புதுவிதி படைக்க முயன்றிருக் கும் அனு சத்யா, ‘நான்காம் விதி’ குறும்படத்தை அதற்கான களமாகத் தேர்ந்தெடுத் திருக்கிறார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் விஸ்.காம். முடித்த கையோடு இயக்குநராகும் கனவில் இருந்திருக்கிறார் அனு. கல்லூரிப் படிப்பின்போது வார இதழ் ஒன்றின் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சியில் சேர்ந்து பணியாற்றியது இவரது கனவுக்கு மெருகேறியது.
தமிழ்த் திரை இயக்குநர்களிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுச் சென்றவருக்கு, புதுப் புது உலகங்கள் புலனாயின. “சின்ன சின்ன சினிமா கம்பெனிகளில் உதவி இயக்குநரா இருந்திருக்கேன். சில நேரம் ஸ்டோரி டிஸ்கஷனில் கதையைத் தவிர மத்த எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணுவாங்க. சிலர் நம்மை எதுவுமே பேச விடமாட்டாங்க. ஏதாவது சொன்னாலும் ‘நீயெல்லாம் கருத்து சொல்றியா’ அப்படிங்கற மாதிரி நக்கலா சிரிப்பாங்க.
சில இடத்துல ஒரு நாள்கூடத் தாக்குப்பிடிக்க முடியாம தெறிச்சி ஓடிவந்திருக்கேன்” என்று சொல்லும் அனு, இயக்குநர் முருகதாஸிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றிருக்கிறார். குறும்படம், ஆவணப்படம் இப்படி ஏதாவதொரு அடையாளத்துடன் வாய்ப்பு தேடுவது நல்லது என அவர் சொல்ல, தேடுதல் வேட்டைக்கு நடுவே 2016-ல் ‘ஏங்குகிறேன்’ என்ற குறும்படத்தை அனு இயக்கினார்.
திரையில் பெண்கள்
ரஷ்யன் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்ட அந்தக் குறும்படம் அந்த ஆண்டுக்கான சிறந்த குறும்படமாகத் தேர்வானதில் அனுவுக்கு மகிழ்ச்சி. “அதிக எண்ணிக்கையில் குறும்படங்கள் எடுக்கும்போதுதான் நீங்கள் மிக அதிகமாகக் கற்றுக்கொள்வீர்கள்னு சொன்ன கிறிஸ்டோபர் நோலன் என்னோட ரோல் மாடல். அதனால சினிமாவில் வாய்ப்பு தேடிக்கிட்டே ‘நான்காம் விதி’ குறும்படத்தையும் எடுத்துமுடிச்சிட்டேன்.
கனவை மையப்படுத்தி ஃபேண்டஸி படமா எடுக்கத்தான் நினைச்சேன். ஆனா, போகப்போக அதுக்குள்ள நிறைய விஷயங்கள் சேர்ந்துடுச்சு. இப்போ காதலின் பெயரால் பெண்கள் கொல்லப்படுவது அதிகரிச்சிக்கிட்டு வருது. தவிர, யாராவது கொல்லப் பட்டுக் கிடந்தாலும் இந்தச் சமூகம் வேடிக்கை மட்டுமே பார்க்குது. இதையெல்லாம் ஒரே கயித்துல சேர்த்து முடிச்சு போட்டிருக்கேன்” எனச் சிரிக்கிறார் அனு.
திரைத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதையும் திரைப்படங்களில் பெண் கதாபாத்தி ரங்களுக்குப் போதுமான முக்கியத் துவம் தரப்படாமல் இருப்பதையும் வருத்தத்துடன் பகிர்ந்துகொள்ளும் அனு சத்யா, பொருளாதாரத் தேவை யைச் சமாளிக்க புகைப்படக் கலைஞர், பகுதிநேர நிருபர் எனக் கிடைக்கிற வேலைகளைச் செய்துவருகிறார். தற்போது ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவரும் அனுவுக்கு ஒரே பாணியிலான படங்களைத் தவிர்த்துப் புதிய கோணத்தில் படம் இயக்குவதே லட்சியமாம்!