில...

ஆயுதமாக மாறிய பிரச்சாரம்

பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்தும் அதற்குக் காரணமானவர்கள் குறித்தும் #Metoo என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். 2006-ல்  அமெரிக்காவில் தொடங்கிய இப்பிரச்சாரம் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான்  முன்னெடுக்கப்பட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தொடங்கி பாடகி சின்மயி, கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை எனப் பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டலை வெளியே சொல்ல இந்தப் பிரச்சாரம் வாய்ப்பாக அமைந்தது.

விவசாயத்தில் பெண்கள்

மத்திய அரசு மேற்கொண்ட 2017- 18 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில் விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. விவசாயக் கூலித் தொழிலாளி, விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில்முனைவோர் எனப் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகக் கூலி வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஆபத்துக்கு உதவும் ‘ஆப்’

பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட ‘kavalan dial 100’  மற்றும் ‘kavalan sos’ ஆகிய இரண்டு கைபேசி செயலிகளைத் தமிழகக் காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஆபத்தான நேரத்தில் இந்தச் செயலியின் பொத்தானை அழுத்தினால் உதவி தேவைப்படும் பெண்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆபத்து என்பது கைபேசியின் கேமரா மூலம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களில் தலைமைக் காவல் கட்டுபாட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும்.

தகவல் பெற்ற சில நிமிடங்களிலேயே காவல் துறையினரின் உதவியைப் பெற முடியும்.  அதேபோல் shake2safety என்ற மற்றொரு செயலியும் பெண்களின் பாதுகாப்புக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இந்தியத் தொழில் வர்த்தக சபையின் பெண்கள் பிரிவு சார்பில் ‘WOW’  (wellness for women) என்ற செயலியும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 

தொழில்நுட்பத்தில் சாதித்தவர்கள்

தொழில்நுட்பத்தில் சக்தி வாய்ந்த 50 பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றனர். சிஸ்கோ  நிறுவனத்தின் தொழில்நுட்ப முதன்மை அதிகாரி பத்ம வாரியர், உபர் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் கோமல் மங்க்தானி, கான்ஃப்ளுயன்ட் நிறுவனத்தைத் தொடங்கிய நேகா, ட்ராபிரிட்ஜ் நிறுவனர் காமாட்சி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

தனிமையிலிருந்து விடுதலை

மாதவிடாய் நாட்களில் பெண்களைத் தனிமைப்படுத்தினால் மூன்று மாதச் சிறையும், மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என நோபள நாட்டு இடது முன்னணி அரசு சட்டம் இயற்றியுள்ளது. நோபள நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டிலிருந்து தனிமைப்படுத்தி ‘சௌபாடி’ என்ற தனியிடத்தில் தங்கவைக்கப்பார்கள். அவ்வாறு  தங்கவைக்கப்பட்ட ஒரு சிறுமி பாம்பு கடித்து இறந்தார். இந்நிலையில் இந்த மூடப்பழக்கத்துக்குத் தடை விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு இச்சட்டத்தை இயற்றியுள்ளது.

பெண்களின் உலக சாகசம்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான  ஐ.என்.எஸ்.வி. தாரணி படகில் லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில் தலைமைக் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி.சுவாதி, லெப்டினென்ட்கள் எஸ்.விஜயாதேவி, பி. ஜஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் அடங்கிய மகளிர் குழு கடல் வழியாக 254 நாட்கள் பயணம் மேற்கொண்டது. ஐந்து நாடுகளுக்குச் சென்றுவிட்டு கடந்த மே மாதம்  கோவாவை இவர்கள் வந்தடைந்தனர்.  இந்தியக் கடற்படைக் குழுவைச் சேர்ந்த பெண்களின் இந்த சாகசப் பயணம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

நாப்கினுக்கு வரி இல்லை

சானிட்டரி நாப்கின்களுக்கு  மத்திய அரசு விதித்திருந்த  ஜிஎஸ்டி வரி பல எதிர்ப்புகளுக்கிடையே  கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீக்கப்பட்டது.  கடந்த ஆண்டு நடந்த  மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில் சானிட்டரி நாப்கின்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்திருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள், அரசிகள் கட்சிகள் சார்பில் சானிட்டரி நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி போராட்டங்கள், கையெழுத்து பிரச்சாரம் ஆகியவை நடத்தப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின் மீதான 12 சதவீத வரி நீக்கப்பட்டது.

nallajpg

நல்ல தொடக்கம்

மகப்பேறு விடுமுறையை 12 வாரத்திலிருந்து 26 வாரமாக 2017-ல் மத்திய அரசு அதிகரித்தது. இந்தப் பேறுகால விடுமுறையை முறையாக வழங்கும் நிறுவனங்களுக்கு, மகப்பேறு விடுப்பில் உள்ள பெண்களுக்கான ஏழு வாரச் சம்பளத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசே வழங்கிவிடும் என்று மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார். இந்தச் சலுகை 15 ஆயிரத்துக்கும் அதிகமாக மாதச் சம்பளம் வாங்கும் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட தடை

சவுதி அரேபிய நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு 1957-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்குவதற்கான  ஒப்புதலை சவுதி மன்னர் சல்மான் பிறப்பித்தார். இதையடுத்து  பெண்கள் கார் ஓட்டுவதற்கான வழிமுறைகள் குறித்த அறிக்கையைச் சமர்பிக்கத்  தனி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சவுதிப் பெண்கள் கார் ஓட்ட உரிமம் எடுத்து கார் ஓட்டிவருகின்றனர்.

களம் கண்ட மகளிர்

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கியமான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டம், சேலம் எட்டுவழிச் சாலை, டாஸ்மாக் கடைகளை அகற்றுவது, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அணிதிரள்வது என மாநிலம் முழுவதும் நடந்த போராட்டங்களில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது. இரவு, பகல் பாராது போராட்டக் களத்தில் பெண்கள் கலந்துகொண்டது போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியது. மக்களைப் பாதிக்கும் அரசின் முடிவுகளுக்கு எதிராகச் சிறைச்சாலை செல்லவும் தயங்க மாட்டோம் என்பதையே இந்தப் போராட்டங்களின் மூலமாகப் பெண்கள் உணர்த்தியிருக்கின்றனர்.

பறக்கும் பெண்கள்

உலகிலேயே பெண் விமானிகள் அதிகம் உள்ள நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. உலகில்  உள்ள மொத்த விமானிகளில் 5.4 சதவீதத்தினர் பெண்கள். ஆனால், இந்தியாவில் 8,797 விமானிகளில் 1092 பேர் பெண்கள். இவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர்.

SCROLL FOR NEXT