பெண் இன்று

முகங்கள்: தன்னம்பிக்கை இசை

எஸ்.கோபு

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைப்பிடிக்கும்; எழுந்து நடந்தால் இமயமும் உனக்கு வழி கொடுக்கும், என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு உருவம் கொடுத்துள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த  சக்திஸ்ரீ. பெயரில் மட்டுமல்ல, மனத்திலும் சக்தி கொண்டவராகத் தனது உடல் குறைபாட்டைப் போராடி வென்றுவருகிறார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்துவரும் சக்திஸ்ரீ (24), பிறக்கும்போது மற்ற குழந்தைகளைப் போல் சராசரியான எடையில்லை. இரண்டு வயதில் செரிபிரல் பால்சி (cerebral palsy) என்ற மூளை முடக்குவாதக் குறைபாடு ஏற்பட்டது. இதனால்  இரு கால்கள், வலது கை, இடது கையின் மூன்று விரல்கள் ஆகியவை முற்றிலும் செயலிழந்துவிட்டன. இடது கையின் ஆள்காட்டி விரலையும்  பெருவிரலையும் மட்டுமே இவரால் இயக்க முடியும்.

அதுவும் பொருட்களைப் பிடிக்க முடியாது. பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும்  குணமாகவில்லை. இன்றுவரை  தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சக்திஸ்ரீயால் பிறர் துணையின்றி இயங்க முடியாது.

‘குறை உடலில்தானே. உள்ளம் திடமாகத்தானே இருக்கிறது. கால்களால் எழுந்து நிற்க முடியாது; ஆனால், கல்வியால் உயர்ந்து நிற்க முடியும்’ என்ற மன எழுச்சி இவரை வீட்டிலிருந்தபடியே படிக்கத் தூண்டியது. இன்று  பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.

இவருடைய பெற்றோர், விரல்களின் இயக்கத்துக்காக வாங்கித்தந்த கீ-போர்டைப் பயிற்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் இசை கற்க வேண்டும் என்ற முயற்சியில் பழகத் தொடங்கினார். அதில் அவர் காட்டிய ஈடுபாடு, முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது பாடல்களை

கீ-போர்டில்  இருவிரல்கள் மூலம் இசைத்து  அசத்துகிறார். இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகுச் சிறிது தொலைவு மட்டுமே மற்றவர் உதவியுடன் நடக்க தொடங்கியிருக்கிறார்.

“அனைத்து விரல்களும் நன்றாக இருப்பவர்களே கீ-போர்டு வாசிக்கக் கற்றுக்கொள்ளச் சிரமப்படும்போது எனது நிலை மிகவும் வேதனையாக இருந்தது. சில நேரம் விரல்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். ஆனால்,

கீ-போர்டு வாசிக்கக் கற்றுக்கொண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் முன் அவரது பாடல்களை இசைக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் முன் வலியைத் தாங்கிக் கொண்டு ஆறு ஆண்டுகளாகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன்.

பொள்ளாச்சியில் நடந்த சர்வதேச பலூன் திருவிழா, தனியார் வானொலியின் நேரலை நிகழ்ச்சி உட்படப் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் கீ- போர்டு வாசித்திருக்கிறேன்” என்று சொல்கிறார் சக்திஸ்ரீ. கீ-போர்டின் முன் அமர்ந்து இரு விரல்களால்  வாசிக்க, அந்த அறை இசையால் ஆசீர்வதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT