நுண்கலைகளே முக்தியை அடை வதற்கான எளிய வழி எனச் சொல்லும் வாணி காயத்ரி பாலா, தானும் அந்த வழியில் பயணப்பட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஒப்பற்ற குரு எனப் போற்றப்படும் கே.என். தண்டாயுதபாணி பிள்ளையின் நேரடி சிஷ்யைகளான ஷியாமளா, சூர்யகலா இருவரிடமும் நடனம் பயின்றதைப் பெரும் பாக்கியமாக இவர் குறிப்பிடுகிறார். பாலக்காடு எஸ்.வி.ரமணி, குற்றாலம் செல்வம் இருவரிடமும் நட்டுவாங்கம் பயின்றிருக்கிறார். மீனாட்சி, லட்சுமி இருவரிடம் வீணையைப் பயின்ற வாணி காயத்ரி, ராஜேஸ்வரியிடமிருந்து பாடக் கற்றுக்கொண்டார். நடனம், பாடல், நட்டுவாங்கம் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருக் கிறார். நடனத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர், காதம்பரி, ராமாயணா (2 பகுதிகள்), தாஜ்மகால் போன்ற தலைப்பு களில் வடிவமைத்திருக்கிறார்.
இளம் தலைமுறையினருக்குக் கலையைக் கற்றுத்தரும் நோக்கத்துடன் சென்னையில் ‘வாணி கலாலயா ஹெவன் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ என்னும் பள்ளியை இவர் நடத்திவருகிறார். இதுவரை 185 உருப்படிகளுக்கு மேல் நடனம் வடிவமைத்தி ருக்கிறார். தன்னிடம் பயிற்சிபெற்ற மாணவர்களின் அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடன குருக்கள் பலரும் தனது நடன வடிவமைப்பைப் புகழ்ந்திருப்பதாக வாணி காயத்ரி குறிப்பிடுகிறார். தெளிந்த நீரோடை போன்ற இவரது சொற்கட்டும் பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.
மகாபலிபுரம் நாட்டியத் திருவிழா, தஞ்சையில் நடைபெற்ற ராஜராஜேஸ்வரம் 1000, சித்திரைத் திருவிழா போன்ற முக்கியமான நாட்டிய நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றிருக்கிறார். நாட்டியாஞ்சலி விழாக்களிலும் கோயில்களிலும் பங்கேற்றிருக்கும் வாணி காயத்ரியின் இசைப் பணியைப் பாராட்டி நாட்டியகலா சூடாமணி, நாட்டிய கலை சிகரம், நாட்டிய கலை அரசி, நர்த்தன சுடரொளி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலக கின்னஸ் சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் புத்தகம் உள்ளிட்ட பல சாதனைப் புத்தகங்களிலும் இவரது சாதனை இடம்பெற்றிருக்கிறது. நடனம் பயில்கிறவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் ‘ஒற்றைக்கை முத்திரைகளும் பயன்பாடுகளும்’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
தாயே குரு
மீன் குஞ்சுக்கு யாரும் நீந்துவதற்குப் பயிற்சியளிப்பதில்லை. வாணி காயத்ரியின் மகளான நீரஜா, அம்மாவையே குருவாகப் பெறும் பேறுபெற்றவர். ஆறு மாதக் குழந்தை தவழ்வது இயல்பு. ஆனால், நீரஜாவோ அப்போதிலிருந்தே நடனப் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அக்டோபர் மாதத்தில் அரங்கேற்றம் நடத்திய நீரஜாவுக்கு அது நூறாவது மேடை என்பதே அவரது திறமைக்குச் சான்று. சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்ற நாட்டியகலா சிகாமணி, நாட்டிய பத்மம் நந்தினி ரமணி, சங்கீத நாடக அகாடமியின் விருதுபெற்ற கலைமாமணி ஹேரம்பநாதன் இருவரும் தனது அரங்கேற்றத்தில் முன்னிலை வகித்து வாழ்த்தியதைப் பெரும்பேறாகக் கருதுகிறார் எட்டு வயதாகும் நீரஜா. எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது ‘சம்பவாமி யுகே யுகே’, ‘தசாவதாரம்’ ஆகிய இரண்டு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நீரஜாவின் முதல் மேடை அனுபவம். தொடர்ந்து பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளில் திறமையை வெளிப்படுத்திய நீரஜா, 2017-ல் ‘பரதம் 5000’ என்ற நிகழ்ச்சிக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். நீரஜா வென்றிருக்கும் விருதுகள், பங்கேற்ற நிகழ்ச்சிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. குருவும் சிஷ்யையும் இணைந்து அபிநயம் பிடிக்க, மார்கழியின் மாலைப் பொழுது ஒளிகூடுகிறது.